ICC யின் ஒழுக்க விதியை மீறியமைக்காக தமிம் இக்பால், இம்ருல் கய்சுக்கு அபராதம்

558
Tamim Iqbal

இலங்கை அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாளில், சர்வதேச கிரிக்கெட் சபையின் (ICC) ஒழுக்க விதியை மீறிய குற்றசாட்டுக்காக பங்களாதேஷ் அணியின் துடுப்பாட்ட வீரர்களான தமிம் இக்பால் மற்றும்  இம்ருல் கய்ஸ் ஆகியோரின் போட்டி சம்பளத்திலிருந்து 15 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

சந்திமாலின் சதத்துடன் மீண்ட இலங்கை : அபார ஆட்டத்தைக் காட்டிய பங்களாதேஷ் ஆரம்ப வீரர்கள்

இவர்கள் இருவரும் ஐசிசி யின் ஒழுக்க கோவையின் வரைபு 2.1.1இன் விதிகளை மீறி, கிரிக்கெட் போட்டியை பாதிக்கக் கூடிய வகையில் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் போட்டி நடுவர்களுக்கு முரணான வகையில் நடந்து கொண்டமை உறுதி செய்யப்பட்டுள்ளது.  

LBW முறையிலான ஆட்டமிழப்புக்காக இலங்கை வீரர்கள் களநடுவரிடம் வேண்டுகோள் விடுத்தபோது தமிம் இக்பால் தன்னுடைய துடுப்பாட்ட மட்டையை காட்டி மட்டையில் பந்து பட்டதாக சைகை செய்தார். அதேபோன்று, பிடி எடுப்புக்காக வேண்டுகோள் விடுத்த இலங்கை களத்தடுப்பு வீரர்களுக்கு மத்தியில் இமருள் தனது உடம்பில் பட்ட பந்தினை பிடித்ததாக களநடுவர்களுடம் விதிமுறைகளை மீறும் விதத்தில் சைகை செய்திருந்தார்.

குறித்த சம்பவங்களுக்கு பின்னர் இவ்விருவரும் தாம் செய்த தவறினை ஏற்றுகொண்டதோடு, ஐசிசி யின் உயரிய நடுவரான என்டி பைக்ரோப்ட்டினால் முன்மொழியப்பட்ட அபராதங்களை ஏற்றுக்கொண்டனர். அத்துடன் இது போன்ற சிறிய குற்றங்களுக்கு விசாரணைகள் அவசியமில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

குறித்த குற்றச்சாட்டானது களநடுவர்களான  அலீம் தார், சுந்தரம் ரவி, மூன்றாவது நடுவர் மறைஸ் ஏறஸ்மஸ் மற்றும் ருசிர பள்ளியகுருகே ஆகியோரினால் சுமத்தப்பட்டிருந்தது.  

இது ஒரு சிறிய குற்றம் என்பதால் இவ்விரு வீரர்களும் மென்மையான தண்டனைகளே வழங்கப்பட்டுள்ளன. எனினும், 2016ஆம் ஆண்டு செப்டம்பர் 22ஆம் திகதி முதல் நடைமுறையில் இருக்கும் புதிய வரைபு 7.3 விதிமுறைக்கமைய கிரிக்கெட் வீரர்கள் விடும் தவறுகளுக்கு புள்ளிகள் வழங்கப்பட்டு அவர்களுடைய ஒழுக்கம் சார்ந்த பதிவேடுகளில் அவை பதிவு செய்யப்படும்.    

அந்த வகையில் ஒரு வீரருக்கு 24 மாதங்களுக்குள் நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட புள்ளிகள் பதியப்பட்டால், அதனை தொடர்ந்து வரும் போட்டிகளிலிருந்து அவருக்கு தடை விதிக்கப்படக்கூடிய சாத்தியங்கள் காணப்படுகின்றன. இரண்டு புள்ளிகள் என்பது, ஒரு டெஸ்ட் போட்டித் தடை அல்லது இரண்டு சர்வதேச ஒருநாள் போட்டிகள் அல்லது இரண்டு T-20 போட்டித் தடைகளாக அமையலாம்.  அதில் எந்தப் போட்டி முதலில் நடைபெறுகின்றதோ அந்த போட்டியில் தடை விதிக்கப்படும்  என்பதும் குறிப்பிடத்தக்கது.