இலங்கை ஒலிம்பிக் குழுவின் தலைவர் பதவியைக் கைப்பற்றிய முதல் தமிழராக சுரேஷ் சுப்ரமணியம்

404

தேசிய ஒலிம்பிக் குழுவின் புதிய தலைவராக முன்னாள் தேசிய டென்னிஸ் வீரரும், இலங்கை டென்னிஸ் சங்கத்தின் முன்னாள் தலைவருமான சுரேஷ்  சுப்ரமணியம் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

தேசிய ஒலிம்பிக் குழுவுக்கு புதிய தலைவர் மற்றும் நிருவாகிகளைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் சுமார் 9 வருடங்களின் பின்னர் நேற்று(23) மாலை ஒலிம்பிக் இல்ல கேட்போர்கூடத்தில் நடைபெற்றது.

இதில் தலைவர் பதவிக்கு இலங்கை டென்னிஸ் சங்கத்தின் முன்னாள் தலைவரான சுரேஷ் சுப்ரமணியமும், இலங்கை படகோட்டி சங்கத்தின் தலைவரான ரொஹான் ஹர்ஷ பெர்னாண்டோவும் போட்டியிட்டனர்.

இராணுவ தொண்டர் படையணி மெய்வல்லுனர் தொடரில் கிழக்கு வீரர்கள் அபாரம்

இந்தோனேஷியாவில் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம்.. முன்னதாக பெண்களுக்கான 1,500 …

இதன்படி, சுமார் இரண்டு தசாப்களுக்கு மேலாக தேசிய ஒலிம்பிக் குழுத் தலைவராக பதவி வகித்த ஹேமசிறி பெர்னாண்டோ இத் தேர்தலில் போட்டியிடவில்லை என்பதுடன் இலங்கை டென்னிஸ் சம்மேளனத்தை பிரதிநிதித்துவப்படுத்தி சுரேஷ் சுப்ரமணியம் களமிறங்கியிருந்தார்.

அதேநேரம், தற்போதைய ஒலிம்பிக் குழுவின் செயலாளரான மெக்ஸ்வெல் டி சில்வா, சுரேஷ் சுப்ரமணியம் தரப்பில் செயலாளர் பதவிக்கு போட்டியிட்டதுடன், ரொஹான் பெர்னாண்டோ தரப்பில் சங்கத்தின் செயலாளர் கெனோயின் மற்றும் கயாகின் சங்கத்தின் செயலாளர் ரொஹான் பிரீத்தி விராஜ் பெரேரா மற்றும் தேசிய குத்துச்சண்டை சங்கத்தின் செயலாளர் பிரகீத் பிரியன்த பெரேரா ஆகியோர் போட்டியிட்டு இருந்தனர்.

இதன்படி, நேற்று மாலை 5.30 மணியளவில் ஆரம்பமான இத்தேர்தலுக்காக 31 விளையாட்டுக் சங்கங்கள் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றிருந்ததுடன், இத்தேர்தலை மேற்பார்வை செய்வதற்கு ஆசிய ஒலிம்பிக் சம்மேளத்தின் அதிகாரியொருவரும் இலங்கைக்கு வருகை தந்திருந்தார்.

இந்நிலையில், தலைவரை தெரிவு செய்வதற்காக நடைபெற்ற வாக்களிப்பில், 6 மேலதிக வாக்குகளால் சுரேஷ் சுப்ரமணியம் வெற்றிபெற்று தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார். அவருக்கு ஆதரவாக 18 விளையாட்டு சங்கங்கள் வாக்களித்திருந்துடன், அவரை எதிர்த்து தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ரொஹான் பெர்னாண்டோவுக்கு ஆதரவாக 12 வாக்குகள் கிடைக்கப் பெற்றன.

இதேவேளை, தேசிய ஒலிம்பிக் குழுவின் செயலாளராக மீண்டும் மெக்ஸ்வெல் டி சில்வா தெரிவானார். அவருக்கு ஆதரவாக 19 வாக்குகள் கிடைக்கப் பெற்றதுடன், அவரை எதிர்த்து போட்டியிட்ட தேசிய குத்துச்சண்டை சங்கத்தின் பிரகீத் பிரியன்த பெரேரா இறுதி நேரத்தில் தேர்தலில் இருந்து வாபஸ் பெற்றுக்கொள்ள, ரொஹான் தரப்பில் போட்டியிட்ட பிரீத்தி விராஜ் பெரேராவுக்கு 12 வாக்குகள் மட்டுமே கிடைக்கப்பெற்றன. இதன்படி, 7 மேலதிக வாக்குகளால் மெக்ஸ்வெல் டி சில்வா புதிய செயலாளராக தெரிவானார். இதற்கு முன்னர் 2009 ஆம் ஆண்டில்  நடைபெற்ற தேசிய ஒலிம்பிக் சங்கத் தேர்தலிலும் அவர் வெற்றி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், சங்கத்தின் உப தலைவர் பதவிக்கு 4 பேர் தெரிவு செய்யப்பட்டனர். இதில் தேசிய மெய்வல்லுனர் சம்மேளனத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் பாலித பெர்னாண்டோ (18 வாக்குகள்), பாய்மர படகோட்டி சங்கத்தின் தலைவர் ஜோசப் கென்னி (18 வாக்குகள்), தேசிய ரக்பி சங்கத்தின் தலைவர் அசங்க செனவிரத்ன (17 வாக்குகள்) மற்றும் தேசிய ஹொக்கி சம்மேளனத்தின் தலைவர் சுமித் எதிரிசிங்க (16 வாக்குகள்) ஆகியோர் உப தலைவர்களாக தெரிவாகினர்.

தேசிய நகர்வல ஓட்ட சம்பியன்களாக முடிசூடிய சந்திரதாசன், மதுஷானி

இந்தோனேஷியாவில் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம்…. இந்தோனேஷியாவில் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம்……..

இதேநேரம் தேசிய ஒலிம்பிக் சங்கத்தின் பொருளாராக தேசிய சைக்கிளோட்ட சங்கத்தின் சேனக ரணசிங்க தெரிவானார்.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற தேர்தலின் பிறகு இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு சுரேஷ் சுப்ரமணியம் கருத்து வெளியிடுகையில், “ எனது 10 வயதில் நான் டென்னிஸ் விளையாட்டை ஆரம்பித்தேன். எனது சகோதரர்கள் இருவரும், சகோதரியும் இலங்கை தேசிய டென்னிஸ் அணிக்காக விளையாடியவர்கள். எனக்கு கிடைத்த இந்தப் பதவி தொடர்பில் எனது தந்தை உயிருடன் இருந்தால் மிகவும் சந்தோஷப்பட்டிருப்பார். எனவே டென்னிஸ் நிருவாகத்தை எவ்வாறு சிறப்பாக முன்னெடுத்துச் சென்றேனோ அதைவிட சிறந்த முறையில் ஒலிம்பிக் சங்க நிருவாகத்தை முன்னெடுத்துச் செல்வேன் “ என தெரிவித்தார்.

மேலும், “ எப்போதும் சிறந்த முகாமைத்துவத்தை வழங்கி, திறமைமிகு வீரர்களை பலப்படுத்துவதற்கான பல செயற்றிட்டங்களை நான் முன்னெடுக்கவுள்ளேன். மேலும், எதிர்காலத்தில் நாட்டிற்கு சிறந்த பெறுபேறுகளையும் புகழையும் அளிக்கும் வல்லமை ஒலிம்பிக் குழுவுக்கு உண்டு என நான் நம்புகிறேன் “ எனத் தெரிவித்தார். அத்துடன், டென்னிஸ் விளையாட்டுக்கு மாத்திரமல்லாது ஒலிம்பிக் சங்கத்தில் அங்கத்துவம் வகிக்கின்ற அனைத்து விளையாட்டு சங்கங்களினதும், முன்னேற்றத்துக்கும், வளர்ச்சிக்கும் தொடர்ந்து உதவி வழங்க தான் எதிர்பார்த்துள்ளதாகவும், விளையாட்டுத்துறையில் ஒற்றுமையையும், நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துவதற்கு தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கொழும்பு றோயல் கல்லூரியின் பழைய மாணவரும் சிரேஷ்ட விளையாட்டு நிருவாகியுமான சுரேஷ் சுப்ரமணியம், 1981ஆம் ஆண்டு ஒற்றையர் மற்றும் இரட்டையர் ஆகிய இரண்டு பிரிவுகளிலும், இலங்கையின் முதலாம்தர டென்னிஸ் வீரராகத் திகழ்ந்ததுடன், அக்காலப்பகுதியில் தேசிய சம்பியனாகவும் விளங்கினார். அத்துடன், 2002 ஆம் ஆண்டு நடைபெற்ற டேவிஸ் கிண்ண டென்னிஸ் தொடருக்கான இலங்கை அணியின் தலைவராகவும் செயற்பட்டார்.

அத்துடன், 2006 ஆம் ஆண்டு முதல் ஆசிய டென்னிஸ் சம்மேளனத்தின் செயலாளராகக் கடமையாற்றி, தற்போது அதன் உப தலைவராகச் செயற்பட்டு வருகின்ற சுரேஷ் சுப்ரமணியம், 2002 முதல் 2007 வரையான காலப்பகுதியில் இலங்கை டென்னிஸ் சம்மேளனத்தின் தலைவராகச் செயற்பட்டதுடன், அதன்பிறகு 2009 முதல் 2012 காலப்பகுதியில் டென்னிஸ் தெரிவுக்குழுத் தலைவராகவும் கடமையாற்றினார். எனவே, பிரபல வர்த்தகரான சுரேஷ் சுப்ரமணியம், இலங்கையில் தொழில்சார் டென்னிஸ் போட்டிகளை அறிமுகப்படுத்துவதற்கு முன்னின்று பெரும் பணியாற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அத்தோடு, இத்தேர்லில் வெற்றிபெறுவதற்காக தேசிய ஒலிம்பிக் சங்கத்திற்கு எதிராக ஒரு சில தரப்பினரால் முன்வைக்கப்பட்ட அனைத்து பொய்யான குற்றச்சாட்டுகளுக்கும் எமது வெற்றி சிறந்த பதிலாக அமைந்திருப்பதாக ஒலிம்பிக் சங்கத் தேர்தலில் மீண்டும் செயலாளராகத் தெரிவான மெக்ஸ்வெல் டி சில்வா தெரிவித்தார்.

தேசிய ஒலிம்பிக் சங்க தேர்தலில் வெற்றிபெற்றவர்கள் விபரம்

தலைவர் – சுரேஷ் சுப்ரமணியம்

செயலாளர் – மெக்ஸ்வெல் டி சில்வா

பெருளாளர் – சேனக ரணசிங்க

உப செயலாளர் – கொமாண்டர் சந்தன லியனகே

உப பொருளாளர் – நிஷாந்த ஜயசிங்க

உப தலைவர் – மேஜர் ஜெனரல் பாலித பெர்னாண்டோ, ஜோசப் கென்னி, அசங்க செனவிரத்ன மற்றும் சுமித் எதிரிசிங்க

குழு அங்கத்தவர்கள் – சானக ஹேஷாந்த, பாசில் மொஹமட் ஹுசைன், அஜித் தேமால்