அல் அக்ஸா கல்லூரியை வீழ்த்தி பலத்தை நிரூபித்த ஸாஹிரா

469

ThePapare.com இன் அனுசரணையில் நடைபெறும் ThePapare கால்பந்து சம்பியன்ஷிப் தொடரில் C குழுவுக்கான முக்கிய போட்டி ஒன்றில் கொழும்பு ஸாஹிரா கல்லூரி, கிண்ணியா அல் அக்ஸா கல்லூரியை 3-1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

களனி கால்பந்து வளாகத்தில் இன்று (19) நடைபெற்ற இந்தப் போட்டியில் ஸாஹிரா கல்லூரி தனது ஆதிக்கத்தை நிரூபித்தது. அந்த அணி இந்த தொடரில் தனது முதல் போட்டியில் யாழ்ப்பாணம் மகாஜனாக் கல்லூரிக்கு எதிராக எதிர்பாராத விதமாக சமநிலை கண்டமை  குறிப்பிடத்தக்கது.

சமநிலையில் நிறைவுற்ற கம்பளை ஸாஹிரா, புனித ஜோசப் இடையிலான மோதல்

ThePapare.com நடாத்தும் பாடசாலைகளுக்கு இடையிலான ThePapare…

போட்டி ஆரம்பித்த விரைவில் இரு அணிகளும் கோல் பெறுவதில் அவசரம் காட்டின. 2 ஆவது நிமிடத்தில் ஸாஹிரா வீரர் மொஹமட் முர்ஷித் எதிரணி கோல் கம்பத்தை ஆக்கிரமித்தபோதும் அல் அக்ஸா கல்லூரி கோல்காப்பாளர் மொஹமட் அஷ்கான் அவரது முயற்சியை தடுத்தார்.

மறுபுறம் முதல் ஆறு நிமிடங்களில் அல் அக்ஸா வீரர்கள் தாக்குதல் ஆட்டம் ஒன்றை வெளிப்படுத்தினர். இந்த காலப்பிரிவுக்குள் இரு அணிகளும் மொத்தம் ஐந்து கோல் முயற்சிகளில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் முதல் பாதியின் நடுப்பகுதியாகும்போது இரு அணிகளும் பொறுமையுடன் பந்தை பரிமாற்றி கோல் முயற்சிகளை தேடின. எனினும் கொழும்பு ஸாஹிரா வீரர்கள் வசம் அதிக நேரம் பந்து  நிலைக்க அல் அக்ஸா வீரர்கள் தற்காப்பு ஆட்டத்திற்கு திரும்பினர்.

குறிப்பாக அல் அக்ஸா கோல்காப்பாளர் சாஹிராவின் ஒரு சில கோல் வாய்ப்புகளை தடுத்தமை குறிப்பிடத்தக்கது. 16 ஆவது நிமிடத்தில் முர்சித் அடித்த பந்து கோல் கம்பத்தில் பட்டு வெளியேறியதோடு 22 ஆவது நிமிடத்தில் ஸாஹிரா வீரர்களுக்கு கிடைத்த அடுத்தடுத்த இரண்டு கோல் வாய்ப்புகளை அல் அக்ஸா கோல்காப்பாளர் அபாரமாக தடுத்தார்.

எனினும் 38 ஆவது நிமிடத்தில் ஸாஹிரா வீரர்கள் பிரீ கிக் வாய்ப்பு மூலம் பந்தை வலைக்குள் செலுத்தியபோதும் அது ஓப் சைட் கோலாக இருந்தது. முதல் பாதி ஆட்டத்தின் கடைசி  நிமிடங்களில் ஸாஹிரா வீரர்கள் கோல் பெறுவதற்கு அவசரம் காட்டியபோது 40 ஆவது  நிமிடத்தில் அந்த  அணிக்கு பொன்னான வாய்ப்பு ஒன்று கிட்டியபோதும் அது துரதிஷ்டவசமாக தவறிப்போனது. ஸாஹிராவின் முன்கள வீரர்கள் மூவர் எதிரணி கோல் எல்லைக்கு மிக அருகாமையில் இருந்தபோதும் அந்த அணியால் கோல்பெற முடியாமல் போனது.

எவ்வாறாயிலும் முதல் பாதி ஆட்டத்தின் கடைசி நிமிடத்தில் ஸாஹிரா அணித்தலைவர் மொஹமட் ஆகிப் பந்தை வேகமாக வலைக்குள் நுழைத்து அந்த அணியை முன்னிலை பெறச் செய்தார். ஆகிப் இந்த தொடரில் பெறும் இரண்டாவது கோலாக இது இருந்தது

முதல் பாதி: ஸாஹிரா கல்லூரி 1 – 0 அல் அக்ஸா கல்லூரி  

முதல் பாதி ஆட்டம் போலன்றி இரண்டாவது பாதியில் ஸாஹிரா கல்லூரி ஆரம்பத்திலேயே ஆதிக்கம் செலுத்தியது. 51 ஆவது நிமிடத்தில் சஹில் அஹமட் நெருக்கடி இன்றி ஸாஹிரா அணிக்கு இரண்டாவது கோலை பெற்றுக்கொடுத்தார்.

இம்முறை யாழ்ப்பாணத்தில் ஆரம்பமாகும் டயலொக் சம்பியன்ஸ் லீக் தொடர்

இலங்கையின் மிகப் பெரிய கால்பந்து தொடரான டயலொக் சம்பியன்ஸ்…

இந்நிலையில் இரண்டு கோல்கள் வித்தியாசத்தில் பின்தங்கிய அல் அக்ஸாவின் பின்கள வீரர்கள் ஸாஹிரா கோல் கம்பத்தின் பக்கம் அதிகம் நகர்ந்து வந்ததை கச்சிதமாக பயன்படுத்திக் கொண்ட மொஹமட் முர்சித் எதிரணி கோல் வலையை நோக்கி வேகமாக பந்தை கடதிச் சென்றபோதும் அல் அக்ஸா கோல்காப்பாளர் அவரது முயற்சியை தடுத்தார்.

இந்நிலையில் ஸாஹிரா கல்லூரி 63 ஆவது  நிமிடத்தில் வைத்து அடுத்தடுத்து இரண்டு கோல் வாய்ப்புகளை தவறவிட்டது.

ThePapare தொடரில் புனித பெனடிக்ட் கல்லூரிக்கு எதிரான போட்டியில் 6-4 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற கிண்ணியா அல் அக்ஸா கல்லூரியிடம் இந்த போட்டியில் அந்த உத்வேகத்தை காண முடியவில்லை. இந்த போட்டியில் அந்த அணி 68 ஆவது நிமிடத்திலேயே முதல் கோணர் கிக் வாய்ப்பு ஒன்றை பெற்றமை குறிப்பிடத்தக்கது.

எனினும் 78 ஆவது நிமிடத்தில் ஸாஹிரா அணியின் பெனால்டி எல்லையை ஆக்கிரமித்து முன்னேறிய அல் அக்ஸா வீரர்கள் மீது ஸாஹிரா பின்கள வீரர் செய்த தவறால் அந்த அணிக்கு பெனால்டி வாய்ப்பு ஒன்று கிட்ட அதனை அந்த அணி கோலாக மாற்றிக் கொண்டது.

இதனைத் தொடர்ந்து சமநிலை கோலை பெறுவதற்கு அல் அக்ஸா கடும் முயற்சியில் ஈடுபட்டது. இந்நிலையில் ஸாஹிரா அணி வீரர் மீண்டும் ஒரு முறை அல் அக்ஸா கோல் கம்பத்தை ஆக்கிரமித்தபோதும் அல் அக்ஸா வீரரால் ஸாஹிரா கல்லூரிக்கு ஓன் கோல் (Own goal) ஒன்று கிடைக்கப்பெற்றது அந்த அணியின் நம்பிக்கையை  சிதறடித்தது.

முழு நேரம்: ஸாஹிரா கல்லூரி 3 – 1 அல் அக்ஸா கல்லூரி 

கோல் பெற்றவர்கள்

ஸாஹிரா கல்லூரி, கொழும்பு – மொஹமட் ஆகிப் 45+1’, சாஹில் அஹமட் 51’, ரொஹான் 82’ (ஓன் கோல்)

அல் அக்ஸா கல்லூரி, கிண்ணியா ரொஹான் 78’ (பெனால்டி)

மஞ்சள் அட்டை

அல் அக்ஸா கல்லூரி, கிண்ணியா  ரொஹான் 36’

 மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க