சனத் ஜயசூரிய தலைமையிலான இலங்கை கிரிக்கெட் தேர்வுக் குழு தனது இராஜினாமாக் கடிதத்தை விளையாட்டுத்துறை அமைச்சரிடம் இன்று (29) கையளித்தது.

தற்போது நடைபெற்றுவரும் இந்தியாவுடனான தொடரை அடுத்து தமது பதிவியில் இருந்து விலகுவதாக அந்த இராஜினாமாக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2015 உலகக் கிண்ண காலிறுதியில் இலங்கை அணி வெளியேறியதை அடுத்து தனது பதவியை இராஜினாமா செய்த சனத் ஜயசூரிய கடந்த 2016 மே முதலாம் திகதி இரண்டாவது முறையாகவும் மீண்டும் தேர்வுக் குழுத் தலைவர் பதவியை ஏற்றார். அவரது ஒப்பந்தக் காலம் இந்த ஆண்டு இறுதிவரை உள்ளது.

சாமர கபுகெதர நான்காவது ஒருநாள் போட்டியில் விளையாடுவதில் கேள்விக்குறி

இலங்கை அணியின் பதில் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கும் சாமர கபுகெதர கொழும்பில் வியாழக்கிழமை…

கடந்த 15 மாதங்களில் 40க்கும் அதிகமான வீரர்களை அணிக்கு தேர்வு செய்திருக்கும் ஜயசூரிய தலைமையிலான தேர்வுக் குழு மீது, ஒரு சீரான தேர்வு நடவடிக்கையில் ஈடுபடுவதில்லை என்ற கடுமையான விமர்சனங்கள் இருந்து வருகிறன.

இலங்கை அணியின் முன்னாள் அதிரடி வீரர் சனத் ஜயசூரிய, முன்னாள் விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரர் ரொமேஷ் களுவிதாரன, உலகக் கிண்ணம் வென்ற அணியில் இடம்பிடித்திருந்தவரும் தற்போது கிரிக்கெட் முகாமையாளருமான அசங்க குருசிங்க, முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ரன்ஜித் மதுரசிங்க மற்றும் முன்னாள் வலதுகை வேகப்பந்து வீச்சாளர் எரிக் உபஷான்த ஆகியோரை உள்ளடக்கியதாக இலங்கை கிரிக்கெட் தேர்வுக் குழு உள்ளமை குறிப்பிடத்தக்கது.