மற்றுமொரு பேரிழப்பினை சந்திக்கும் அபாயத்தில் இலங்கை அணி

912

முன்னணி வேகப்பந்துவீச்சாளர் சுரங்க லக்மால், இடுப்பு உபாதை ஒன்றினை எதிர் கொண்டிருக்கின்ற காரணத்தினால் நாளை (1) கென்பரா நகரில் ஆரம்பமாகும் இலங்கை – அவுஸ்திரேலிய அணிகள் இடையிலான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில் பங்கேற்பதில் சந்தேகம் நிலவுகின்றது. 

எனினும், லக்மால் தொடர்பான பரிசோதனை முடிவுகள் வெளியாகியதன் பின்னரே அவர் நாளைய டெஸ்ட் போட்டியில் விளையாடுவாரா? அல்லது இல்லையா? என்பது தொடர்பில் உறுதியான தகவல் வெளியாகும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

சுரங்க லக்மாலின் உபாதை தொடர்பில் பேசியிருந்த இலங்கை டெஸ்ட் அணித்தலைவர் தினேஷ் சந்திமால், அவரை இன்னும் வைத்தியர்கள் பரிசோதித்து கொண்டிருப்பதாக குறிப்பிட்டிருந்ததோடு, லக்மால் நாளைய டெஸ்ட் போட்டியில் விளையாடுவது இன்னும் உறுதி செய்யப்படவில்லை எனவும் தெரிவித்திருந்தார்.

முன்னதாக சுரங்க லக்மால், அவுஸ்திரேலிய அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியில் 75 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை கைப்பற்றி தனது சிறப்பான பந்துவீச்சினை வெளிப்படுத்தியிருந்தார்.

சுரங்க லக்மால் அவுஸ்திரேலிய அணியுடனான முதல் டெஸ்ட் போட்டி மட்டுமின்றி கடந்த ஆண்டின் இறுதிப்பகுதியில் இடம்பெற்ற நியூசிலாந்து அணியுடனான டெஸ்ட் தொடரிலும் ஜொலித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே வேகப்பந்து வீச்சாளர்களான லஹிரு குமார, துஷ்மந்த சமீர மற்றும் நுவான் பிரதீப் ஆகியோர் உபாதைக்கு ஆளாகி இலங்கை அணியிலிருந்து வெளியேறிய நிலையில் லக்மாலும் இல்லாது போகும் நிலை ஒன்று உருவாகியிருப்பதால் கட்டாய வெற்றி ஒன்றினை பெற்று இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை சமநிலைப்படுத்த நினைக்கும் இலங்கை அணிக்கு பெரும் தலையிடி ஒன்று ஏற்பட்டிருக்கின்றது.

இதேநேரம், லக்மால் இல்லாத போதிலும் இலங்கை அணி நாளைய டெஸ்ட் போட்டியில் மூன்று வேகப்பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கும் என தினேஷ் சந்திமால் உறுதியாக குறிப்பிட்டிருந்தார்.

இதன்படி லக்மால் இல்லாது  போகும் போது அவுஸ்திரேலிய அணியுடனான இரண்டாவது டெஸ்ட்டில் இலங்கைத் தரப்பின் வேகப்பந்துவீச்சுத்துறை ஏற்கனவே உபாதைக்கு ஆளாகி அவர்களுக்கு பதில் வீரர்களாக அவுஸ்திரேலியா பயணமாகியிருக்கும் புதுமுக வீரர் சாமிக்க கருணாரத்ன மற்றும் விஷ்வ பெர்னாந்து ஆகியோருடன் இணைந்து கசுன் ராஜிதவினால் முன்னெடுக்கப்படும் எனக் கூறப்படுகின்றது.

லக்மாலின் உபாதை அபாயம் ஒருபுறமிருக்க இலங்கை அணி நாளைய டெஸ்ட் போட்டியில் வெல்வதில் உறுதியுடன் இருப்பதாக சந்திமால் குறிப்பிட்டிருந்தார்.

“ நாங்கள் ஏழு துடுப்பாட்ட வீரர்களுடனும், நான்கு பந்துவீச்சாளர்களுடனும் ஆடவிருக்கின்றோம். எங்களுக்கு ஆக்கபூர்வமான முறையில் விளையாட வேண்டியுள்ளதுடன், வெற்றி பெற நான்கு பந்துவீச்சாளர்களை பயன்படுத்த வேண்டியிருக்கின்றது. மேலும், ஒரு அணியாகவும் அதிக பொறுப்புக்களை சுமந்த வண்ணம் இருக்கின்றோம்.  எங்களுக்கு முதல் துடுப்பாட்டம் கிடைக்கும் பட்சத்தில் இந்த டெஸ்ட் போட்டியில் வெற்றிபெற 300 ஓட்டங்களைப் பெற வேண்டிய தேவை இருக்கின்றது. இந்த டெஸ்ட் போட்டியில் எங்களது அனைத்து வீரர்களும் எது தேவையாக இருக்கின்றது என்பதை அறிந்து பொறுப்புடன் செயற்பாடுவார்கள் என எதிர்பார்க்கின்றேன். “