உபுல் தரங்க மற்றும் தனுஷ்க குணத்திலக்க ஆகியோரின் அதிரடியோடு சில்லெட் சிக்ஸர்ஸ் அணியினர் ராஜாஷி கிங்ஸ் அணியை 33 ஓட்டங்களால் வீழ்த்தி இந்தப் பருவகாலத்திற்கான பங்களாதேஷ் பிரிமியர் லீக் (BPL) டி20 தொடரில் தமது தொடர்ச்சியான மூன்றாவது வெற்றியைப் பதிவு செய்துள்ளனர்.

நவம்பர் மாதம் 4 ஆம் திகதி முதல் ஆரம்பமாகி நடைபெற்றுவரும் பங்களாதேஷ் பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரின் இந்த ஆறாவது போட்டியில் சில்லெட் சிக்ஸர்ஸ் அணி ராஜாஷி கிங்ஸ் அணியை எதிர்கொண்டிருந்தது.

சில்லெட் சர்வதேச மைதானத்தில் ஆரம்பமாகியிருந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ராஜாஷி கிங்ஸ் அணியின் தலைவர் டெரன் சமி முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தை சில்லெட் சிக்ஸர்ஸ் அணிக்கு வழங்கியிருந்தார்.

இதனையடுத்து, இத்தொடரில் தாம் ஏற்கனவே பங்குபற்றிய இரண்டு போட்டிகளிலும் வெற்றியை சுவைத்திருந்த சில்லெட் சிக்ஸர்ஸ் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான உபுல் தரங்க மற்றும் அன்ட்ரூ ப்ளெச்சர் ஆகியோர் துடுப்பாட்டத்தை ஆரம்பம் செய்ய மைதானம் விரைந்திருந்தனர்.

எதிரணி பந்துவீச்சாளர்களுக்கு மிகவும் நெருக்கடி தந்து அதிரடியாக ஆடிய தரங்க மற்றும் மேற்கிந்திய தீவுகளின் ப்ளெச்சர் ஆகியோர் மூலம் முதல் விக்கெட் இணைப்பாட்டமாக 101 ஓட்டங்கள் பகிரப்பட்டிருந்தது. சில்லெட் சிக்ஸர்ஸ் அணியின் முதல் விக்கெட்டாக பறிபோயிருந்த அன்ட்ரூ ப்ளெச்சர் 30 பந்துகளில் 3 சிக்ஸர்கள் மற்றும் 5 பவுண்டரிகள் அடங்கலாக 48 ஓட்டங்களைக் குவித்திருந்தார்.

ப்ளெச்சர் ஆட்டமிழந்து சிறிது நேரத்தில் மறுமுனையில் அதிரடியாக ஆடி அரைச்சதத்துடன் அணியை வலுப்படுத்தியிருந்த உபுல் தரங்கவும் நியூசிலாந்து வீரரான ஜேம்ஸ் பிராங்ளின் மூலம் ஆட்டமிழக்கச் செய்யப்பட்டிருந்தார். இத்தொடரில் மூன்றாவது தடவையாக தொடர்ச்சியான அரைச்சதம் விளாசியிருந்த உபுல் தரங்க மொத்தமாக 37 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கலாக 50 ஓட்டங்களைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்திய மண்ணில் வெல்ல வேண்டும் என்பதுதான் எனது கனவு: ஹேரத்

இரண்டு விரைவான விக்கெட்டுகளைப் பறிகொடுத்திருந்த போதும் தடுமாறாத சில்லெட் சிக்ஸர்கள் அணியில் மத்திய வரிசை வீரர்களான தனுஷ்க குணத்திலக்க மற்றும் ரோஸ் வைட்லேய் ஆகியோர் துரித கதியில் துடுப்பாட, 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை பறிகொடுத்து சில்லெட் சிக்ஸர்ஸ் 205 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

சில்லெட் சிக்ஸர்ஸ் அணி சார்பாக துடுப்பாட்டத்தில் ஜொலித்த தனுஷ்க குணத்திலக்க வெறும் 22 பந்துகளில் 3 சிக்ஸர்கள்  மற்றும் 2 பவுண்டரிகள் உள்ளடங்கலாக 42 ஓட்டங்களைப் பெற்றிருந்தார். அத்தோடு இறுதிவரை ஆட்டமிழக்காமல் நின்ற ரோஸ் வைட்லேய் 12 பந்துகளுக்கு 25 ஓட்டங்களை குவித்து அணிக்கு பெறுமதி சேர்ந்திருந்தார்.

ராஜாஷி கிங்ஸ் அணியின் பந்துவீச்சில் மேற்கிந்திய தீவுகளின் வலதுகை வேகப்பந்துவீச்சாளரான கெஸ்ரிக் வில்லியம்ஸ் 39 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருந்தார்.

தொடர்ந்து 20 ஓவர்களில் நிர்ணயம் செய்யப்பட்ட கடின வெற்றி இலக்கான 206 ஓட்டங்களைப் பெற பதிலுக்கு துடுப்பாடியிருந்த ராஜாஷி கிங்ஸ் அணி நல்லதொரு ஆரம்பத்தை தந்திருந்த போதிலும் பாரிய இலக்கை அடையப் போதுமான அளவுக்கு விரைவாக ஓட்டங்கள் சேர்த்திருக்கவில்லை.

இதனால், 20 ஓவர்கள் நிறைவில் ராஜாஷி கிங்ஸ் அணி 8 விக்கெட்டுகளைப் பறிகொடுத்து 172 ஓட்டங்களை மாத்திரம் பெற்று போட்டியில் தோல்வியைத் தழுவியது.

ராஜாஷி கிங்ஸ் அணியின் துடுப்பாட்டத்தில் அதிகபட்சமாக இங்கிலாந்தின் லூக் ரைட் 39 பந்துகளுக்கு 4 சிக்ஸர்கள் மற்றும் 3 பவுண்டரிகள் அடங்கலாக 56 ஓட்டங்களைக் குவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அத்தோடு ஜேம்ஸ் பிராங்ளின் 35 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.

சில்லெட் சிக்ஸர்ஸ் அணி சார்பாக பந்துவீச்சில் அபுல் ஹசன் மற்றும் லியம் ப்ளென்க்கெட் ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகள் வீதம் பெற்று தமது தரப்பினை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றனர்.

போட்டியின் ஆட்ட நாயகன் விருது அதிரடியாக செயற்பட்ட தனுஷ்க குணத்திலக்கவுக்கு வழங்கப்பட்டது.

போட்டியின் சுருக்கம்

சில்லெட் சிக்ஸர்ஸ் – 205/6 (20) – உபுல் தரங்க 50(37),  அன்ட்ரூ ப்ளெச்சர் 48(30), தனுஷ்க குணத்திலக்க 42(22), கெஸ்ரிக் வில்லியம்ஸ் 39/2(4)

ராஜாஷி கிங்ஸ் – 172/8 (20) – லூக் ரைட் 56(39), ஜேம்ஸ் பிராங்க்ளின் 35(23), அபுல் ஹசன் 22/3(4), லியம் ப்ளென்க்கெட் 29/3(4)

முடிவு – சில்லெட் சிக்ஸர்ஸ் அணி 33 ஓட்டங்களால் வெற்றி