பலம் மிக்க ஹமீட் அல் ஹுஸைனியை சமன் செய்தது பதுரியா

85

விறுவிறுப்போடு ஆரம்பமாகிய ThePapare கால்பந்து சம்பியன்ஷிப் போட்டித் தொடரின் ஆரம்பப் போட்டியில் முன்னணி அணியான கொழும்பு ஹமீட் அல் ஹுஸைனி கல்லூரியை மாவனல்லை பதுரியா மத்திய கல்லூரி 2-2 என்ற கோல்கள் கணக்கில் சமன் செய்துள்ளது.  

இலங்கையின் முதல் தர விளையாட்டு இணையத்தளமான ThePapare.com இரண்டாவது முறை ஏற்பாடு செய்து நடாத்தும் 20 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான பாடசாலை அணிகளுக்கு இடையிலான ThePapare கால்பந்து சம்பியன்ஷிப் தொடர் வியாழக்கிழமை (02) உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகியது. இதன் முதல் நாளான இன்று 2 போட்டிகள் இடம்பெற்றன. 

ஹமீட் அல் ஹுஸைனி கல்லூரி எதிர் பதுரியா மத்திய கல்லூரி 

களனிய கால்பந்து மைதானத்தில் இடம்பெற்ற குழு D இற்கான இந்தப் போட்டி ஆரம்பமாகியது முதல் இரு அணிகளும் சம பலத்துடன் மோதின. எனினும்,போட்டியின் 19 ஆவது நிமிடத்தில் கிடைத்த கோணர் உதையின்போது உள்வந்த பந்தை பதுரியா மத்திய கல்லூரி வீரர் பர்வீஸ் அஹமட் கோலுக்குள் செலுத்தி அணியை முன்னிலை பெறச் செய்தார். 

முதல் கோல் பெறப்பட்டு 3 நிமிடங்களில் ஹமீட் அல் ஹுஸைனி வீரர் மொஹமட் சப்ரான், தமது அணிக்கு கிடைத்த ப்ரீ கிக்கின்போது உள்வந்த பந்தை ஹெடர் செய்து கோல் எண்ணிக்கையை சமப்படுத்தினார். 

முதல் பாதி: ஹமீட் அல் ஹுஸைனி 1 – 1 பதுரியா மத்திய கல்லூரி 

எனினும் போட்டியின் இரண்டாம் பாதி ஆரம்பமாகியது முதல் ஹமீட் அல் ஹுஸைனி வீரர்கள் ஆட்டத்தில் முழுமையாக ஆதிக்கம் செலுத்தினர். இதன் பலனாக சப்ரான் 73 ஆவது நிமிடத்தில் தனது இரண்டாவது கோலையும் பதிவு செய்து அணியை முன்னிலைப்படுத்தினார். 

இரண்டாம் பாதியில் மிகவும் குறைவான வாய்ப்புக்களைப் பெற்ற பதுரியா அணிக்கு 82 ஆவது நிமிடத்தில் கிடைத்த கோணர் உதையின்போது அந்த அணி, அதன் தலைவர் ஹுனைன் மூலம் அடுத்த கோலைப் பெற்றது. 

எஞ்சிய நேரத்தில் இரு அணியினரும் வெற்றி கோலுக்கு முயற்சித்த போதும், அது கைகூடாத நிலையில், ஆட்டம் 2-2 என சமநிலையடைந்தது. 

முழு நேரம்: ஹமீட் அல் ஹுஸைனி 2 – 2 பதுரியா மத்திய கல்லூரி

கோல் பெற்றவர்கள் 

  • ஹமீட் அல் ஹுஸைனி கல்லூரி – மொஹமட் சப்ரான் 22’ & 73’
  • பதுரியா மத்திய கல்லூரி – பர்வீஸ் அஹமட் 19’, மொஹமட் ஹுனைன் 82’ 

மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி எதிர் சென். செபஸ்டியன் கல்லூரி 

குழு B இல் அங்கம் வகிக்கும் இந்த இரு அணிகளுக்கும் இடையிலான போட்டி வென்னப்புவ அல்பேர் ஏ பீரிஸ் மைதானத்தில் இடம்பெற்றது.  இதில் மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி 2-0 என்ற கோல்கள் கணக்கில் வெற்றி பெற்றது. 

>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<<