உலகக்கிண்ண வாய்ப்பு கிட்டுமா? – மனம் திறந்தார் உபுல் தரங்க

441
Tharanga

இலங்கை அணியின் அனுபவ ஆரம்ப துடுப்பாட்ட வீரரான உபுல் தரங்க தென்னாபிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் குழாமில் நீண்ட இடைவேளைக்கு பின்னர் இணைக்கப்பட்டுள்ளார். இறுதியாக, கடந்த ஒக்டோபர் மாதம் தம்புள்ளையில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் விளையாடிய இவர், ஓட்டங்களை பெறத் தவறியிருந்தமையால் அணியிலிருந்து நீக்கப்பட்டார்.

அதிரடி மாற்றங்களுடன் தென்னாபிரிக்காவை ஒருநாள் தொடரில் சந்திக்கும் இலங்கை

தமது தென்னாபிரிக்க சுற்றுப் பயணத்தை டெஸ்ட் தொடரில் கிடைத்த வரலாற்று…

இலங்கையில் நடைபெற்ற உள்ளூர் போட்டிகள், அயர்லாந்து A அணிக்கு எதிரான ஒருநாள் தொடர் மற்றும் பங்களாதேஷ் ப்ரீமியர் லீக் போன்ற தொடர்களில் பிரகாசித்திருந்த தரங்கவுக்கு மீண்டும் தேசிய அணியில் விளையாடும் வாய்ப்பு கிட்டியுள்ளது.

உலகக்கிண்ணம் ஆரம்பமாவதற்கு முன், இலங்கை அணி விளையாடும் சவாலான தொடராக தென்னாபிரிக்க அணிக்கு எதிரான இந்த தொடர் அமையவுள்ளது. இதற்கு பின்னர் ஸ்கொட்லாந்துடன் இலங்கை அணி இரண்டு ஒருநாள் போட்டிகளில் விளையாடவிருந்தாலும், தென்னாபிரிக்க தொடரில் பிரகாசிக்கும் வீரர்களுக்கு உலகக்கிண்ண தொடரில் விளையாடும் வாய்ப்பு அதிகமாகவுள்ளது.

உலகக்கிண்ண தொடருக்கான இடத்தை தக்கவைக்க இலங்கை வீரர்கள் போராடி வருகின்னர் அதிலும், ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களுக்கு கடும் போட்டி நிலவி வருகின்றது. உப தலைவர் நிரோஷன் டிக்வெல்ல ஆரம்ப துடுப்பாட்ட இடத்தை தக்கவைத்துள்ளதுடன், அவருடன் களமிறங்கும் வீரருக்கு அதிக போட்டித் தன்மை ஏற்பட்டுள்ளது. முக்கியமாக, தனுஷ்க குணதிலக்க, உபுல் தரங்க மற்றும் அவிஷ்க பெர்னாண்டோ ஆகியோருக்கு இடையில் இந்த போட்டி நிலவி வருகின்றது.

இவ்வாறு, ஆரம்ப துடுப்பாட்டத்துக்கு பல்வேறு போட்டிகள் நிலவி வரும் சந்தர்ப்பத்தில், அனுபவ வீரர் உபுல் தரங்கவுக்கு உலகக்கிண்ண அணியில் வாய்ப்பு கிடைக்குமா? என்பது கேள்விக்குறியாகியுள்ளது. அனுபவ ரீதியில் நேரடியாக உலகக்கிண்ணத்துக்கான அணிக்குள் செல்வதற்கான வாய்ப்பு இருந்த போதும், கடந்த காலங்களில் சர்வதேச போட்டிகளில் வெளிப்படுத்திய மோசமான துடுப்பாட்டமே அவரின் இந்த நிலைக்கு காரணமாகியுள்ளது.

இது இவ்வாறிருக்க, உபுல் தரங்க, எமது ThePapare.com இணையத்தளத்துக்கு பிரத்தியேகமாக வழங்கிய செவ்வியில், உலகக்கிண்ணத்தை நினைத்து எந்தவித பயனும் இல்லை. அடுத்து நடைபெறவுள்ள தென்னாபிரிக்க அணிக்கு எதிரான போட்டிகளில் அவதானம் செலுத்துவதே மிக முக்கியம் என கருத்து பகிர்ந்துள்ளார். இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த உபுல் தரங்க,

“உலகக்கிண்ணத்துக்கு முன்னதான இறுதி ஒருநாள் தொடர் இதுதான். இந்த தொடரில் பிரகாசிக்கும் பட்சத்தில் உலகக்கிண்ண குழாத்தில் இணைய முடியும். நான் கடந்த காலங்களில் தென்னாபிரிக்காவில் விளையாடி சிறந்த துடுப்பாட்டங்களை வெளிப்படுத்தியுள்ளேன். அதனால், நம்பிக்கை இருக்கிறது. ஆனாலும், இதுவொரு புதிய தொடர். அதுவும் தென்னாபிரிக்க அணியை அவர்களது சொந்த மண்ணில் எதிர்கொள்வதென்பது மிகவும் சவாலான விடயம்”

தென்னாபிரிக்க அழைப்பு பதினொருவர் அணிக்கு எதிரான பயிற்சிப் போட்டியில் விளையாடிய உபுல் தரங்க, 34 பந்துகளுக்கு 45 ஓட்டங்களை வேகமாக பெற்றுக் கொடுத்திருந்தார். “பயிற்சிப் போட்டியில் நாம் எதிர்கொண்ட பந்து வீச்சாளர்கள் சர்வதேச தரத்துக்கு பந்து வீசவில்லை. ஓரிரண்டு வீரர்கள் மாத்திரமே சிறப்பாக வீசினர். ஆனால், ஒருநாள் தொடரில் நாம் இதனை எதிர்பார்க்க முடியாது”

இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களுக்கிடையில் கடும் போட்டி நிலவி வருகின்றது. இதில் யார் உலகக்கிண்ண குழாத்தில் இடம்பெறுவார்கள் என்பதை அணி நிர்வகாம் இதுவரை உறுதிசெய்யவில்லை. ஆரம்ப துடுப்பாட்ட வீரருக்கான இடம் இந்த தொடரில் உறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

“உலகக்கிண்ண தொடருக்கான ஆரம்ப துடுப்பாட்ட இடத்துக்கு நான்கு அல்லது ஐந்து வீரர்களுக்கு இடையில் போட்டி நிலவி வருகின்றது. அதிர்ஷ்டம் ஒரு பக்கம் இருக்க, ஓட்டங்களையும் குவிக்க வேண்டும். இந்த தொடர் அனைவருக்கும் மிக முக்கிய தொடர். இந்த தொடரில் பிரகாசிக்கவில்லை என்றால், அடுத்த தொடரில் என்ன நடக்கும் என்பதை இப்போதே சிந்திக்க முடியும். அதனால், அடுத்த தொடர் குறித்து நான் சிந்திக்கவில்லை. நாம் நிகழ்காலத்தில் இருக்கிறோம். இப்போது நடைபெறவுள்ள போட்டிகளில் அதிக அவதானம் செலுத்துவதே மிகச் சிறப்பான விடயம்”

மார்வன் அட்டபத்துவுடன் ஒருநாள் போட்டிகளில் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய உபுல் தரங்க, இப்போது வரை அணிக்குள் நுழைந்த புதிய துடுப்பாட்ட வீரர்களுடனும், ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கியுள்ளார். இதில், இலங்கை அணியின் சாதனை ஆரம்ப துடுப்பாட்டங்களில் ஒரு தூணாகவும் தரங்க இருந்துள்ளார். ஆனால், தொடர்ச்சியாக பிரகாசிக்க முடியாத காரணத்தால், தொடர்ந்தும் அணியிலிருந்து நீக்கப்பட்டு வருகின்றார்.

தென்னாபிரிக்காவில் அதிரடியை வெளிக்காட்டிய இலங்கை வீரர்கள்

தென்னாபிரிக்க அழைப்பு பதினொருவர் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையில் பெனோனி…

“நான் 14 வருடங்கள் விளையாடி வருகின்றேன். ஆனால், என்னைப் போல் எந்த ஒரு வீரரும் அணியிலிருந்து நீக்கப்பட்டிருக்க மாட்டார்கள். கிட்டத்தட்ட 10 முறை நான் அணியிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறேன். ஆனால், உள்ளூர் போட்டிகள் மற்றும் வெளிநாட்டு தொடர்களில் சிறப்பாக பிரகாசித்து, ஒவ்வொரு முறையும் மீண்டு வந்திருக்கிறேன். இப்போது எனது தேவை வாய்ப்பு கிடைக்கும் போது, ஓட்டங்களை குவிக்க வேண்டும் என்பதுதான்”

இலங்கை அணி இறுதியாக தென்னாபிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த போது, உபுல் தரங்க மாத்திரமே சிறப்பாக துடுப்பெடுத்தாடியிருந்தார். அதில், கேப்டவுனில் நடைபெற்ற போட்டியில் சதம் ஒன்றையும் விளாசியிருந்தார்.

“தென்னாபிரிக்க வீரர்கள் மிக ஆக்ரோஷமாக பந்து வீசக்கூடியவர்கள். அவர்களது உயரம் வேகத்துக்கு மேலும் சாதகமாக அமையும். நாம் அங்கு சென்று விக்கெட்டை பாதுகாத்து துடுப்பெடுத்தாடினால், கட்டயாம் எங்களால் ஓட்டங்களை பெற முடியும். நான் கடந்த முறை சென்ற போது, ஏற்கனவே இங்கு சிறப்பாக துடுப்பெடுத்தாடிய வீரர்களுடன் கலந்துரையாடினேன். அவர்களின் ஆலோசனைகளுடன் எனது துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தி ஓட்டங்களை குவித்தேன்”

ஒருநாள் போட்டிகளில் 15 சதம் மற்றும் 37 அரைச் சதங்களை தரங்க பெற்றுள்ளார். இவர் வழமையாக ஆரம்ப துடுப்பாட்ட வீரராகவே களமிங்குவார். எனினும், கடந்த முறை தென்னாபிரிக்கா சென்றிருந்த போது, அணித் தலைவராக செயற்பட்ட இவர், மத்திய வரிசை துடுப்பாட்ட வீரராகவே களமிறங்கியிருந்தார்.

“தென்னாபிரிக்கா சென்ற போது, மெதிவ்ஸ் மற்றும் சந்திமால் அணியில் இல்லை. டிக்வெல்ல மற்றும் குணதிலக்க ஆகியோர் சிறந்த இளம் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக இருந்தனர். மத்திய வரிசையை பலப்படுத்த வேண்டிய கட்டயாம் ஏற்பட்டது. தேர்வுக்குழுவினர் என்னிடம் கேட்டனர். நான் ஒரு இளம் வீரரை அந்த இடத்துக்கு அனுப்புவதை விடவும், அணிக்காக அந்த சவாலை ஏற்று மத்திய வரிசை வீரராக களமிங்கினேன்”

ஆரம்ப துடுப்பாட்ட வீரராக இருந்து அணிக்காக மத்திய வரிசையில் துடுப்பெடுத்தாடுவது அணிக்கு சாதகத்தை ஏற்படுத்தும். எனினும், தனிப்பட்ட ரீதியில் குறித்த விடயம் வீரரை பாதிக்குமா? என்பதையும் தரங்க விளக்கியுள்ளார்.

>>Photos : Sri Lanka vs South Africa Invitation XI – Tour Match 2019<<

“ஆம். தனிப்பட்ட ரீதியில் அந்த முடிவு வீரரை பாதிக்கும். மத்திய வரிசையில் இருந்த முக்கிய வீரர்கள் அணியில் இல்லை. புதிய ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் வேகமாக ஓட்டங்களை குவிக்கின்றனர். ஆனால், மத்தியவரிசையில் இளம் வீரர்கள் ஓட்டங்களை குவிக்க தவறுகின்றனர். இது போன்ற சந்தர்ப்பங்களில் நாம் எமது இடத்தை இழந்துதான் ஆக வேண்டும். அது தான் எனக்கும் நடந்தது. ஆனால், நான் அதனை நினைத்து வருத்தப்படவில்லை. அதேநேரம், எனது இடத்தை எடுத்துக்கொண்டு, சுயநலவாதியாக செயற்படவும் நான் விரும்பவில்லை” என்றார்.

இலங்கை அணி பயிற்சிப் போட்டியில் மிகச் சிறந்த வெற்றியை பதிவுசெய்த நிலையில், தென்னாபிரிக்க – இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி நாளைய தினம் (03) பிற்பகல் 01.30 மணிக்கு (இலங்கை நேரம்) ஜொஹன்னெஸ்பேக்கில் உள்ள வொண்டரஸ் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<