திரித்துவக் கல்லூரியை வீழ்த்தி கிண்ணத்தை சுவீகரித்த புனித தோமியர் கல்லூரி

190

கண்டி திரித்துவக் கல்லூரி மற்றும் கல்கிஸ்சை புனித தோமியர் கல்லூரிகளுக்கு இடையிலான 8ஆவது வருடாந்த கால்பந்தாட்டப் போட்டியில், 1-0 என்ற கோல் வித்தியாசத்தில் புனித தோமியர் கல்லூரி வெற்றிபெற்று கிண்ணத்தை சுவீகரித்தது.

திரித்துவக் கல்லூரியின் மைதானமான கண்டி பல்லேகலை மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியானது, சற்று தாமதித்த நிலையிலேயே ஆரம்பித்தது. கடந்த வருடம் நடைபெற்ற போட்டி வெற்றி தோல்வியின்றி முடிந்த நிலையில், இன்றைய போட்டியில் வெற்றிபெற்று கிண்ணத்தை வெல்லும் எதிர்பார்ப்பில் இரண்டு அணிகளும் களம் இறங்கின.

மேல் மாகாணத்தில் திறமையை வெளிக்காட்டிய புனித தோமியர் கல்லூரியானது, போட்டியில் முழு ஆதிக்கம் செலுத்தும் என எதிர்பார்க்கப்பட்ட பொழுதும் , திரித்துவக் கல்லூரியானது தனது இளம் அணியுடன் புனித தோமியர் அணிக்கு கடும் சவாலைக் கொடுத்தது.

போட்டியின் ஆரம்பத்தில் புனித தோமியர் கல்லூரியானது ஆதிக்கம் செலுத்தியது. அவ்வகையில் புனித தோமியர் கல்லூரிக்கு இரண்டு கோர்னர் உதைகள் கிடைத்த பொழுதும், அவற்றை பயன்படுத்தி ஆரம்பத்திலேயே கோல் ஒன்றை பெற்றுக்கொள்ள புனித தோமியர் கல்லூரி தவறியது.

அதனைத் தொடர்ந்து வேகமான ஆட்டத்தை வெளிப்படுத்திய திரித்துவக் கல்லூரியானது, கோல் அடிப்பதற்கான பல வாய்ப்புகளை உருவாக்கிக்கொண்டது. அவ்வகையில் குறுக்கே இருந்து பெறப்பட்ட பந்து பரிமாற்றத்தை, திரித்துவக் கல்லூரி முன்வரிசை வீரர் தலையால் முட்டி கோல் நோக்கி அடித்த பொழுதும், புனித தோமியர் கல்லூரியின் கோல் காப்பாளரினால் அம்முயற்சி சிறப்பாக தடுக்கப்பட்டது.

தொடர்ந்து இரு அணிகளுக்கும் கோல் அடிப்பதற்கான சிறந்த வாய்ப்புகள் கிடைத்த பொழுதும், இரண்டு அணிகளும் மேற்கொண்ட சிறு தவறுகளினால் அவ் வாய்ப்புகள் வீணடிக்கப்பட்டன. முதல் பாதியில் இரண்டு அணிகளும் சமனான ஆதிக்கம் செலுத்தி வந்தன. இரண்டு அணிகளும் மாறி மாறி, எதிரணியின் கோட்டைக்குள் பந்தை எடுத்து சென்று கோல் அடிக்க முயற்சி செய்தமை குறிப்பிடத்தக்கது.

மலியதேவ கல்லூரியை இலகுவாய் வீழ்த்திய புத்தளம் ஸாஹிரா

புத்தளம் ஸாஹிரா கல்லூரி மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியானது…

முதல் பாதி நிறைவடைய 5 நிமிடங்கள் எஞ்சியிருந்த நிலையில், புனித தோமியர் கல்லூரியானது அற்புதமான கோல் ஒன்றின் மூலம் முன்னிலை அடைந்தது. குறுக்கே இருந்து பெனால்டி எல்லைக்குள் உதைக்கப்பட்ட பந்தை, புனித தோமியர் கல்லூரியின் ஷெனால் டி அல்விஸ் தலையினால் முட்டி பந்தை கோல் கம்பத்திற்குள் செலுத்தினார். திரித்துவக் கல்லூரியின் கோல் காப்பாளருக்கு பந்தை எவ்வகையிலும் பிடிக்க முடியாதவாறு, மிக அற்புதமான கோலை புனித தோமியர் கல்லூரி அடித்தது.

முதல் பாதியில் இரண்டு அணிகளும் வேறு கோல்கள் அடிக்காத நிலையில், முதலாம் பாதி முடிவடையும் பொழுது புனித தோமியர் கல்லூரி முன்னிலை வகித்தது.

முதல் பாதி: புனித தோமியர் கல்லூரி 1-0 திரித்துவக் கல்லூரி

இரண்டாம் பாதியில், ஏற்கனவே முன்னிலை பெற்ற புனித தோமியர் கல்லூரியானது மிக நிதானமாகவும், பந்தை தூர நகர்த்தியும் விளையாடுவதை காணக்கூடியதாக இருந்தது. அதேவேளை ஒரு கோல் பின் தள்ளி இருந்த திரித்துவக் கல்லூரியானது, கோல் ஒன்றை அடித்து சமநிலை செய்ய வேண்டும் என்ற கட்டாயத்தில் சிறிது பதற்றமாக விளையாடுவதை காணக்கூடியதாக இருந்தது.

நிதானமாக மற்றும் சிறப்பாக விளையாடிய புனித தோமியர் கல்லூரிக்கு கோல் அடிப்பதற்கான இரண்டு சிறந்த வாய்ப்புகள் கிடைக்கப்பெற்றன. திரித்துவக் கல்லூரி கோல் காப்பாளரை தனியாக, நேருக்கு நேர் சந்தித்த புனித தோமியர் கல்லூரியின் முன்கள வீரர் இரண்டு வாய்ப்புகளையும் தவறவிட்டார். திரித்துவக் கல்லூரியின் பின் கள வீரரான மாஹோக தனது அணியின் பின் வரிசையை தாங்கி நிறுத்தினார். அதேவேளை கோல் காப்பாளரும் பந்தை சிறப்பாக தடுத்தார்.

புனித தோமியர் கல்லூரியின் ஜீவோனி கனகசுந்தரதிற்கு நடுவரினால் மஞ்சள் அட்டை காட்டப்பட்டது. தொடர்ந்து பெனால்டி எல்லைக்கு வெளியே கிடைத்த தண்ட உதையை, திரித்துவக் கல்லூரியின் தலைவரான தாரிக சிறப்பாக உதைத்த பொழுதும், புனித தோமியர் கல்லூரியின் கோல் காப்பாளரின் அசாத்திய திறமையினால், திரித்துவக் கல்லூரியின் அம்முயற்சியும் முறியடிக்கப்பட்டது.

10 வீரர்களுடன் ஹமீத் அல் ஹுசைனியை வீழ்த்தியது ஸாஹிரா கல்லூரி

ஹமீத் அல் ஹுசைனி கல்லூரியை 1-0 என்ற கோல் கணக்கில்…

திரித்துவக் கல்லூரியின் முன் கள வீரரான திவ்யன் சிறப்பாக விளையாடிய பொழுதும் அவரால் கோல் எதுவும் பெற முடியவில்லை. திவ்யன் கோல் காப்பளாரை நேருக்கு நேர் தனியே சந்தித்த தருணத்திலும் கோல் அடிக்க தவறியது திரித்துவக் கல்லூரிக்கு ஏமாற்றமாக அமைந்தது.

புனித தோமியர் கல்லூரியின் போல் விமலதாஸ் மற்றும் ஆகில் மரிக்கார் ஆகிய வீரர்களுக்கு நடுவர் மஞ்சள் அட்டை வழங்க, இப்போட்டியில் புனித தோமியர் கல்லூரியின் மூன்று வீரர்கள் மஞ்சள் அட்டை பெற்றுக்கொண்டமை குடிப்பிடத்தக்கது.

தொடர்ந்து திரித்துவக் கல்லூரி கோல் அடிப்பதற்கு பல முயற்சிகள் செய்தாலும், புனித தோமியர் கல்லூரியின் கோல் காப்பாளரினால் அவை முறியடிக்கப்பட்டது. போட்டியின் இறுதி சில நிமிடங்கள் விறுவிறுப்பாக அமைந்தாலும், இரண்டு அணிகளாலும் எந்த ஒரு கோலையும் இரண்டாம் பாதியில் அடிக்க முடியவில்லை.

இறுதியில் புனித தோமியர் கல்லூரியானது, திரித்துவக் கல்லூரியை 1-0 என்ற கோல் அடிப்படையில் வெற்றிபெற்று  கிண்ணத்தை சுவீகரித்தது.

முழு நேரம்: புனித தோமியர் கல்லூரி 1-0 திரித்துவக் கல்லூரி

இரு அணிகளுக்கு இடையிலான 16 வயதிற்கு உட்பட்ட போட்டியிலும், புனித தோமியர் கல்லூரியானது 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது.