பல்லேகலை ரக்பி மைதானத்தில் நடைபெற்ற 73ஆவது ‘பிரெட்பி’ (Bradby) முதல் பாக போட்டியில் 22-17 என்ற புள்ளிகள் அடிப்படையில் திரித்துவக் கல்லூரியை வென்று, ‘பிரெட்பி’ கிண்ணத்தில் முன்னிலை வகிப்பதோடு, சிங்கர் லீக் கிண்ணத்தையும் கொழும்பு ரோயல் கல்லூரி சுவீகரித்தது.

அலை மோதிய கூட்டத்திற்கு மத்தியில் ஆரம்பித்த இப்போட்டியில், விறுவிறுப்பான 80 நிமிடங்களின் பின்னர் ரோயல் கல்லூரி வெற்றியை தமதாக்கிக்கொண்டது. சிங்கர் லீக் கிண்ணத்தை 30 வருடத்திற்கு பின்னர் வெற்றிகொள்ளக் காத்திருந்த திரித்துவக் கல்லூரியின் கனவுகள் 80 நிமிட முடிவில் 5 புள்ளிகள் வித்தியாசத்தினால் சிதைக்கப்பட்டது.

போட்டி ஆரம்பித்ததில் இருந்து இரண்டு அணிகளின் முன் வரிசை வீரர்களும் பந்தை முன்னாள் நகர்த்துவதற்கு சிறப்பாக செயற்பட்டனர். இரண்டு அணிகளின் வீரர்களும் உக்கிரமாக விளையாடினாலும், திரித்துவக் கல்லூரியே முதல் புள்ளியைப் பெற்றுக்கொண்டது. ரோயல் கல்லூரி அணியின் 22 மீட்டர் எல்லையினுள் பந்தை சிறப்பாக பரிமாற்றம் செய்த திரித்துவக் கல்லூரி, ரஷென் பண்டாரநாயக்க மூலமாக மைதானத்தின் ஓரத்தில் முதலாவது ட்ரையை வைத்தது. திரித்துவக் கல்லூரியின் சிறப்பான பந்து பரிமாற்றலுக்கு கூலியாக இந்த ட்ரையைக் கூறலாம். லஷென் விஜேசூரிய கடினமான கொன்வெர்சனை தவறவிட்டார். (திரித்துவக் கல்லூரி 05-00 ரோயல் கல்லூரி)

இதற்கு பதிலடியாக ரோயல் கல்லூரியானது தனது ப்ரொப் நிலை வீரரான இமந்த கிருஷான் மூலம் ட்ரை வைத்தது புள்ளியை சமன் செய்தது. ரோயல் அணியின் உப தலைவர் மொகமட் பெரோஸ் ரோயல் அணியை எதிரணியின் கோட்டைக்குள் எடுத்து சென்றார். ஒரு சில கட்டங்களின் பின்னர் கிருஷான் ட்ரை வைத்தார். கொன்வெர்சனை சிறப்பாக உதைத்த மொகமட் ஷாகிர் ரோயல் அணியை 2 புள்ளிகள் வித்தியாசத்தால் முன்னிலைக்கு கொண்டு சென்றார். (திரித்துவக் கல்லூரி 05-07 ரோயல் கல்லூரி)

சில நிமிடங்களின் பின்னர் திரித்துவக் கல்லூரி வீரர் அபாயகரமான முறையில் ரோயல் கல்லூரி வீரரைத் தடுத்ததால், ரோயல் கல்லூரி அணிக்கு பெனால்டி வாய்ப்பு வழங்கப்பட்டது. 25 மீட்டர் தொலைவில் இருந்து கம்பத்தினை நோக்கி உதைத்த மொகமட் ஷாகிர், 3 புள்ளிகளை ரோயல் கல்லூரி அணிக்கு பெற்றுக்கொடுத்தார். (திரித்துவக் கல்லூரி 05-10 ரோயல் கல்லூரி)

திரித்துவக் கல்லூரிக்கு பல வாய்ப்புகள்  கிடைத்தாலும் சில தவறுகளினால் அவ்வணி புள்ளிகளைப் பெறத்தவறியது.

முதல் பாதி : திரித்துவக் கல்லூரி 05 – 10 ரோயல் கல்லூரி

இரண்டாம் பாதியில் ஆரம்பத்தில் திரித்துவக் கல்லூரியானது, ரோயல் கல்லூரி அணிக்கு அழுத்தம் கொடுத்து இரண்டாவது ட்ரையை வைத்தது. அதிரடியாகப் பந்தை முன் வரிசை வீரர்கள் முன் நகர்த்த, 5 மீட்டர் கோட்டினுள் பந்தை பெற்றுக்கொண்ட லஷென் விஜேசூரிய ட்ரை கோட்டினைக் கடந்தார். அவரே கொன்வெர்சனையும் இலகுவாக உதைத்து திரித்துவக் கல்லூரிக்கு மீண்டும் ஒரு முறை முன்னிலையை பெற்றுக் கொடுத்தார். (திரித்துவக் கல்லூரி 12-10 ரோயல் கல்லூரி)

திரித்துவக் கல்லூரி போட்டியில் ஆதிக்கம் செலுத்தி வந்தாலும், ரோயல் கல்லூரி தனது பலம் மிக்க ரோலிங் மோல் மூலம் திரித்துவக் கல்லூரியின் தடையை இலகுவாகத் தாண்டியது. ரோயல் அணியின் ப்ரொப் நிலை வீரரான அஷென் பெர்னாண்டோ ரோலிங் மோல் மூலமாக தொடர்ந்து இரண்டு ட்ரைகளை வைத்து திரித்துவக் கல்லூரியை நிலைகுலையச் செய்தார். சிறிய நேரத்தில் இரண்டு ட்ரைகளை வைத்து ரோயல் கல்லூரி அணி போட்டியில் முன்னிலை பெற்றது. மொகமட் ஷாகிர் ஒரு கொன்வெர்சனை வெற்றிகரமாக உதைத்தார். (திரித்துவக் கல்லூரி 12-22 ரோயல் கல்லூரி)

தொடர்ந்து திரித்துவக் கல்லூரியானது புள்ளிகளைப் பெற கடினமாக முயற்சி செய்தபோதும், மேலதிகமாக ஒரே ஒரு ட்ரை மட்டுமே அதனால் பெற முடிந்தது. ரோயல் கல்லூரி அணியின் 22 மீட்டர் எல்லையினுள் பெனால்டி ஒன்றைத் திரித்துவக் கல்லூரி பெற்றுக்கொண்டது. பெனால்டியை உடனடியாக எடுத்து சென்ற அணுக போயகொட பந்தை வரன் வீரகோனிற்கு பரிமாற்றம் செய்ய, வீரகோன் ட்ரை கோட்டைத் தாண்டினார். லஷென் விஜேசூரிய முக்கியமான கொன்வெர்சனை தவறவிட்டார். (திரித்துவக் கல்லூரி 17-22 ரோயல் கல்லூரி)

திரித்துவக் கல்லூரி தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திய பொழுதும், ரோயல் கல்லூரி அணியின் தடையைத் தகர்த்தி அவர்களால் புள்ளிகளைப் பெற முடியவில்லை. மறு முனையில் ரோயல் கல்லூரி நிதானமாகவும், பொறுப்பாகவும் விளையாடி வெற்றியை தன் பக்கம் ஈர்த்துக்கொண்டது.

3 மாதங்களாக நடைபெற்ற பாடசாலைகளுக்கிடையிலான ரக்பி லீக் போட்டிகள் முடிவைக் கண்டுள்ளதோடு, ரோயல் கல்லூரி அணி ஒரு போட்டியிலும் மட்டும் தோல்வியுற்று சிங்கர் லீக் கிண்ணத்தை சுவீகரித்துக்கொண்டது. ஒரு அணியாக சிறப்பாக செயற்பட்ட ரோயல் கல்லூரியானது இரண்டு வருடங்களின் பின்னர் மீண்டும் லீக் சம்பியன் பட்டத்தை சுவீகரித்தமை குறிப்பிடத்தக்கது.

முழு நேரம் : திரித்துவக் கல்லூரி 17 – 22 ரோயல் கல்லூரி

ThePapare.com இன் போட்டியின் சிறந்த வீரர் – துலைப் ஹசன் (ரோயல் கல்லூரி)

புள்ளிகள் பெற்றோர்

ரோயல் கல்லூரி (3T, 2C, 1P) – அஷென் பெர்னாண்டோ (2T), இமந்த கிருஷான் (1T), மொகமட் ஷாகிர் (2C 1P)

திரித்துவக் கல்லூரி (3T,1C) ரஷென் பண்டாரநாயக்க (1T), வர்றன் வீரகோன் (1T), லஷென் விஜேசூரிய (1T 1C)