சன்ரைஸஸ் அணியின் உதவி பயிற்றுவிப்பாளராக ப்ரெட் ஹெடின் நியமனம்

140

கிரிக்கெட் உலகில் நடைபெறும் பிரபல்யமான லீக் தொடர்களில் ஒன்றான இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரின் அணிகளில் ஒன்றான சன்ரைஸஸ் ஹைதராபாத் அணியின் உதவி பயிற்றுவிப்பாளராக அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் விக்கெட்காப்பாளர் ப்ரெட் ஹெடின் நியமிக்கப்பட்டுள்ளார். 

2008ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் சபையினால் ஆரம்பிக்கப்பட்ட இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரானது கிரிக்கெட் உலகில் ரசிகர்கள் மத்தியில் சிறந்த வரவேற்பை கொண்டு அனைத்து நாடுகளையும் சேர்ந்த வீரர்களின் பங்குபற்றுதலுடன் வருடா வருடம் வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. 

ஒரு வருட தடைக்குள்ளான மொஹமட் ஷெஹ்சாத்

அண்மையில் நிறைவுக்கு வந்த உலகக்கிண்ண தொடரிலிருந்து உபாதை காரணமாக…

2008ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட குறித்த ஐ.பி.எல் தொடரின் ஆரம்பத்தில் சன்ரைஸஸ் ஹைதராபாத் எனும் அணி பங்கேற்கவில்லை. ஆரம்பத்தில் டெகான் சார்ஜஸ் எனும் பெயரில் காணப்பட்ட அணியே பின்னர் புதிய வடிவில் சன்ரைஸஸ் ஹைதராபாத் எனும் பெயரில் 2013ஆம் ஆண்டு முதல் முறையாக ஐ.பி.எல் தொடரில் களமிறங்கியது. 

2013ஆம் ஆண்டு முதல் முறையாக சன்ரைஸஸ் அணி களமிறங்கும் போது அவ்வணியின் தலைவராக இலங்கை அணியின் முன்னாள் தலைவரும் கிரிக்கெட் ஜாம்பவான்களில் ஒருவருமான குமார் சங்கக்கார நியமிக்கப்பட்டிருந்தார். சங்கக்கார தலைமையில் முதல் ஒன்பது போட்டிகளிலும், அவுஸ்திரேலிய வீரர் கெமரூன் வைட் தலைமையில் ஏழு போட்டிகளிலும் விளையாடிய சன்ரைஸஸ் அணி தங்களது முதல் பருவகாலத்தில் நொக்-அவுட் போட்டியில் தோல்வியை தழுவி நான்காமிடத்தை பிடித்தது.

2016ஆம் ஆண்டு நடைபெற்ற ஒன்பதாவது பருவகாலத்திற்கான இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரில் டேவிட் வோர்னர் தலைமையிலான சன்ரைஸஸ் ஹைதராபாத் அணி இறுதிப்போட்டியில் ரோயல் செலஞ்சேர்ஸ் பெங்களூர் அணியை வீழ்த்தி சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்தது. அதனை தொடர்ந்து 2017ஆம் ஆண்டு நான்காமிடத்தை பெற்றுக்கொண்ட சன்ரைஸஸ், 2018ஆம் ஆண்டு பருவகால தொடரில் இறுதிப்போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியிடம் வீழ்ந்து இரண்டாமிடத்தை பிடித்துக்கொண்டது. 

அதனை தொடர்ந்து இறுதியாக இவ்வருடம் நடைபெற்ற 12ஆவது ஐ.பி.எல் தொடரில் டேவிட் வோர்னரின் தடையால் புவனேஸ்வர் குமார் மற்றும் கேன் வில்லியம்சன் தலைமையில் களமிறங்கிய சன்ரைஸஸ் அணி நொக்-அவுட் போட்டியில் டெல்லி கெபிடல்ஸ் அணியிடம் தோல்வியை தழுவி நான்காமிடத்தை பெற்றுக்கொண்டது.

ஒரே அணியில் இணையும் கேன் வில்லியம்சன் மற்றும் பெய்லிஸ்

ஐசிசி உலகக் கிண்ணத்தை வென்ற இங்கிலாந்து அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக செயற்பட்ட…

இந்நிலையில் சன்ரைஸஸ் அணி உருவாக்கப்பட்ட காலத்திலிருந்து (2013) அவ்வணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக செயற்பட்டுவந்த அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் டொம் மூடி திடீரென பயிற்றுவிப்பாளர் பதவியிலிருந்து விலக்கப்பட்டார். இந்நிலையில் ஏற்பட்ட தலைமை பயிற்றுவிப்பாளருக்கான வெற்றிடத்திற்கு இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் தற்போதையை தலைமை பயிற்றுவிப்பாளரான ட்ரெவர் பெய்லிஸ் கடந்த மாதம் நியமிக்கப்பட்டார். 

இந்நிலையில் சன்ரைஸஸ் அணிக்கு நியமிக்கப்பட்ட புதிய பயிற்றுவிப்பாளரான ட்ரெவர் பெய்லிஸூடன் இணைந்து செயற்படும் அடிப்படையில் உதவி பயிற்றுவிப்பாளராக அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் உபதலைவரும், அவ்வணியின் விக்கெட் காப்பாளருமான ப்ரெட் ஹெடின் நியமிக்கப்பட்டுள்ளதை சன்ரைஸஸ் ஹைதராபாத் அணி தங்களது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் உறுதிப்படுத்தியுள்ளது. 

41 வயதுடைய ப்ரெட் ஹெடின் அவுஸ்திரேலிய அணிக்காக மூவகையான கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடியுள்ளார். 2001ஆம் முதல் முதலாக ஒருநாள் போட்டி மூலமாக சர்வதேச கிரிக்கெட் உலகிற்கு அறிமுகமானார். 2015ஆம் ஆண்டு வரையான 14 வருட காலப்பகுதியில் 126 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ள ஹெடின் 3,122 ஒருநாள் ஓட்டங்களை குவித்துள்ளார்.

மேலும் 66 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஹெடின் அதில் 3,266 ஓட்டங்களையும், 34 டி20 சர்வதேச போட்டிகளில் 402 ஓட்டங்களையும் குவித்துள்ளார். ஒரு விக்கெட் காப்பாளராக திகழ்ந்த ப்ரெட் ஹெடின் ஒட்டு மொத்த சர்வதேச கிரிக்கெட் விளையாட்டில் 449 பிடியெடுப்புக்களையும், 25 ஸ்டம்பிங்களையும் நிகழ்த்தியுள்ளார். மேலும் 2015ஆம் ஆண்டு அவுஸ்திரேலிய அணி உலகக்கிண்ணத்தை கைப்பற்றும் போது ப்ரெட் ஹெடின் அணியின் விக்கெட் காப்பாளராக விளையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்கள் வரிசையில் முதல் 10 இடங்களுக்குள் நுழைந்த திமுத்!

உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் இலங்கை மற்றும் நியூசிலாந்து…

மேலும் பயிற்றுவிப்பாளராக கடமையாற்றிய அனுபவமும் ப்ரெட் ஹெடினிடம் காணப்படுகின்றது. கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற முக்கோண ஒருநாள் தொடரின் போது அவுஸ்திரேலிய A அணியின் உதவி பயிற்றுவிப்பாளராக செயற்பட்டுள்ளார். அத்துடன் அவுஸ்திரேலிய அணியின் களத்தடுப்பு பயிற்றுவிப்பாளராகவும் செயற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஐ.பி.எல் அணிகளில் ஒன்றான சன்ரைஸஸ் ஹைதராபாத் அணியின் உரிமையானது இந்தியாவின் பிரபல தொலைக்காட்சி நிறுவனமான சன் பிட்ச்சர்ஸ் நிறுவனத்திடம் காணப்படுகின்றது. அத்துடன் சன்ரைஸஸ் அணியின் ஆலோசகர்களில் ஒருவராக வீ.வீ.எஸ் லக்ஸ்மனுடன் சேர்ந்து இலங்கையின் முத்தையா முரளிதரன் பெயரிடப்பட்டுள்ளார்.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<