நியூசிலாந்து எதிராக சாதனை படைத்த திசர பெரேரா தரவரிசையில் அதிரடி முன்னேற்றம்

2224

நியூசிலாந்து அணியுடனான கடைசி இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் தனியொரு வீரராக துடுப்பாட்டத்தில் ருத்ரதாண்டவம் ஆடி நியூசிலாந்து பந்துவீச்சாளர்களை வெளுத்து வாங்கி சாதனைகள் பலவற்றை நிலைநாட்டிய திசர பெரேரா, ஐ.சி.சியின் ஒருநாள் வீரர்களுக்கான தரவரிசையில் அசுர முன்னேறத்தைக் கண்டுள்ளார்.

துடுப்பாட்ட உத்வேகத்துடன் நியூசிலாந்துக்கு சவால் கொடுக்குமா இலங்கை?

சுற்றுலா நியூசிலாந்து மற்றும் இலங்கை …..

அத்துடன், இத்தொடரில் இலங்கை சார்பாக ஓட்டங்களைக் குவித்த நிரோஷன் திக்வெல்ல, குசல் ஜனித் பெரேரா, தனுஷ்க குணதிலக்க ஆகியோரும் முன்னேறியுள்ளனர்.

இலங்கைநியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் சமீபத்தில் முடிவடைந்தது. இதில் நியூசிலாந்து அணி 3-0 என இலங்கையை வெள்ளையடிப்பு செய்தது. இந்த நிலையில், சர்வதேச கிரிக்கெட் பேரவை ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசைப் பட்டியலை நேற்று (09) வெளியிட்டுள்ளது.

நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் 57 பந்துகளில் சதம் கடந்து, மொத்தம் 13 சிக்ஸர்கள், 8 பௌண்டரிகள் உள்ளடங்கலாக 140 ஓட்டங்களையும், மூன்றாவது ஒருநாள் போட்டியில் 63 பந்துகளில் 80 ஒட்டங்களையும் குவித்து, ஒருநாள் அரங்கில் தனது சிறந்த துடுப்பாட்ட திறமையை வெளிப்படுத்தியிருந்த இலங்கை அணியின் சலதுறை ஆட்டக்காரரான திசர பெரேரா, நீண்ட இடைவெளியின் பிறகு .சி.சியின் ஒருநாள் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில் முன்னேற்றம் கண்டுள்ளார்.

.சி.சி வெளியிட்ட ஒருநாள் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில், திசர பெரேரா 22 இடங்கள் முன்னேறி 65ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். குறித்த தொடரில் 240 ஓட்டங்களை ஒட்டுமொத்தமாகக் குவித்த அவர், .சி.சியின் துடுப்பாட்ட வீரர்களுக்கான புள்ளிகள் பட்டியலில் 509 புள்ளிகளைப் பெற்று தனது சிறந்த துடுப்பாட்ட முன்னேற்றத்தைப் பெற்றுக்கொண்டுள்ளார்.

இதேநேரம், இலங்கை அணியின் இளம் ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான தனுஷ்க குணதிலக்க 3 போட்டிகளிலும் விளையாடி (43, 71 மற்றும் 31 ஓட்டங்கள்) ஓரளவு துடுப்பாட்டத்தில் பிரகாசித்த காரணத்தால், துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில் 11 இடங்கள் முன்னேறி, 82ஆவது இடத்தைப் பெற்றுக் கொண்டார்.

மற்றுமொரு ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான நிரோஷன் திக்வெல்ல ஓரிடம் முன்னேறி 26ஆவது இடத்தைப் பெற்றுக்கொள்ள, ஏழு இடங்கள் முன்னேற்றம் கண்ட குசல் ஜனித் பெரேரா 66ஆவது இடத்தையும் பெற்றுக்கொண்டுள்ளார். இலங்கை அணியின் ஏனைய துடுப்பாட்ட வீரர்கள் யாரும் முதல் இருபது இடங்களுக்குள் இல்லை.

நியூசிலாந்துடனான ஒருநாள் தொடரில் 8 விக்கெட்டுக்களைக் கைப்பற்றிய் இலங்கை அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான லசித் மாலிங்க பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் 3 இடங்கள் முன்னேற்றம் பெற்று 46ஆவது இடத்தையும், மணிக்கட்டு சுழல் பந்துவீச்சாளர் லக்ஷதான் சந்தகென் 14 இடங்கள் முன்னேற்றம் கண்டு 124ஆவது இடத்தையும் பெற்றுக்கொண்டுள்ளனர். அதேபோல சகலதுறை வீரர்களுக்கான தரவரிசையில் 11 இடங்கள் உயர்ந்து 127ஆவது இடத்தையும் சந்தகென் பெற்றுக்கொண்டுள்ளார்.

ஒருநாள் அரங்கில் வரலாறு படைத்த திசர பெரேராவின் சாதனைத் துளிகள்

நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான …

இதேநேரம், நியூசிலாந்து அணி சார்பில் பந்துவீச்சில் பிரகாசித்து 8 விக்கெட்டுக்களைக் கைப்பற்றியிருந்த சுழல் பந்துவீச்சாளர் இஷ் சோதி, 26 இடங்கள் முன்னேற்றம் கண்டு 31 ஆவது இடத்தையும், சகலதுறை வீரர்களுக்கான தரவரிசையில் 23 இடங்கள் உயர்ந்து 85ஆவது இடத்தையும் பெற்றுக்கொண்டுள்ளார்.

அத்துடன், 2 போட்டிகளில் மாத்திரம் விளையாடி 6 விக்கெட்டுக்களை கைப்பற்றிய வேகப்பந்துவீச்சாளர் லுக்கி பெர்கியூசன் 12 இடங்கள் முன்னேற்றம் கண்டு பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் அதே 31ஆவது இடத்தை இஷ் சோதியுடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.

இதேவேளை, துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில் விராட் கோஹ்லி முதலிடத்திலும், ரோஹித் சர்மா இரண்டாம் இடத்திலும், ரொஸ் டெய்லர் மூன்றாவது இடத்திலும் உள்ளனர். பந்துவீச்சாளர்கள் பட்டியலில் இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ரா முதலிடத்திலும், ரஷீத் கான் இரண்டாவது இடத்திலும், குல்தீப் யாதவ் மூன்றாமிடத்திலும் உள்ளனர்.

 >>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<