இலங்கையில் தடகள விளையாட்டின் மதிப்பு மிகவும் குறைந்துள்ளது – சுசந்திகா ஜயசிங்க

844
Silver-medalist-Susanthika-Jayasinghe

இலங்கைத் தீவிற்கு ஒலிம்பிக் பதக்கமொன்றை பெற்றுத் தந்த சாதனை மங்கையான சுசந்திகா ஜயசிங்க சில தினங்களுக்கு முன்னர் தியகம மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் இடம்பெற்ற மெய்வல்லுனர் தெரிவுப் போட்டிகளின் போது ThePapare.com இற்கு வழங்கிய செவ்வி பின்வருமாறு:

தியகமவில் இடம்பெற்ற தெரிவுப் போட்டிகள் தொடர்பில் உங்களது கருத்து என்ன?

சர்வதேச மட்டப் போட்டிகளுக்கான வீரர்களை தெரிவு செய்யும் நோக்குடனும், திறமைமிக்க வீரர்களைக் கொண்ட குழாம் ஒன்றை தெரிவு செய்து பயிற்சிகளை வழங்குவதற்காகவும் இத்தெரிவுப் போட்டிகள் இடம்பெறுவதாக நான் அறிகின்றேன்.

தற்போதைய தடகள வீர வீராங்கனைகள் பற்றிய உங்களது எண்ணம்?

தற்கால வீரர்களையும் கடந்த காலத்தில் போட்டிகளில் ஈடுபட்ட வீரர்களையும் ஒப்பிடும் போது, எங்களது காலத்தில் வீரர்கள் மிகுந்த அர்ப்பணிப்புடன் போட்டிகளில் கலந்து கொண்டனர். நாம் தற்கால வீரர்களை விட அதிக அக்கறையுடனும் அர்ப்பணிப்புடனும் பயிற்சிகளில் ஈடுபட்டோம். அத்துடன் அக்காலத்தில் திறமையான, அனுபவமிக்க, விளையாட்டில் பெயர் பதித்த பயிற்சியாளர்களே எமக்கு பயிற்சியளித்தனர்.

தியகம மைதானம் பற்றி தாங்கள் என்ன நினைக்கின்றீர்கள்?

நான் உலகின் பல நாடுகளில் பல மைதானங்களில் ஓட்டப்போட்டிகளில் ஈடுபட்டுள்ளேன். இலங்கை சார்பில் அதிகளவிலான போட்டிகளில் பங்கேற்றுள்ள வீராங்கனையும் நான் என நினைக்கின்றேன். நான்கு ஒலிம்பிக் போட்டிகள் உள்ளடங்கலாக ஆசிய, ஐரோப்பிய கண்டங்களில் இடம்பெற்ற பல முன்னணி சுற்றுப் போட்டிகளில் நான் பங்கேற்றிருக்கின்றேன். உலகின் சிறந்த 10 வீராங்கனைகளில் ஒருவராக நான் 8 வருடங்கள் காணப்பட்டேன். எனது அனுபவம் மற்றும் அறிவின்படி இந்த மைதானமானது ஓட்டப் போட்டிகளில் சிறந்த நேரத்தை பதிவு செய்வதற்கு ஏற்ற மைதானம் அல்ல.

இந்த நிலைமைக்கு யார் பொறுப்புக்கூற வேண்டும் என நினைக்கின்றீர்கள்?

விளையாட்டிற்கு பொறுப்பாக உள்ள அதிகாரிகளே இவ்வாறான நிலை ஏற்படுவதற்கு மூல காரணமாக உள்ளனர். நாம் இவ்விளையாட்டின் மூலம் சர்வதேச மட்டத்தில் இலங்கையின் பெயரை ஒலிக்கச் செய்திருந்தோம். ஆனால் இன்று அதனை முற்றிலுமாக இல்லாதொழித்துள்ளனர். விளையாட்டிற்கு வழங்கப்பட்ட மதிப்பு இன்று நன்றாக குறைந்துள்ளது.

நான் இவ்வேளையில் எமது முப்படை வீரர்களுக்கு சிரம் தாழ்த்தி நன்றிகளை தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன். ஏனெனில் முப்படை வீரர்களின் ஆதரவு இல்லாவிட்டால் இலங்கையில் தடகள விளையாட்டின் நிலைமை இன்னும் மோசமாக காணப்பட்டிருக்கும்.

எனவே விளையாட்டிற்கு பொறுப்பாக உள்ள அமைச்சு மற்றும் ஏனைய சங்கங்கள் அர்ப்பணிப்புடன், குறிக்கோள்களை இலக்காகக் கொண்டு தங்கள் கடமையை சரிவர செய்தால் மாத்திரமே தடகள விளையாட்டினை முன்னேற்றப் பாதையில் இட்டுச் செல்லலாம். மேலும் கிராமங்களில் உள்ள என்னைப் போன்ற, தர்ஷா போன்ற, சுகத் போன்ற இளம் வீரர்களை சர்வதேச மட்டத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டுமென்றால், கிராம மட்டத்தில் விளையாட்டின் மதிப்பையும் முக்கியத்துவத்தையும் உணரச் செய்து இளைஞர்களை ஊக்குவிப்பது அவசியமாகும். விளையாட்டிற்கு உரிய இடத்தை வழங்குவதன் மூலமே சர்வதேச மட்டத்தில், ஆசிய மட்டத்தில் வெற்றிகளை பெற்று எமது நாட்டில் தடகள விளையாட்டை மீட்டெடுக்க முடியும்.

தாங்கள் விளையாட்டின் மீது வைத்திருந்த அக்கறையை கைவிட்டு விட்டீர்களா?

நிச்சயமாக இல்லை. சர்வதேச அரங்கில் இலங்கைக்கு கீர்த்தியை பெற்றுத் தந்த ஒருவர் என்ற வகையில் நான் என்றும் விளையாட்டின் மீதான அக்கறையை கைவிடமாட்டேன். நான் எனது தாய் நாட்டையும் இளம் விளையாட்டு வீரர்களையும் மிகவும் நேசிக்கின்றேன்.

எமக்கு உதவிகளை வழங்காத ஒரு குறிப்பிட்ட சிலர் காணப்படுகின்ற போதிலும், எதிர்காலத்திலாவது எம்மிடம் இருந்து பெற்றுக் கொள்ளக் கூடிய உதவிகளை சரிவரப் பெற்று, குடிசையிலிருந்து வந்து சர்வதேசத்தை வென்ற எமது அனுபவத்தையும் எமது வெற்றிப்பாதையின் ரகசியங்களையும் இளம் சந்ததியினருக்கு வழங்கி இலங்கையை மீண்டும் சிறந்த நிலைக்கு அழைத்துச் செல்வார்கள் என எண்ணுகின்றேன்.