சகல துறையிலும் பிரகாசித்த சஜித் சமீர; வெற்றியை சுவீகரித்த மேல் மாகாண கனிஷ்ட அணிகள்

639
Sajith Sameera

இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் ஏற்பாட்டில் 2017ஆம் ஆண்டிற்கான 19 வயதுக்கு உட்பட்ட வீரர்கள் பங்குகொள்ளும் மாகாணங்களுக்கு இடையிலான ஒரு நாள் போட்டித் தொடர் இன்று ஆரம்பமாகியது. 

இத்தொடரில் பங்கேற்கும் அணிகள் இரு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு போட்டிகள் நடைபெறுகின்றன. ஒவ்வொரு குழுவிலும் வெற்றி/தோல்வி மூலம் பெறப்படும் புள்ளிகள் அடிப்படையில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் தொடரின் அரையிறுதிப் போட்டியில் மோதவுள்ளதோடு அதில் வெற்றி பெரும் அணிகள் அதனையடுத்து மே மாதம் 6ஆம் திகதி ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் மோதவுள்ளன.

இத்தொடரில், 2017/18ஆம் ஆண்டுக்குரிய பாடசாலைகளுக்கான பருவகால கிரிக்கெட் தொடரில் விளையாடும் வீரர்கள் தகுதி பெற்றுள்ளதோடு, தொடரில் பங்கேற்கும் வெளி மாகாண அணிகளான மத்திய மாகாணம், கிழக்கு மாகாணம், ஊவா மாகாணம் மற்றும் வட மத்திய மாகாணம் ஆகியவற்றில் கொழும்பிலுள்ள பிரபல பாடசாலை வீரர்களும் பங்கேற்கின்றனர்.

கடந்த வருடத்தில் நடைபெற்றிருந்த இந்தத் தொடரில், தமித்த சில்வா தலைமையிலான வடமேல் மாகாண அணி சம்பியன் ஆகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

குழு A குழு  B
மேல் மாகாணம் (தெற்கு) மேல் மாகாணம் (வடக்கு)
வட மாகாணம் கிழக்கு மாகாணம்
மத்திய மாகாணம் வட மத்திய மாகாணம்
வடமேல் மாகாணம் தென் மாகாணம்
ஊவா மாகாணம் மேல் மாகாணம் (மத்திய)

கிழக்கு மாகணம் எதிர் மேல் மாகாணம் (வடக்கு)

BRC மைதானத்தில் ஆரம்பமாகியிருந்த இப்போட்டியில் சகல துறைகளிலும் திறமையினை வெளிக்காட்டிய மேல் மாகாண அணியினர் கிழக்கு மாகாணத்தினை 207 ஓட்டங்களால் வீழ்த்தியிருந்தனர்.

முதலில் துடுப்பாடியிருந்த மேல் மாகாண அணி, ப்ருத்வி ருசர (66) மற்றும் சஜித் சமீர (51) ஆகியோரின் அரைச்சதங்களுடன் 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 286 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

கிழக்கு மாகாணம் சார்பில் பந்துவீச்சில், தேவா திலக்ஷன் 42 ஓட்டங்களிற்கு 4 விக்கெட்டுகளை சாய்த்திருந்தார்.

சவாலான வெற்றி இலக்கினை அடைய பதிலுக்கு துடுப்பாடிய கிழக்கு மாகாண கனிஷ்ட அணி வீரர்கள் 79 ஓட்டங்களை மாத்திரமே பெற்று 207 ஓட்டங்களால் படுதோல்வியடைந்தனர். மேல் மாகாண வடக்கு அணி சார்பாக பந்து வீச்சிலும், சிறப்பாக செயற்பட்டிருந்த ஸாஹிரா கல்லூரியின் அணித்தலைவரான சஜித் சமிர 15 ஓட்டங்களிற்கு 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

போட்டியின் சுருக்கம்

மேல் மாகாணம் (வடக்கு)  – 286/6 (50) – ப்ருத்வி ருச்ர 66, சஜித் சமீர 51, அஷான் பெர்னாந்து 41, தேவா திலக்ஷன் 4/42, ஷெஹான் நதீஜ 2/49

கிழக்கு மாகாணம் – 79 (31) – சஜித் சமீர 3/15, சாமிக குணசேகர 2/12, அசல் சிகெரா 2/14

போட்டி முடிவு – மேல் மாகாணம் (வடக்கு) 207 ஓட்டங்களால் வெற்றி


வடமத்திய மாகாணம் எதிர் தென் மாகாணம்

கோல்ட்ஸ் மைதானத்தில் தொடங்கியிருந்த இப்போட்டியில் அதி சிறப்பான பந்து வீச்சு வலிமையை வெளிக்காட்டியிருந்த தென் மாகாண கனிஷ்ட அணி 7 விக்கெட்டுகளால் இலகு வெற்றியைப் பெற்றிருந்தனர்.

முதலில் துடுப்பாடியிருந்த வடமத்திய மாகாணத்தின் 19 வயதுக்கு உட்பட்ட அணியினர், தென்மாகாண பந்துவீச்சாளர்களின் அபார பந்து வீச்சினால் 116 ஓட்டங்களுக்கு கட்டுப்படுத்தப்பட்டிருந்தனர்.

இதில், சந்துன் மெண்டிஸ் மற்றும் அவிந்து தீக்ஷன ஆகியோர்  தலா மூன்று விக்கெட்டுகள் வீதம் தென் மாகாணத்திற்காக கைப்பற்றியிருந்தனர்.

பின்னர், தனஞ்சய லக்‌ஷான் ஆட்டமிழக்காமல் பெற்றுக்கொண்ட அரைச்சதத்துடன் 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து  தென் மாகாண அணி வெற்றி இலக்கை அடைந்தது.

போட்டியின் சுருக்கம்

வட மத்திய மாகாணம் – 116 (33.5) – கவிந்து மதரசிங்க 50, அசங்க குலரத்ன 20, சந்துன் மெண்டிஸ் 3/32, அவிந்து தீக்ஷன 3/19

தென் மாகாணம் – 117/3 (20) – தனஞ்சய லக்‌ஷான் 66*

போட்டி முடிவு – தென் மாகாணம் 7 விக்கெட்டுகளால் வெற்றி


வட மாகாணம் எதிர் மேல் மாகாணம் (தெற்கு)

NCC மைதானத்தில் முடிவடைந்திருந்த இப்போட்டியில், 7 விக்கெட்டுகளால் வட மாகாணத்தினை மேல் மாகாண தெற்கு கனிஷ்ட அணி வீழ்த்தியிருந்தது.

முதலில் துடுப்பாடியிருந்த, வட மாகாண அணியினர் எதிரணியின் சவாலான பந்து வீச்சு காரணமாக 127 ஓட்டங்களிற்குள் சுருண்டு கொண்டனர். அபார பந்து வீச்சினை வெளிக்காட்டியிருந்த இன்சாக சிறிவர்த்தன 4 விக்கெட்டுகளை 16 ஓட்டங்களுக்கு கைப்பற்றி மேல் மாகாண தெற்குப் பிராந்திய அணிக்காக சிறந்த பந்து வீச்சு ஒன்றினை பதிவு செய்து கொண்டார்.

வெற்றி இலக்கினை தொடுவதற்கு பதிலுக்கு ஆடிய, மேல் மாகாண தெற்கு அணி 28.2 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 128 ஓட்டங்களைப் பெற்று 7 விக்கெட்டுகளால் வெற்றி அடைந்தது.

போட்டியின் சுருக்கம்

வட மாகாணம் – 127 (36.3) – சலித் பெர்னாந்து 26, இன்சாக சிறிவர்த்தன 4/16, தாஷிக் பெரேரா 2/28

மேல் மாகாணம் (தெற்கு) – 128/3 (28.2) – சனோஜ் தர்ஷிக 30, நிஷான் மதுசங்க 25

போட்டி முடிவு – மேல் மாகாண தெற்கு அணி 7 விக்கெட்டுகளால் வெற்றி.


வட மேல் மாகாணம் எதிர் மத்திய மாகாணம்

விறுவிறுப்பாக நடைபெற்றிருந்த இந்தப்போட்டியில் வட மேல் மாகாண அணியினர் 28 ஓட்டங்களால் மத்திய மாகாண அணியினரை வீழ்த்தியிருந்தனர்.

சோனகர் மைதானத்தில் ஆரம்பமாகியிருந்த இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் ஆடியிருந்த வட மேல் மாகாண அணி 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகளை பறிகொடுத்து 285 ஓட்டங்களைக் குவித்துக்கொண்டது.

இதில் நவோதயா இமேஷ் ஆட்டமிழக்காமல் 68 ஓட்டங்களையும் நிப்புன் தனஞ்சய 64 ஓட்டங்களையும் பெற்று சிறப்பாட்டத்தினை வெளிப்படுத்தியிருந்தனர்.

பதிலுக்கு வெற்றி இலக்கினை அடைவதற்கு துடுப்பாடக் களமிறங்கிய மத்திய மாகாண கனிஷ்ட அணியினர், போராட்டத்தினை வெளிக்காட்டியிருந்த போதும் 47.5 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 257 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டு தோல்வியடைந்தனர்.

மத்திய மாகாண அணிக்காக சிறப்பாக செயற்பட்டிருந்த ரவிஷ்க உபேந்திர மற்றும் நிம்சர அத்தரகல்ல ஆகியோர் அரைச்சதம் கடந்திருந்தனர்.

போட்டியின் சுருக்கம்

வடமேல் மாகாணம் – 285/9 (50) – நவோதய இமேஷ் 68*, நிப்புன் தனஞ்சய 64, கவீன் பண்டார 49, நிம்சர அத்தரக்கல்ல 3/31

மத்திய மாகாணம் – 257 (47.5) – ரவிஷ்க உபேந்திர 61, நிம்சர அத்தரகல்ல 57, நிப்புன் தனஞ்சய 2/25

போட்டி முடிவு – வடமேல் மாகாண அணி 28 ஓட்டங்களால் வெற்றி