புனித பத்திரிசியார், டி மெசனொட் மோதல் சமநிலையில் நிறைவு

449

ThePapare.com இன் அனுசரணையில் நடைபெறும் ThePapare கால்பந்து சம்பியன்ஷிப் தொடரில் இரண்டாவது வாரத்தின் கடைசிப்போட்டியாக, B குழுவில் இடம்பெற்றிருந்த கந்தானை டி மெசனொட் கல்லூரி, யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரி அணிகளுக்கிடையிலான போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் நிறைவிற்கு வந்தது.

யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டாரங்கில் நேற்று (23) இடம்பெற்ற இப்போட்டியில்,

இம்முறை FA கிண்ண தொடருக்கு அனுசரணை வழங்கும் எபோனி ஹோல்டிங்ஸ்

தமது முதல் வார போட்டியில் கம்பஹா பண்டாரநாயக்கா கல்லூரியை எதிர்கொண்ட புனித பத்திரிசியார் கல்லூரி 8-0 என்ற கோல்கள் கணக்கில் அபார வெற்றியினைப் பதிவு செய்திருந்தது. மறுபக்கம்  கந்தானை டி மெசனொட் கல்லூரி அணியினர் கட்டுனெரிய புனித செபஸ்ரியன்ஸ் கல்லூரியை 4-1 என்ற கோல்கள் அடிப்படையில் வெற்றிபெற்றிருந்தது.

போட்டியின் ஆரம்பத்திலேயே இரு அணியினரும் விரைவாக எதிரணியின் கோல் பரப்பினை ஆக்கிரமித்து, பின்கள வீரர்களுக்கு பலத்த அழுத்தத்தினை கொடுத்தனர்.

3ஆவது நிமிடத்தில் சாந்தன் கோலினை நோக்கி உதைந்த பந்தினை மெசனொட் அணியின் கோல்காப்பாளர் ஜெயன் மலிந்த தடுத்தார்.

அடுத்த நிமிடத்திலேயே ஒஷான் மதுசங்கவினது முயற்சியினை கோல்காப்பாளர் கியூமன் சிறப்பாக தடுத்தார்.

தொடர்ந்து பந்தினை தமது கட்டுப்பாட்டில் எடுத்த பத்திரிசியார் வீரர்கள் சாந்தன் மூலமாக அடுத்தடுத்து  கோலை நோக்கி பந்துகளை உதைந்தபோதும் கோல்காப்பாளர் ஜெயன் மலிந்த தொடர்ந்தும் சிறப்பாக அம்முயற்சிகளை முறியடித்தார்.

26 ஆவது நிமிடத்தில் கொழும்பு தரப்பினரிற்கு சிறந்த வாய்ப்பு கிடைத்தது, அவிஷ்க டிசான் உள்ளனுப்பிய மிகச் சிறந்த பந்தினை ஏனைய முன்கள வீரர்கள் கோலாக்க தவறினர்.

ஹெயின் உள்ளனுப்பிய பந்து பின்கள வீரர்களின் காலில் பட்டு வெளியேறியது. 31 ஆவது நிமிடத்தில் இடது பக்கத்திலிருந்து உள்ளனுப்பபப்பட்ட பந்தினை, மெசனொட் கல்லூரியின் பின்கள வீரர்கள் தலையால் முட்டி வெளியேற்ற முற்படுகையில் பந்தினை பெற்ற சாந்தன் கோலினை நோக்கி உதைந்தார் எனினும் பந்து துரதிஷ்டவசமாக கம்பத்தில் பட்டு வெளியேறியது.  

யாழ் வீரர்கள் கோல் முயற்சிகளை மேற்கொண்ட போதும், கொழும்பு தரப்பினர் தடுப்பாட்டத்திலேயே அதிக கவனஞ்செலுத்தினர்.

மெசனொட் அணியின் பிரமுதித்த பெர்னான்டோவின் இரு முயற்சிகளையும் கோல்காப்பாளர் கீயூமன் முறியடித்தார்.

39 ஆவது நிமிடத்தில் ஹெயின்ஸ் பத்திரிசியார் கல்லூரிக்கு கிடைத்த ப்ரீ கிக்கினை உதைய, பந்து மீண்டுமொருமுறை கோல்கம்பத்தில் பட்டு வெளியேறியது.

இறுதி 5 நிமிடங்களில் பிரமுதித்த பெர்னான்டோ மூலமாக இரு வாய்ப்புக்கள் கிடைத்த போதும் அவற்றை சிறப்பாக நிறைவு செய்ய முடியவில்லை.

முதல் பாதியின் இறுதி நிமிடத்தில் பத்திரிசியார் அணியின் டிலக்சனிற்கு இலகுவான கோல் வாய்ப்பு கிடைத்த போதும் கோல்காப்பாளரின் கைகளை நோக்கி உதைந்து ஏமாற்றினார்.

முதல் பாதி: புனித பத்திரிசியார் கல்லூரி 0 – 0  டி மெசனொட் கல்லூரி

இரண்டாவது பாதியில் முதல் பாதிக்கு மாறாக, பத்திரிசியார் கோல் பரப்பினை டி மெசனொட் வீரர்கள் ஆக்கிரமித்தனர். எனினும் வெகு நேரம் அந்நிலை நீடிக்கவில்லை.

சுபர் சன் – நியு யங்ஸ் இடையிலான ஆரம்பப் போட்டி சமநிலையில் நிறைவு

இரண்டாவது பாதியின் 8 ஆவது நிமிடத்தில் இடது பக்கத்திலிருந்த அபீசனிடமிருந்து பந்தைப் பெற்ற பவிராஜ் பின்கள வீரர்களை தாண்டி பந்தை எடுத்துச் சென்று லாவகமாக கோலாக்கினார்.

அபீசன் கோலினை நோக்கி உதைந்த பந்து மயிரிழையில் கம்பத்திற்கு மேலால் வெளியேறியது.

64 ஆவது நிமிடத்தில் அவிஷ்க திசானினது முயற்சியை கோல்காப்பாளர் கியூமன் தடுத்தார்.

கொழும்பு வீரர்களுக்கு கிடைத்த ப்ரீ கிக்கினை பிரமோத் உதைய அதனை, அவிஷ்க திசான் ஹெடர் மூலம் கோலாக்குவதற்கு முயற்சித்தார். எனினும் பந்து தலையில் பட்டு வெளியேறியது.

76 ஆவது நிமிடத்தில் பெனால்டி எல்லைக்கு அருகிலிருந்து சாந்தன் கோலினை நோக்கி வேகமாக உதைந்தார், பந்து மீண்டுமொருமுறை கம்பத்தில் பட்டு வெளியேறியது.

போட்டி நிறைவடைவதற்கு வெறுமனே 9 நிமிடங்கள் இருக்கையில் பிரமுடித்த பெர்னான்டோ, பத்திரிசியார் பெனால்டி எல்லைக்குள் பந்தை உட் செலுத்தினார். பந்தை பியன் வெனு தலையால் முட்டி வெளியேற்ற முற்படுகையில் பந்து தலையில் பட்டு நேரடியாக கோல் கம்பத்தினுள் சென்றது.

கிடைக்கப்பெற்ற அந்த ஒவ்ன் கோல் (Own goal) மூலம், கோல் கணக்கினை கொழுப்பு வீரர்கள் சமநிலை செய்தனர்.

பந்தை தொடர்ந்தும் கட்டுப்படுத்திய பத்திரிசியார் வீரர்கள் ஹெயின்ஸ் மூலமாக கோல் முயற்சிகளை மேற்கொண்ட போதும், சாதகமாக நிறைவுசெய்யப்படவில்லை.

முழு நேரம்: புனித பத்திரிசியார் கல்லூரி 1 – 1 டி மெசனொட் கல்லூரி

Thepapare.comஇன் ஆட்டநாயகன் – பிரமுடித்த பெர்னான்டோ (டி மெசனொட் கல்லூரி, கந்தானை)

கோல் பெற்றவர்கள்

புனித பத்திரிசியார் கல்லூரி, யாழ்ப்பாணம் – பவிராஜ் 53’
டி மெசனொட் கல்லூரி, கந்தானை – பியன் வெனு 81′ (ஓவ்ன் கோல்)

மஞ்சள் அட்டை

டி மெசனொட் கல்லூரி, கந்தானை – டில்றுக் ஷானுக 8′

>> மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க <<