இலங்கையின் புதிய வீரர்களுக்கு எதிராக நியூசிலாந்து அணியின் திட்டம்

307
tom

நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் குழாத்தில் இணைக்கப்பட்டுள்ள புதிய வீரர்கள் தொடர்பில் அதிக அவதானங்களை செலுத்தி வருவதாக அந்த அணியின் விக்கெட் காப்பாளரும், துடுப்பாட்ட வீரருமான டொம் லேத்தம் தெரிவித்துள்ளார்.

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரின் முதல் போட்டி நாளை மறுதினம் (14) காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகிறது. 

முதல் டெஸ்ட் போட்டிக்கான இலங்கை குழாம் அறிவிப்பு

நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெறவுள்ள முதல் டெஸ்ட்…..

குறித்தப் போட்டிக்கான தயார்படுத்தலில் நியூசிலாந்து அணி ஈடுபட்டிருக்கும் போதிலும், கட்டுநாயக்க மேரியன்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றிருந்த பயிற்சிப் போட்டியானது மழைக்காரணமாக கைவிடப்பட்டது. எனினும், காலியில் நடைபெற்ற பயிற்சிகளின் மூலம் நியூசிலாந்து அணி தங்களுடைய தயார்படுத்தல்களை சிறப்பாக மேற்கொண்டு வருவதாக டொம் லேத்தம் தெரிவித்திருந்தார்.

“பயிற்சிப் போட்டிகள் கைவிடப்பட்டமையை நாம் ஒரு காரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. நாம் இங்கு (காலி) சிறப்பாக பயிற்சிகளை மேற்கொண்டுள்ளோம். இது எமக்கு ஏற்றதாக உள்ளது”

இலங்கை அணி நியூசிலாந்து அணிக்கு எதிராக உலகக் கிண்ணத்துக்கு முன்னதான டெஸ்ட் தொடரை இழந்திருந்தாலும், அதன் பின்னர், நடைபெற்ற தென்னாபிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றியது. குறித்த தொடரில் புதிய வீரர்கள் பலரை இலங்கை அணி இணைத்திருந்தது. குறிப்பாக விஷ்வ பெர்னாண்டோ, ஓசத பெர்னாண்டோ மற்றும் லசித் எம்புல்தெனிய ஆகியோர் சிறப்பாக செயற்பட்டிருந்தனர்.

இந்தநிலையில், இலங்கை அணியில் உள்ள புதிய வீரர்கள் தொடர்பில் அதிக அவதானத்துடன் உள்ளதாகவும், அதற்கான திட்டங்களை வகுத்துள்ளதாகவும் லேத்தம் குறிப்பிட்டுள்ளார்.

“இலங்கை டெஸ்ட் குழாத்திலிருக்கும் சில வீரர்களை நாம் இதுவரை எதிர்கொள்ளவில்லை. அதனால், அவர்கள் விளையாடிய காணொளிகளை பார்வையிட்டு, அவர்களுக்கு எதிராக எவ்வாறான திட்டங்களை செயற்படுத்துவது என்பது தொடர்பில் ஆராய்ந்து வருகின்றோம்” என்றார்.

நியூசிலாந்து அணி இறுதியாக தங்களுடைய சொந்த மண்ணில் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரை வெற்றிக்கொண்டிருந்தது. எனினும், இலங்கையில் நடைபெறவுள்ள இந்த டெஸ்ட் தொடரானது மிகவும் சவாலான தொடராக அமையும் என டொம் லேத்தம் சுட்டிக்காட்டியிருந்தார்.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<