காது கேட்காமலும், வாய் பேசாமலும் உலக கிரிக்கெட் சம்பியனான நம்மவர்கள்

1713
Deaf Icc world cup facebook

சாதாரண ஒரு மனிதனைப் போல எமக்கு தோற்றம் அளித்தாலும் அவர்களிடம் எந்தவொரு குறையும் கிடையாது. பேசுவதற்கு நிறைய விடயங்கள் இருந்தாலும், பிறந்தது முதல் இந்த உலகில் எந்தவொரு சத்தத்தையும் கேட்க முடியாத காரணத்தால் அவர்களால் ஒரு வார்த்தையேனும் பேச முடியவில்லை. அதுவும் ஹா…..முடியாது…..ஓ…. ஏ… போன்ற சொற்களை மாத்திரம் சொல்கின்ற அவர்கள் இன்றும் உலகில் ஓரங்கட்பட்டு வருகின்றார்கள் என்பது கவலையை ஏற்படுத்துகின்றது.

செவிப்புலனற்றோருக்கான T20 உலகக் கிண்ணத்தை கைப்பற்றிய இலங்கை

இன்று (30) நடைபெற்று முடிந்திருக்கும் …

இவையனைத்துக்கும் மத்தியில் உலகின் சத்தத்தை கேட்க முடியாத நம்மவர்கள் தான் இன்று உலகம் பூராகவும் இலங்கையின் நாமத்தை கேட்கின்ற அளவுக்கு மகத்தான சாதனையொன்றை அண்மையில் நிகழ்த்தியிருந்தனர்.

சர்வதேச செவிப்புலனற்றோருக்கான கிரிக்கெட் சபை, சர்வதேச கிரிக்கெட் பேரவையுடன் இணைந்து முதற்தடவையாக ஒழுங்கு செய்திருந்த டி-20 கிரிக்கெட் உலகக் கிண்ணத்தை செவிப்புலனற்ற இலங்கை நட்சத்திரங்கள் வெற்றிகொண்டு உலக சம்பியன்களாக மகுடம் சூடினர்.

1996 மற்றும் 2014 உலகக் கிண்ணங்களை இலங்கை கிரிக்கெட் அணி வெற்றி கொண்டபோது அதனை முழு நாடுமே கொண்டாடியிருந்தது. அந்த அணிகளுக்கு கிடைத்த வரவேற்புகளும், வாழ்த்துக்களும் ஏராளம் ஏராளம். உலகக் கிண்ணத்தை வென்று நாடு திரும்பிய வீரர்களுக்கு பாதைகளின் இரு மரங்கிலும் ஒன்று திரண்ட இலங்கை ரசிகர்கள் மேள தாளத்துடன், பட்டாசு கொழுத்தி, சந்தோஷத்துடன் உற்சாக வரவேற்பளித்தனர். ஆனால் இலங்கைக்கு உலகக் கிண்ணமொன்றை வென்று கொடுத்த நமது செவிப்புலனற்ற வீரர்களுக்கு அவ்வாறானதொரு வரவேற்பு கிடைக்கவில்லை. அவர்களால் எந்தவொரு சத்தத்தையும் கேட்க முடியாவிட்டாலும், பல்வேறு கஷ்டங்களுக்கு மத்தியில் இந்தியாவுக்குச் சென்று இலங்கையின் நாமத்தை சர்வதேச கிரிக்கெட் அரங்கில் ஜொலிக்கச் செய்த அந்த சாதனை வீரர்களை ஒருபோதும் மறக்கக் கூடாது.

செவிப்புலனற்றோருக்கான டி-20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் இந்தியாவின் தலைநகர் புதுடெல்லியின் குருக்ரம் நகரில் அண்மையில் நிறைவுக்கு வந்தது. இலங்கை, இந்தியா, அவுஸ்திரேலியா, தென்னாபிரிக்க, நேபாளம் உட்பட 6 நாடுகள் இம்முறை போட்டித் தொடரில் பங்குபற்றியிருந்தன.

இம்முறை போட்டிகளில் தென்னாபிரிக்க அணியுடனான லீக் போட்டியில் மாத்திரம் தோல்வியைத் தழுவிய இலங்கை அணி, ஏனைய அனைத்து நாடுகளையும் வீழ்த்தி இறுதிப் போட்டியில் பிரபல இந்திய அணியை சந்தித்தது.

இலங்கை அணியின் புதிய தலைவராக லசித் மாலிங்க

நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெறவுள்ள ஒருநாள் …

இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 09 விக்கெட்டுகளை இழந்து 145 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

பின்னர், வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 17.5 ஓவர்கள் நிறைவில், சகல விக்கெட்டுகளையும் இழந்து 109 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

இதன்படி, இந்தியாவை 36 ஓட்டங்களால் தோற்கடித்த இலங்கை அணி, செவிப்புலனற்றோருக்கான டி-20 உலகக் கிண்ண சம்பியன் பட்டத்தினை முதற்தவையாக வெற்றி கொண்டது.

கிரிக்கெட் உலகில் இலங்கை அணியொன்று பெற்றுக்கொண்ட 3ஆவது உலகக் கிண்ணமாக இது வரலாற்றில் இடம்பிடித்தது. இதற்கு முன் 1996ஆம் ஆண்டு அர்ஜுன ரணதுங்க தலைமையிலான அணி ஒருநாள் உலகக் கிண்ணத்தையும், 2014ஆம் ஆண்டு லசித மாலிங்க தலைமையிலான இலங்கை அணி டி-20 உலகக் கிண்ணத்தையும் கைப்பற்றியிருந்தன. இவ்வருடம் கிமோத் மெல்கம் தலைமையிலான அணி செவிப்புலனற்றோருக்கான உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றி வரலாறு படைத்தது.

இந்த நிலையில், பல்வேறு கஷ்டங்களுக்கு மத்தியில் செவிப்புலனற்றோருக்கான உலகக் கிண்ணத்தை கைப்பற்றிய இலங்கை அணி, கடந்த முதலாம் திகதி நாடு திரும்பியது. இதன்போது விளையாட்டுத்துறை அமைச்சு மற்றும் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினால் விமான நிலைத்தில் வைத்து இலங்கை செவிப்புலனற்றோர் அணிக்கு மகத்தான வரவேற்பும் அளிக்கப்பட்டது.

ஆரம்பம்

1996 உலகக் கிண்ணத்தை இலங்கை அணி வெற்றி கொண்ட பிறகுதான் இலங்கை செவிப்புலனற்றோருக்கான கிரிக்கெட் அணியும் ஸ்தாபிக்கப்பட்டது. நாட்டில் உள்ள மாவட்ட சங்கங்களின் ஊடாக நாடு பூராகவும் வீரர்கள் தேர்வு இடம்பெற்றன. எனினும், நாட்டில் நிலவிய யுத்த சூழ்நிலையால் தென்பகுதியில் இருக்கின்ற திறமையான வீரர்களை மாத்திரம் செவிப்புலனற்றோர் அணிக்காக தேர்வு செய்து பயிற்சிகளும் வழங்கப்பட்டன.

2005ஆம் ஆண்டு செவிப்புனற்றோருக்கான 2ஆவது உலகக் கிண்ணத்தில் முதற்தடவையாக இலங்கை அணி பங்குபற்றியதுடன், அதில் 5ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டது. இலங்கை அணி 2007இல் செவிப்புலனற்றோருக்கான ஆசிய கிண்ணப் போட்டித் தொடரில் விளையாடியது. எனினும், 2012 மற்றும் 2017ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற செவிப்புலனற்றோருக்கான ஆசிய கிண்ணத்தில் இலங்கை அணி 2ஆவது இடங்களைப் பெற்றுக்கொண்டன.

செவிப்புலனற்ற கிரிக்கெட் வீரர்களின் பெற்றோர்களின் முயற்சியின் பிரதிபலனாக செவிப்புலனற்றோர் கிரிக்கெட் சங்கமும் ஸ்தாபிக்கப்பட்டதுடன், இன்றுவரை இடம்பெற்ற அனைத்து தொடர்களுக்கும் அவர்களது சொந்த நிதி உதவிகள் மூலமாகத்தான் இந்த வீரர்கள் நாட்டிற்கு வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்துள்ளனர்.

ஆசிய கிண்ணத் தொடர்

இந்தப் போட்டித் தொடருக்கு செல்ல முன் கடந்த வருடம் இந்தியாவில் நடைபெற்ற செவிப்புலனற்றோருக்கான ஆசிய கிண்ண டி-20 போட்டியில் இலங்கை அணி பங்கேற்றது. இதன் இறுதிப் போட்டியில் இந்தியாவிடம் தோல்வியைத் தழுவிய இலங்கை அணி இரண்டாவது இடத்தைப் பெற்றுக்கொண்டது.

வளர்ந்து வருவோருக்கான ஆசியக் கிண்ணம்; இலங்கை கிரிக்கெட்டின் மீட்சி

கொழும்பு ஆர்.பிரேமதாச சர்வதேச விளையாட்டரங்கில் …

மகா ராஜாவான கிமது

21 வயதான கிமது லக்ரூ மெல்கம் இலங்கை செவிப்புலனற்றோர் கிரிக்கெட் அணியின் தலைவராக செயற்பட்டு வருகின்றார். வலதுகை சுழற்பந்துவீச்சாளராக சகலதுறையிலும் பிரகாசிக்கும் திறமை கொண்ட அவர், இம்முறை உலகக் கிண்ணத்தில் 3 போட்டிகளில் ஆட்ட நாயகன் விருதையும், தொடர் நாயகன் விருதையும் தட்டிச் சென்றார்.

தற்போது அம்பலாங்கொடையில் வாழ்ந்து வருகின்ற கிமது, செவிப்புலனற்றோருக்கான உலகக் கிண்ணத்தை வெற்றி கொண்டமை குறித்து தனது சைகை மொழியால் கருத்து வெளியிடுகையில்,

”தினேஷ் சந்திமால், உபுல் தரங்க ஆகியோர் எனது ஊரைச் சேர்ந்தவர்கள். அவர்களைப் போல எனக்கும் இலங்கை கிரிக்கெட் அணிக்கு விளையாட வேண்டும் என்ற ஆசை இருந்தது. இந்தியாவில் உலகக் கிண்ணத்தை வென்ற போது எனது இதயம் நொருங்கிப் போகும் அளவுக்கு மட்டில்லா சந்தோஷமடைந்தேன். அணியில் உள்ள ஏனைய நண்பர்கள் என்னை மகா ராஜா என்று அழைப்பார்கள். இலங்கை மகளிர் அணியின் சந்துனி வீரக்கொடி அக்காதான் எனக்கு துடுப்பு மட்டை தந்து உதவினார்கள். எனவே, அவருக்கும், எனது பயிற்சியாளர் உள்ளிட்ட செவிப்புலனற்ற கிரிக்கெட் சங்கத்துக்கும், விளையாட்டுத்துறை அமைச்சருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்” என்றார்.

திறமையான வீரர்கள்

இலங்கை கிரிக்கெட்டின் முதல்தர போட்டிகளில் விளையாடுகின்ற திறமை மிக்க ஒருசில வீரர்கள் இலங்கை செவிப்புலனற்றோர் அணியில் இடம்பெற்றுள்ளனர். எனினும், இலங்கை கிரிக்கெட்டின் மூன்றாம் நிலை அணிகளில் ஒன்றாகத்தான் செவிப்புலனற்றோர் கிரிக்கெட் அணி விளையாடி வருகின்றது. ஆனால், ஒருமுறை மாத்திரம் இரண்டாவது நிலை அணியாக தரமுயர்த்தப்பட்டது.

Video – இலங்கை அணிக்காக சகல துறையிலும் பிரகாசிப்பேன் – மதுசன்

பங்களாதேஷில் இடம்பெறவுள்ள 19 வயதுக்கு …

பயிற்சியாளரின் விடாமுயற்சி

செவிப்புலனற்ற வீரர்களுக்கு கிரிக்கெட்டை சொல்லிக் கொடுப்பது யுத்தம் செய்வது போல என்பார்கள். இந்த யுத்தத்தை இலங்கை செவிப்புலனற்ற கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ஜயலத் அபோன்சு வெற்றி கொண்டார்.

கடந்த 23 வருடங்களாக இலங்கை செவிப்புலனற்றோர் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக செயற்பட்டு வருகின்ற ஜயலத் அபோன்சு, கொழும்பு தர்ஸ்டன் கல்லூரியின் முன்னாள் வீரர்களில் ஒருவராகவும், மொறட்டுவ விளையாட்டுக் கழகம் மற்றும் நொமேடிஸ் விளையாட்டுக் கழகத்திலும் விளையாடிய அனுபவத்தைக் கொண்டவராவார். அத்துடன், கொழும்பு மாநகர சபையின் விளையாட்டுத்துறை பணிப்பாளராகவும் அவர் செயற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பேச முடியாத அல்லது செவிப்புலனற்ற வீரரொருவர் இலங்கை தேசிய அணியில் இன்னும் ஓரிரு வருடங்களில் விளையாடினால், அதுதொடர்பில் எவரும் ஆச்சரியப்பட வேண்டிய தேவையில்லை என செவிப்புலனற்றோருக்கான டி-20 உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றிய இலங்கை அணியின் பயிற்சியாளரான ஜயலத் அபோன்சு தெரிவித்தார்.  

இலங்கை தேசிய அணியில் விளையாடுகின்ற அனைத்து தகுதிகளையும் கொண்ட இரண்டு வீரர்கள் செவிப்புலனற்றோருக்கான இலங்கை அணியில் இருப்பதாகவும்,  மிகவும் குறுகிய காலப்பகுதியில் அவர்களில் ஒருவரை நிச்சயம் இலங்கை தேசிய அணியில் இடம்பெறச் செய்வதற்கான அனைத்து வேலைகளையும் முன்னெடுத்து வருவதாகவும் அவர் மேலும் கூறினார்.

றோயல் கல்லூரியை இன்னிங்ஸால் வீழ்த்தியது யாழ் சென். ஜோன்ஸ்

யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரி மைதானத்தில் …

”கடந்த வருடம் நடைபெற்ற செவிப்புலனற்றோருக்கான ஆசிய கிண்ணத்தில் நாம் இரண்டாவது இடத்தைப் பெற்றுக் கொண்டோம். தற்போது உலகக் கிண்ணத்தை வென்று வந்துள்ளோம். எனது அடுத்த இலக்கு இலங்கை டெஸ்ட் அல்லது ஒருநாள் அணியில் திறமையான இரண்டு செவிப்புலனற்ற வீரர்களை இணைத்து விடுவதாகும். அந்த நடவடிக்கையை மிக விரைவில் முன்னெடுக்கவுள்ளேன்” என அவர் தெரிவித்தார்.

இலங்கை செவிப்புலனற்றோர் கிரிக்கெட் அணியில் காலி, ஹம்பாந்தோட்டை மற்றும் யாழ்ப்பாணம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து அதிகளவான வீரர்கள் விளையாடி வருகின்றனர். எனினும், கொழும்பை அண்டிய பகுதியில் இருந்து மிகவும் குறைவான வீரர்கள் தான் செவிப்புலனற்றோர் கிரிக்கெட் அணிக்காக விளையாடி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

”பெரும்பாலானோர் செவிப்புலனற்றோர் கிரிக்கெட் அணி தொடர்பில் குழப்பத்தில் உள்ளனர். நாங்கள் சாதாரணமாக பயன்படுத்துகின்ற பந்துகளில் விளையாடுவதில்லை. ஒரு கிரிக்கெட் வீரரினால் பயன்படுத்துகின்ற லெதர் பந்துகளில் தான் எமது வீரர்கள் பயிற்சிகளைப் பெற்றுவருகின்றனர். கடந்த 2 தசாப்தங்களாக நாங்களும் பவுண்சர், புல்டோஸ், நோபோல், நீளப் பந்து, அகலப் பந்து போன்றவற்றுக்கு முகங்கொடுத்துதான் தற்போது உலகக் கிண்ணத்தை வென்றுள்ளோம். எமது வீரர்களுக்கு பேச முடியாது. அதேபோல அவர்களுக்கு காதும் கேட்காது. அவர்களும் சாதாரண ஒரு வீரரைப் போல பந்துவீச்சு, துடுப்பாட்டம், களத்தடுப்புச் செய்வது போன்றவற்றை செய்து வருகின்றனர். எமக்கும் .சி.சியின் சட்ட விதிமுறைகளில் எந்தவொரு மாற்றமும் இல்லை. நாங்கள் கடந்த ஆறு வருடங்களாக இலங்கை கிரிக்கெட்டின் மூன்றாவது நிலை கழகங்களுடனான முதற்தர கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகின்றோம். எனினும், எமது பயிற்சிகளை மேற்கொள்ள மைதானங்களை ஒதுக்குவதில் நாங்கள் பொருளாதார நெருக்கடிகனை சந்தித்து வருகின்றோம். எனினும், மொறட்டுவ நகர சபை டி சொய்ஸா மைதானத்தை குறைந்த விலைக்கு விளையாடுவதற்கு வழங்கியுள்ளது. இதனால் நாங்கள் முதற்தர போட்டிகளில் விளையாடி வருகின்றோம்” என அவர் மேலும் தெரிவித்தார்.

எனவே, நாங்கள் உலகக் கிண்ணத்தை வென்று நாடு திரும்பிய போது முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் பைஸர் முஸ்தபா, எமது செவிப்புலனற்றோர் கிரிக்கெட் அணியை இலங்கை கிரிக்கெட் நிறுவனத்துடன் இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். அது அவ்வாறு நடக்குமானால் எதிர்காலத்தில் இன்னும் பல வெற்றிகளை நாட்டுக்காகப் பெற்றுக் கொடுப்போம். எமது வீரர்கள் உடல் ரீதியாக குறைபாடு உடையவர்களாக இருந்தாலும், அவர்களும் சளைத்தவர்கள் அல்ல என்பதை முழு உலகிற்கும் நிரூபித்துக் காட்டி விட்டார்கள் என மகிழ்ச்சியுடன் அவர் கூறினார்.

Photos: Sri Lanka Deaf Cricket Team 2018/19

ThePapare.com | Waruna Lakmal | 08/12/2018 Editing and re-using …

அநுலாவின் முன்மாதிரி

இலங்கை செவிப்புலனற்றோர் அணி பராலிம்பிக் சங்கத்துடன் ஒன்றிணைந்து செயற்பட்டு வருகின்றது.

இந்த நிலையில், செவிப்புலனற்றோர் உலகக் கிண்ணத்தை வென்றமை குறித்து 1996 முதல் இலங்கை செவிப்புலனற்றோர் கிரிக்கெட் சங்கத்தின் தலைவியாக கடமையாற்றி வருகின்ற அநுலா ரன்ஞனி கருத்து வெளியிடுகையில்,

நான் 1996 முதல் இந்த சங்கத்தின் தலைவியாக செயற்பட்டு வருகின்றேன். எனது மகன் ஹேமஜித் வஜிர குமாரவும் செவிப்புலனற்ற வீரர் தான். முதலாவது செலவிப்புலனற்றோருக்கான உலகக் கிண்ணத்தில் இலங்கை அணிக்காக விளையாடிய அவர், தற்போது எமது சங்கத்தின் செயலாளராக உள்ளார். கொழும்பு மஹானாம கல்லூரியின் சிறப்பு கல்விப் பிரிவில் பாடசாலைக் கல்வியை மேற்கொண்ட அவர், அக்கல்லூரி கிரிக்கெட் அணிக்காகவும் விளையாடியுள்ளார்.

இதேநேரம், நாங்கள் நாடு பூராகவும் சென்றுதான் உலகக் கிண்ணத்துக்கான அணி வீரர்களைத் தெரிவு செய்தோம். அதன்பிறகு அவர்களுக்கு கொழும்பில் விசேட பயிற்சி முகாம்களை நடாத்தினோம். இதற்காக நாங்கள் கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் பயிற்சிகளைப் பெற்றோம்.

ஆனால், செவிப்புலனற்ற வீரர்களுக்கும் .சி.சியின் பொதுவான சட்டதிட்டங்கள்தான் பின்பற்றப்படுகின்றன. ஆனால், இவர்களுக்கு காது கேட்காது. வாய் பேச முடியாது. மற்றும்படி ஒரு சாதாரண வீரராக அவர்களால் அனைத்தையும் செய்ய முடியும். ரசிகர்களின் வெற்றிகளிப்பு மற்றும் ஆரவாரம் என்பவற்றையும் அவர்களால் நன்கு அறிந்து கொள்ள முடியும்.

அந்த காலத்தில் தான் செவிப்புலனற்ற பிள்ளைகளின் பெற்றோர்களையெல்லாம் ஒன்றுதிரட்டி இந்த சங்கத்தை ஆரம்பித்தேன். கடந்த 22 வருடங்களாக எமது சொந்த பணத்தைக் கொண்டுதான் இந்த சங்கத்தை நடத்தி வந்தோம். வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்கு எமது பிள்ளைகளை அழைத்துச் சென்றோம். ஆனால் பல்வேறு இன்னல்கள், கஷ்டங்களுக்கு மத்தியில் தான் நாம் இன்று உலகக் கிண்ணத்தை வென்றெடுத்தோம். எமக்கு உதவி செய்ய எவரும் முன்வரவில்லை. ஏன் விளையாட்டுத்துறை அமைச்சு எமது கோரிக்கைக்கு ஒருபோதும் செவி சாய்க்கவில்லை. நாம் பணம் கேட்டால் இல்லை என பதில் கிடைக்கும். ஆனால் இம்முறை அவர்களும் எமக்கு ஒத்துழைப்பு வழங்கியிருந்தனர். எனினும், வெளிநாட்டு சுற்றுப்பயணங்களின் போது இலங்கை கிரிக்கெட் நிறுவனம் எமக்கு தொடர்ந்து உதவிகளை வழங்கியிருந்ததை நன்றியுணர்வுடன் ஞாபகப்படுத்துகிறேன்.  

திலான் சமரவீரவின் ஓய்வும், குசலின் இரட்டைச் சதமும்

நியூசிலாந்து அணியுடனான டெஸ்ட் தொடர் நிறைவடைந்த ..

இதேநேரம், செவிப்புலனற்றோருக்கான டி-20 உலகக் கிண்ணத்துக்காக இந்தியாவிற்கு புறப்பட்டுச் செல்ல முன், ஜனாதிபதியினால் ஹோட்டலுக்கான பணமும், விளையாட்டுத்துறை அமைச்சினால் விமான டிக்கெட்டுக்கான பணமும், இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினால் 5 இலட்சம் ரூபா பணமும் இலங்கை செவிப்புலனற்றோர் அணிக்கு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, கடந்த 22 வருட காலமாக எமது செவிப்புலனற்றோர் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக ஜயலத் அபோன்சு செயற்பட்டு வருகின்றார். இன்றுவரை எந்தவொரு கொடுப்பனவும் இல்லாமல், இலவசமாக அவர் இந்த வீரர்களை பயிற்றுவித்து வருகின்றார்.

எனவே உங்கள் வீட்டிலும் செவிப்புலனற்ற பிள்ளைகள் இருந்தால் அவர்களிடம் இருக்கின்ற திறமைகளை முதலில் கண்டுபிடியுங்கள். அதிலும் அவர்களுக்கு கிரிக்கெட் விளையாடுகின்ற திறமை இருந்தால் உடனே அதன் பக்கம் அவருக்கு ஊக்குவிப்பு வழங்குங்கள். ஒருபோதும் அவர்களை வீடுகளில் முடக்கி வைக்க வேண்டாம். செவிப்புலனற்ற வீரர்களாலும் இந்த நாட்டுக்கு பெருமையைத் தேடிக் கொடுக்க முடியும் என்பதை நாம் தற்போது நிரூபித்து விட்டோம் எனவும் அவர் தெரிவித்தார்.

அமைச்சரின் உறுதி மொழி

இலங்கைக்கு மற்றுமொரு கிரிக்கெட் உலகக் கிண்ணமொன்றை வென்று கொடுத்த இலங்கை செவிப்புலனற்றோர் கிரிக்கெட் அணியை, இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் கீழ் கொண்டுவந்து அதை இலங்கை கிரிக்கெட்டின் ஒன்றிணைந்த சங்கமாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என முன்னாள் விளையாட்டுத்துரறை அமைச்சர் பைஸர் முஸ்தபா உறுதி அளித்துள்ளார்.

அதேபோல, இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த அனைத்து வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு தலா 500 அமெரிக்க டொலர்களை பரிசாக வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

2019இல் மற்றுமொரு உலகக் கிண்ணம்

இம்முறை இந்தியாவில் நடைபெற்ற அங்குரார்ப்பண டி-20 உலகக் கிண்ணத்தில் சம்பியனாக தெரிவாகிய இலங்கை அணி, அடுத்த வருட இறுதியில் ஐந்து நாடுகளின் பங்குபற்றலுடன் நடைபெறவுள்ள செவிப்புலனற்றோருக்கான சர்வதேச டி-20 போட்டித் தொடரில் விளையாடுவதற்கான வாய்ப்பையும் பெற்றுக் கொண்டுள்ளது.   

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க…