மூத்த கால்பந்து வீரர்களின் தொடர் இறுதிக் கட்டத்தில்

132

இலங்கை சொக்கர் மாஸ்டர்ஸ் சங்கம் (SLSMA) ஏற்பாட்டில் நடத்தப்படும் 40 வயதுக்கு மேற்பட்டோருக்கான (Veterans) திலக் பீரிஸ் சவால் கிண்ண கால்பந்து தொடரின் காலிறுதிப் போட்டிகள் கொழும்பு, கேகாலை மற்றும் பதுள்ளையில் நடைபெறவுள்ளன.  

வெளிப்பகுதியில் இருக்கும் மூத்த வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் இந்த ஆண்டின் போட்டித் தொடர் எட்டு குழுக்களாக பிரிக்கப்பட்டு நடத்தப்படுவதோடு கொழும்பில் இருந்து நான்கு குழுக்கள் எனவும் வெளிப்பகுதி அணிகள் நான்கு குழுக்கள் எனவும் பங்கேற்கின்றன.

கொழும்பின் 25 மூத்த அணிகள் (Veterans teams) 4 குழுக்களாகவும், 19 வெளிப்பகுதி அணிகள் நான்கு குழுக்களாகவும் பிரிக்கப்பட்டன. பரபரப்பான லீக் போட்டிகளை அடுத்து குழுநிலை சம்பியன் அணிகள் காலிறுதியில் ஆட தகுதி பெற்றன.

மூத்த வீரர்களின் கழகங்களுக்கு உள்ள நிதி சுமையை தவிர்க்க போட்டித் தொடரை கொழும்பு மற்றும் வெளிப்பகுதிகளில் நடத்த SLSMA நிறுவனரும் தலைவருமான திலக் பீரிஸ் தலைமையிலான குழு தீர்மானித்தது. இதன் இரு காலிறுதிப் போட்டிகள் வெளிப்பகுதியில் நடத்தப்படவுள்ளன.   

FIFA உலகக் கிண்ண குழு நிலை அணிகள் அறிவிப்பு

ரஷ்யாவில் அடுத்த ஆண்டு நடைபெறும் FIFA…

கொழும்பு பிராந்திய காலிறுதிப் போட்டிகள் குரே பார்க் மைதானத்தில் நடைபெறவுள்ளன. முதல் காலிறுதியில் கொழும்பு மூத்த வீரர்கள் மற்றும் ஒல்ட் பென்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. மாளிகாவத்தை மூத்த அணி,  சௌன்டர்ஸ் மூத்த அணியை இரண்டாவது காலிறுதியில் எதிர்கொள்ளவுள்ளது. இந்த காலிறுதிகளில் வெல்லும் அணிகள் அரையிறுதியில் ஒன்றை ஒன்று எதிர்கொள்ளும்.    

வெளிப்பிரதேசத்தின் போட்டியாக மூன்றாவது காலிறுதிப் போட்டி பதுள்ளை மூத்த அணியால் நடத்தப்படவுள்ளது. இதன்போது அந்த அணி நீர்கொழும்பு வெஸ்ட்மாஸ்டர்ஸ் அணியை எதிர்கொள்ளவுள்ளது. இறுதிக் காலிறுதிப் போட்டி கேகாலை மூத்த அணிக்கும் திருகோணமலை சொக்கர் மாஸ்டர்ஸ் அணிக்கும் இடையில் கேகாலையில் நடைபெறவுள்ளது. இந்த காலிறுதிகளில் வெல்லும் அணிகள் இரண்டாவது அரையிறுதியில் ஒன்றை ஒன்று எதிர்கொள்ளும்.   

இரு போட்டியை நடத்தும் அணிகளும் அல்லது இரு விருந்தாளி அணிகளும் காலிறுதிப் போட்டிகளில் வெற்றி பெற்றால் அறையிறுதிப் போட்டியை நடத்தும் மைதானம் நாணய சுழற்சியின் மூலம் தேர்வு செய்யப்படும். போட்டியை நடத்தும் அணி மற்றும் விருந்தாளி அணி காலிறுதிகளில் வென்றால் விருந்தாளி அணிக்கு அரையிறுதிப் போட்டியை நடத்த வாய்ப்பு கிடைக்கும்.   

அரையிறுதிப் போட்டிகளை டிசம்பர் 9 மற்றும் 10 ஆம் திகதிகளில் நடத்த ஏற்பாடாகியுள்ளது. இதன் இறுதிப் போட்டியை டிசம்பர் 16 அல்லது 17 ஆம் திகதியில் நடத்துவதற்கு ஏற்பாட்டுக் குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

சம்பியன்ஸ் அணிக்கு திலக் பீரிஸ் சவால் கிண்ண பதக்கங்களுடன் 100,000 ரூபாய் பணப்பரிசும் வழங்கப்படும். இரண்டாம் இடத்தை பிடிக்கும் அணிக்கு அதற்கான கிண்ணத்துடன் வெள்ளிப் பதக்கம் மற்றும் 50,000 பணப்பரிசும் வழங்கப்படும்.

சிறந்த வீரர் மற்றும் சிறந்த கோல் காப்பாளர்களுக்கு முறையே தங்கப் பாதணி மற்றும் தங்க கையுறையுடன் தலா 10,000 ரூபாய் பணப்பரிசும் வழங்கப்படும்.   

இலங்கை தேசிய கால்பந்துக்கு பெரும் பங்காற்றிய புறக்கணிக்கப்பட்ட கால்பந்து வீரர்களுக்கு உதவுவதற்காகவே 1995 ஆம் ஆண்டு திலக் பீரிசினால் இலங்கை சொக்கர் மாஸ்டர்ஸ் சங்கம் நிறுவப்பட்டது.  

கடந்த 22 ஆண்டுகளில் உதவிகள் தேவைப்படும் கால்பந்து வீரர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு SLSMA முன்னின்று உதவியுள்ளது. 20 மூத்த கால்பந்து வீரர்களுக்கு SLSMA மருத்துவ மற்றும் ஏனைய தேவைகளுக்காக தலா 10,000 ரூபாய் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.