சுதந்திரக் கிண்ண முத்தரப்பு T20 தொடரில் இலங்கை அணி நிர்ணயித்த 215 என்ற கடினமான வெற்றி இலக்கை எட்டி பங்களாதேஷ் அணி 5 விக்கெட்டுகளால் சாதனை வெற்றி ஒன்றை பெற்றது. இதன் மூலம் மூன்று அணிகளும் தொடரில் தலா ஒரு வெற்றி, ஒரு தோல்வியுடன் உள்ளன.

[rev_slider LOLC]

இதன் போது குசல் பெரேரா மீண்டும் ஒரு முறை தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் 74 ஓட்டங்களை விளாசி இலங்கை அணிக்கு பலம் சேர்த்தபோதும் அதற்கு நிகராக முஷ்பிகுர் ரஹிம் ஆட்டமிழக்காது 72 ஓட்டங்களை சேர்த்து பங்களாதேஷ் அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் தொடரின் மூன்றாவது போட்டியாக சனிக்கிழமை (10) நடைபெற்ற இந்த ஆட்டத்தில் மழை காரணமாக 15 நிமிடங்கள் தாமதித்தே நாணய சுழற்சி இடம்பெற்றது. அதனை வென்ற பங்களாதேஷ் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது. இரு அணிகளும் இந்தியாவுடன் நடைபெற்ற முதல் போட்டியில் விளையாடிய அதே பதினொருவருடனேயே களமிறங்கின.

இந்நிலையில் முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய இலங்கை அணி ஆரம்ப விக்கெட்டுக்கு 56 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்து கொண்டது. தனுஷ்க குணதிலக்க 19 பந்துகளுக்கு 26 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்த பின்னர் இணைந்த குசல் மெண்டிஸ் மற்றும் குசல் ஜனித் பெரேரா இருவரும் பௌண்டரிகளையும் சிக்ஸர்களையும் விளாசி இலங்கை அணியின் ஓட்டங்களை வேகமாக அதிகரிக்கச் செய்தனர். 

குசல் பெரேராவின் அதிரடி துடுப்பாட்டத்தால் இந்தியாவை வீழ்த்திய இலங்கை

இருவரும் இணைந்து இரண்டாவது விக்கெட்டுக்கு 53 பந்துகளில் 86 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்து கொண்டனர். குசல் மெண்டிஸ் T20 அரங்கில் தனது 3ஆவது அரைச்சதத்தை பெற்றார். 30 பந்துகளுக்கு முகம்கொடுத்த அவர் 2 பௌண்டரிகள் 5 சிக்ஸர்களுடன் 57 ஓட்டங்களை பெற்றார். குறிப்பாக குசல் மெண்டிஸ் கடைசியாக விளையாடிய 4 போட்டிகளில் 3 அரைச்சதங்களை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  

மறுபுறம் மீண்டும் ஒருமுறை தனது அதிரடி துடுப்பாட்டத்தை வெளிப்படுத்திய குசல் பெரேரா கடைசி ஓவர் வரை களத்தில் இருந்து 48 பந்துகளில் 8 பௌண்டரிகள் 2 சிக்ஸர்களுடன் 74 ஓட்டங்களை குவித்தார். கடைசி நேரத்தில் வந்த உபுல் தரங்கவும் 15 பந்துகளில் ஆட்டமிழக்காது 32 ஓட்டங்களைப் பெற்று இலங்கை அணிக்கு பலம் சேர்த்தார்.

இதன் மூலம் இலங்கை அணி 20 ஓவர்களுக்கும் 6 விக்கெட்டுகளை இழந்து 214 ஓட்டங்களை குவித்தது. இது T20 சர்வதேச போட்டிகளில் இலங்கை அணி பெற்ற நான்காவது அதிகூடிய ஓட்டங்கள் என்பதோடு ஆர். பிரேமதாச மைதானத்தில் பெறப்பட்ட அதிபட்ச ஓட்டங்களாகவும் இருந்தது.

இலங்கை அணியின் துடுப்பாட்ட வேகத்தை தடுக்க பங்களாதேஷ் பந்துவீச்சாளர்களால் முடியாமல் போனபோதும் முஸ்தபிசுர் ரஹ்மான் தனது 4 ஓவர்களுக்கும் 48 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.

இந்நிலையில் பதிலுக்கு துடுப்பாட களமிறங்கிய பங்களாதேஷ் அணி தேவைப்படும் ஓட்ட வேகத்தை ஆரம்பம் முதல் தக்கவைத்துக் கொண்டது. ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான தமிம் இக்பால் மற்றும் லிடோன் தாஸ் அடுத்தடுத்து பௌண்டரிகள், சிக்ஸர்கள் என விளாசினர். இருவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 35 பந்துகளில் 74 ஓட்டங்களை பெற்றனர். தமிம் 29 பந்துகளில் 47 ஓட்டங்களை பெற்றதோடு சிக்ஸர் மழை பொழிந்த லிடொன் தாஸ் 5 சிக்ஸர்களுடன் 19 பந்துகளில் 43 ஓட்டங்களை விளாசினார்.

எனினும் பங்களாதேஷ் அணி 63 பந்துகளில் 115 ஓட்டங்களைப் பெற வேண்டிய நெருக்கடியான நேரத்தில் களமிறங்கிய முஷ்பிகுர் ரஹிம் யாரும் எதிர்பாராத விதமாக போட்டியை பங்களாதேஷ் அணிக்கு சாதகமாக திசை திருப்பினார். குறிப்பாக முஷ்பிகுர் ரஹீம் பங்களாதேஷ் அணி எடுக்க வேண்டிய ஓட்டங்களை கணிப்பிட்டே அதற்கேற்றவாறு ஓட்ட வேகத்தை உயர்த்தியதை காணமுடிந்தது.

இதனால் எட்ட முடியுமான ஓட்ட வேகத்தை பின்பற்றி வந்த பங்களாதேஷ் அணிக்கு கடைசி 4 ஓவர்களுக்கும் 40 ஓட்டங்கள் எடுக்க வேண்டி ஏற்பட்டது. அப்போது ஜீவன் மெண்டிஸின் பந்துக்கு முஷ்பிகுர் விளாசிய சிக்ஸர் பங்களாதேஷ் அணிக்கு போட்டியை தமது பக்கம் திசை திருப்ப உதவியது. எனினும் அணித்தலைவர் மஹ்மதுல்லாஹ் மற்றும் சப்பிர் ரஹ்மானின் விக்கெட்டுகள் விரைவாக வீழ்ந்தது இலங்கை அணிக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியது.

மத்திய வரிசை சிறப்பாக இல்லாதபோதும் வெற்றி நம்பிக்கைதருகிறது – குசல் பெரேரா

எனினும் பங்களாதேஷ் அணி 8 பந்துகளுக்கு 16 ஓட்டங்களை எடுக்க வேண்டி இருந்தபோது முஷ்பிகுர் மிட் விக்கெட் திசையால் நுவன் பிரதீபின் பந்துக்கு சிக்ஸர் ஒன்றை விளாசியபோது இலங்கை அணியின் எதிர்பார்ப்பு சிதறியது. கடைசி ஓவருக்கு 9 ஓட்டங்களைப் பெற வேண்டிய நிலையில் திசர பெரேரா பந்துவீச வந்தார். எனினும் துடுப்பெடுத்தாடிய முஷ்பிகுர் முதல் பந்தில் இரண்டு ஓட்டங்களையும் அடுத்த பந்தில் பௌண்டரியையும் விளாசியதோடு நான்காவது பந்தில் வெற்றி ஓட்டத்தைப் பெற்றார்.      

இதன் மூலம் பங்களாதேஷ் அணி 19.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கான 215 ஓட்டங்களை எட்டியது. பங்களாதேஷ் அணி T20 போட்டிகளில் பெற்ற அதிகூடிய ஓட்டங்கள் இதுவாகும். இதற்கு முன்னர் கடந்த பெப்ரவரியில் டாக்காவில் இலங்கைக்கு எதிராக பெற்ற 193 ஓட்டங்களே அதிகமாக இருந்தது. 

பங்களாதேஷ் அணி சார்பாக அபாரமாக துடுப்பெடுத்தாடிய முஷ்பிகுர் ரஹிம் 35 பந்துகளில் 5 பௌண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் ஆட்டமிழக்காது 72 ஓட்டங்களை பெற்றார். இது அவர் T20 போட்டிகளில் பெற்ற 3ஆவது அரைச்சதமாகும். அத்துடன் T20 போட்டிகளில் இதுவே அவரது அதிகபட்ச ஓட்டமாகும். இதன் மூலம் அவர் போட்டியின் ஆட்ட நாயகன் விருதையும் வென்றார்.

ஏழு பந்துவீச்சாளர்களை பயன்படுத்திய இலங்கை அணி சார்பில் நுவன் பிரதீப் தனது 4 ஓவர்களுக்கும் 37 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.    

சுதந்திரக் கிண்ண முத்தரப்பு T20 தொடரின் அடுத்த போட்டி இலங்கை இந்திய அணிகளுக்கிடையே மார்ச் மாதம் 12ஆம் திகதி நடைபெறவுள்ளது.

ஸ்கோர் விபரம்