ஒரே போட்டியில் மூன்று இந்தியர்களின் சாதனையை தகர்த்த ஸ்டீவ் ஸ்மித்

3805
©Cricket Australia Twitter

கிரிக்கெட் உலகில் எதிர்பார்ப்பு மிக்க ஆங்கிலேயர்களின் ஆஷஷ் கிண்ணம் எனப்படும் டெஸ்ட் போட்டித்தொடரின் 71 ஆவது தொடர் நேற்று (01) இங்கிலாந்தில் ஆரம்பமாகியது. 

உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் முதல் தொடராக நடைபெறும் இவ் ஆஷஷ் கிண்ண தொடரில் ஐந்து போட்டிகள் உள்ளடக்கப்பட்டுள்ளன. குறித்த ஆஷஷ் கிண்ணத்தின் முதல் போட்டி நேற்று (01) இங்கிலாந்தின் பேர்மிங்ஹமில் ஆரம்பமாகியது. 

உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பின் முதல் மோதலாக ஆஷஸ் தொடர் ஆரம்பம்

கிரிக்கெட் உலகில் சிறப்பு வாய்ந்த ஆஷஸ்….

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. அதன்படி முதலில் களமிறங்கிய அவுஸ்திரேலிய அணிக்கு பாரிய இடி விழுந்தது. 122 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது அவுஸ்திரேலிய அணி.

இந்நிலையில் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் தடைக்கு உள்ளாகி ஒன்றரை வருடங்களின் பின்னர் அணியில் இணைந்த முன்னாள் அணித்தலைவர் ஸ்டீவ் ஸ்மித் தடுமாறிய நேரத்தில் அவுஸ்திரேலிய அணிக்காக கைகொடுத்தார். 

பீட்டர் சிடிலுடன் இணைந்து ஒன்பதாவது விக்கெட்டுக்காக 88 ஓட்டங்கள், நைதன் லெயனுடன் இணைந்து இறுதி பத்தாவது விக்கெட்டுக்காக 74 ஓட்டங்களை பெற்று அணிக்கு வலுச்சேர்த்தார். இவ்வாறு பாரிய முக்கியமான இணைப்பாட்டங்களை பகிர்ந்து கொண்ட ஸ்டீவ் ஸ்;மித் 16 நான்கு ஓட்டங்களுடனும், 2 ஆறு ஓட்டங்களுடனும் மொத்தமாக 144 ஓட்டங்களை பெற்று இறுதியிலேயே ஆட்டமிழந்தார்.

அணியின் நான்காவது வீரராக களமிறங்கி இவ்வாறு சதம் கடந்து 144 ஓட்டங்களை பெற்றதன் மூலம் டெஸ்ட் அரங்கில் தனது 24 ஆவது சதத்தை பூர்த்தி செய்தார். இவ்வாறு முக்கியமான நேரத்தில் பெற்ற சதம் ஸ்மித்திற்கு சாதனை ஒன்றையும் முறியடிக்க வாய்ப்பாக அமைந்திருந்தது. 

Video – ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் என்றால் என்ன?

சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ICC) ஒருநாள்…

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மிகக்குறைந்த இன்னிங்ஸ்களில் 24 சதங்களை கடந்தவர்கள் வரிசையில் காணப்பட்ட இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி, இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர துடுப்பாட்ட வீரரும், லிட்டில் மாஸ்டர் என அழைக்கப்படுபவருமான சச்சின் டெண்டுல்கர் மற்றும் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும் தற்போதைய கிரிக்கெட் வர்ணனையாளருமான சுனில் கவஸ்கர் ஆகியோரை பின்தள்ளியுள்ளார். 

மேல் குறிப்பிடப்பட்டுள்ளவாறு குறைந்த டெஸ்ட் இன்னிங்ஸ்களில் 24 சதமடித்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில், கிரிக்கெட் ஜாம்பவான்களில் ஒருவரான அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் சேர். டொன் பிரெட்மென் காணப்படுகின்றார். அவர் 66 இன்னிங்ஸ்களிலேயே இவ்வாறு 24 சதமடித்துள்ளார். தற்போது இரண்டாவதாக 118 இன்னிங்ஸ்களில் சதம் பெற்ற ஸ்டீவ் ஸ்மித் காணப்படுகின்றார். 

குறைந்த இன்னிங்ஸ்களில் 24 சதமடித்தவர்கள் வரிசை.

  1. டொன் பிரெட்மென் (அவுஸ்திரேலியா) 66 இன்னிங்ஸ்
  2. ஸ்டீவ் ஸ்மித் (அவுஸ்திரேலியா) 118 இன்னிங்ஸ்
  3. விராட் கோஹ்லி (இந்தியா) 123 இன்னிங்ஸ்
  4. சச்சின் டெண்டுல்கர் (இந்தியா) 125 இன்னிங்ஸ்
  5. சுனில் கவஸ்கர் (இந்தியா) 128 இன்னிங்ஸ்

2010 ஆம் ஆண்டு டெஸ்ட் அறிமுகம் பெற்று ஒன்றரை வருடம் கிரிக்கெட் விளையாடாமல் இருந்து இதுவரையில் 65 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஸ்டீவ் ஸ்மித் 24 சதங்கள் மற்றும் 24 அரைச்சதங்களுடன் மொத்தமாக 6,343 டெஸ்ட் ஓட்டங்களை குவித்துள்ளார்.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<