புனித பேதுரு கல்லூரிக்கு அதிர்ச்சி கொடுத்த கிந்தொட்டை ஸாஹிரா கல்லூரி

569

தற்பொழுது இடம்பெற்று வரும் ThePapare கால்பந்து சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் கொழும்பு புனித பேதுரு கல்லூரிக்கு அதிர்ச்சி கொடுத்த கிந்தொட்டை ஸாஹிரா கல்லூரி வீரர்கள் 2-0 என்ற கோல்கள் கணக்கில் வெற்றி பெற்று தொடரை மகிழ்ச்சியாக ஆரம்பித்துள்ளனர்.

இவ்விரு அணிகளுக்கும் இடையிலான மோதல் பேதுரு கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது. சொந்த மைதானத் தரப்பினர், தேசிய அணியில் இணைந்துள்ள, தமது முன்னணி வீரர் சபீர் சசூனியா இல்லாமலேயே இன்றை மோதலில் களமிறங்கினர். மலேசிய அணியுடன் இலங்கை தேசிய கால்பந்து அணி மோதவுள்ள போட்டிக்கான பயிற்சிகளில் சபீர் இணைந்துள்ளார்.

ThePapare சம்பியன்ஷிப் தொடரை வெற்றியுடன் ஆரம்பித்த புனித ஜோசப் கல்லூரி

குதிரைப்பந்தய திடல் சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற….

இந்நிலையில் ஆரம்பிக்கப்பட்ட இந்த ஆட்டத்தின் முதல் 15 நிமிடங்களும் புனித பேதுரு கல்லூரி வீரர்களின் கால்களிலேயே பந்து காணப்பட்டது. கிந்தொட்டை ஸாஹிரா அணியினரின் எல்லையில் ஆதிக்கம் செலுத்திய அவர்கள் கோலுக்காக மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் எதிரணியின் பின்கள வீரர்களினால் தடுக்கப்பட்டன.  

ஆட்டத்தின் 19ஆவது நிமிடத்தில் எதிரணியின் மத்திய களத்தில் இருந்து பந்தைப் பெற்ற புனித பேதுரு கல்லூரி வீரர் டேனியல் மெக்ராத் பல வீரர்களையும் தாண்டி முன்னோக்கிச் சென்று இறுதியில் கோல் நோக்கி உதைந்த பந்து கம்பத்தின் மேல் பகுதியில்பட்டு வெளியேற, அவ்வணியின் ஆரம்ப வாய்ப்பு வீணானது.

போட்டியின் 28 ஆவது நிமிடத்தில் ஸாஹிரா வீரர் அப்துர் ரஹ்மான், சக வீரர் வழங்கிய பந்துப் பரிமாற்றத்தைப் பெற்று, எதிரணியின் பெனால்டி எல்லைக்கு வெளியில் இருந்து வேகமாக பந்தை கோல் கம்பங்களுக்குள் செலுத்தி போட்டியின் முதல் கோலைப் பெற்று, அணியை முன்னிலைப் படுத்தினார்.

ஆட்டத்தின் 37 ஆவது நிமிடத்தில் கொழும்பு வீரர்கள் மேற்கொண்ட கோலுக்கான முயற்சியை கிந்தொட்டை ஸாஹிரா கோல் காப்பாளர் ஹஸ்னி கோலுக்கு அண்மையில் இருந்து தடுத்தார்.

இந்தப் போட்டியை மீண்டும் பார்வையிட

ஆட்டத்தின் 40 நிமிடங்கள் கடந்த நிலையில், கிந்தொட்டை வீரர்களுக்கு கிடைத்த கோணர் உதையின்போது, உள்ளனுப்பப்பட்ட பந்து கோலின் வலது பக்க கம்பத்தில் பட்டு மைதானத்திற்குள் வந்தது. இதன்போது மீண்டும் அவ்வணி வீரர்கள் உதைந்த பந்தை பேதுரு கல்லுரியின் கோல் காப்பாளர் மிதுர்சன் பிடித்துக்கொண்டார்.

முதல் பாதி: புனித பேதுரு கல்லூரி 0 – 1 கிந்தொட்டை ஸாஹிரா கல்லூரி

இரண்டாவது பாதி ஆரம்பமாகிய சில நிமிடங்களில் கொழும்பு வீரர்கள் கோலுக்கான பல முயற்சிகளை அடுத்தடுத்து பெற்ற போதும், அவற்றில் எதனையும் சிறப்பாக நிறைவு செய்யவில்லை.

பின்னர், 55 ஆவது நிமிடத்தில் ஸாஹிரா வீரர்கள் பந்தை எதிர் திசைக்கு செலுத்த முயற்சிக்கையில் தமது தரப்பின் கோல் வலையை நேக்கி பந்து சென்றது. அதனை கோல் காப்பாளர் ஹஸ்னி கம்பங்களுக்கு அருகில் இருந்து பாய்ந்து மேலால் தட்டி விட்டார்.

ஆட்டத்தின் 62 ஆவது நிமிடத்தில் பேதுரு கல்லூரி வீரரை, ஸாஹிரா வீரர்கள் தமது பெனால்டி எல்லையில் வைத்து முறையற்ற விதத்தில் வீழ்த்த பேதுரு கல்லூரி வீரர்களுக்கு பெனால்டி வாய்ப்பு வழங்கப்பட்டது. அதனைப் பெற்ற அர்ஜுனன் பிரவீன், கோல் நோக்கி உதைந்த பந்தை ஹஸ்னி தடுத்தார். இதன்போது மீண்டும் பேதுரு கல்லூரி வீரர்கள் இலகுவாக கோலை நோக்கி பந்தை செலுத்த இருந்த வாய்ப்பை வெளியே உதைந்து வீணடித்தனர்.

மேலும் 3 நிமிடங்களில் பிரவீன் பெனால்டி எல்லைக்கு வெளியில் இருந்து கோல் நோக்கி வேகமாக உதைந்த பந்தையும் ஹஸ்னி தடுத்தார்.

ஆட்டத்தின் 74 ஆவது நிமிடத்தில் விருந்தாளிகளுக்கு போட்டியின் இரண்டாவது கோலும் கிடைக்கப்பெற்றது. முதல் கோலைப் பெற்ற அப்துர் ரஹ்மான், சக வீரர் மொஹமட் அர்ஷாடுக்கு வழங்கிய பந்தை அவர் கோல் காப்பாளரை விட உயர்த்தி கோலுக்குள் செலுத்தி தமது அணிக்கான இரண்டாவது கோலைப் பதிவு செய்தார்.

மீண்டும் 85 ஆவது நிமிடத்தில் எதிரணியினர் மேற்கொண்ட கோலுக்கான முயற்சியையும் ஹஸ்னி தடுத்தார்.

ஆட்டத்தின் உபாதையீடு நேரத்தில் இரு அணியினரும் மேற்கொண்ட முயற்சிகளை எதிரணியின் கோல் காப்பாளர்கள் தடுத்தனர்.

எனவே, போட்டியின் நிறைவில் பிரிவு ஒன்றில் ஆடும் முன்னணி அணியான புனித பேதுரு கல்லூரியினை கிந்தொட்டை ஸாஹிரா வீரர்கள் வீழ்த்தி ThePapare கால்பந்து சம்பியன்ஷிப் தொடரை வெற்றியுடன் ஆரம்பித்தனர்.

அவ்வணியின் வெற்றிக்கு கோல் காப்பாளர் மொஹமட் ஹஸ்னி மேற்கொண்ட தடுப்புக்கள் முக்கிய காரணமாக அமைந்தது என்றே கூற வேண்டும்.

முழு நேரம்: புனித பேதுரு கல்லூரி 0 – 2 கின்தொட்டை ஸாஹிரா கல்லூரி

ThePapare.com இன் ஆட்ட நாயகன்: மொஹமட் ஹஸ்னி (கிந்தொட்டை ஸாஹிரா கல்லூரி)

கோல் பெற்றவர்கள்

கிந்தொட்டை ஸாஹிரா கல்லூரி – அப்துர் ரஹ்மான் 28′, மொஹமட் அர்ஷாட் 74′

>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<