கண்டி தர்மராஜ கல்லூரிக்கு எதிராக கொழும்பு சுகததாச விளையாட்டு அரங்கில் சனிக்கிழமை(17) பிற்பகல் நடைபெற்ற முதலாவது அரை இறுதிப் போட்டியில் 34 – 12 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றிபெற்ற கொழும்பு புனித ஜோசப் கல்லூரி, மைலோ ஜனாதிபதி கிண்ண இறுதிப் போட்டியில் முதல் தடவையாக விளையாடத் தகுதிபெற்றுள்ளது.

வீரர்கள் இழைத்த தவறுகள் காரணமாகவே தர்மராஜ கல்லூரி பாரிய தோல்வியைத் தழுவ நேரிட்டது. புனித ஜோசப் கல்லூரியின் ட்ரை எல்லைக் கோட்டை அண்மித்த சில சந்தர்ப்பங்களில் தூரப் பந்து பரிமாற்றம் காரணமாகவும் நொக் ஒன் காரணமாகவும் தர்மராஜ கல்லூரியினர் புள்ளிகளைப் பெறத் தவறினர். மற்றும் பல சந்தர்ப்பங்களில் ஓப் சைட் நிலை காரணமாக புனித ஜோசப் கல்லூரிருக்கு தர்மராஜ கல்லூரியினர் ஐந்து பெனால்டிகளை அள்ளிக் கொடுத்தனர்.

போட்டியின் முதலாவது பாதியில் 6ஆவது, 10ஆவது, 18ஆவது நிமிடங்களில் முறையே கிடைக்கப் பெற்ற 35 மீ., 30 மீ., 18 மீ. பெனால்டிகளை புனித ஜோசப் கல்லூரி வீரர் சச்சித் சில்வா மிக இலகுவாக கம்பங்களை நோக்கி உதைத்து புள்ளிகளாக மாற்றினார். 

அது மட்டுமல்லாமல் 23ஆவது நிமிடத்தில் சச்சித் சில்வா ட்ரை ஒன்றை வைத்து அதன் மூலமாக கிடைத்த கொன்வெர்சனினால் மேலதிக 2 புள்ளிகளையும் பெற்றுக்கொடுக்க புனித ஜோசப் கல்லூரி 16 – 0 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னிலை வகித்தது. (புனித ஜோசப் கல்லூரி 16 – 0 தர்மராஜ கல்லூரி)

இதனைத் தொடர்ந்து வீராப்புடன் விளையாட ஆரம்பித்த தர்மராஜ கல்லூரி 29ஆவது நிமிடத்தில் சி.கே.பி. ஏக்கநாயக்க மூலம் ட்ரை ஒன்றை வைத்தது. பின்னர் கொன்வெர்சன் மூலமாக மேலதிகப் புள்ளிகளைப் பெறுவதற்கு ஜீ. ஐ. தேஷப்ரிய எடுத்த முயற்சி நூலிழையில் தவறியது.

முதல் பாதி: புனித ஜோசப் கல்லூரி 16 – 5 தர்மராஜ கல்லூரி

இடைவேளை முடிந்து ஆட்டம் தொடர்ந்த 3ஆவது நிமிடத்தில் வலது புறத்தில் கிடைத்த 5 மீற்றர் ஸ்கரம்மைப் பயன்படுத்தி இடது புறம்வரை பந்தை பரிமாற்றிய தர்மராஜ கல்லூரி சார்பாக பி. டி. உதங்கமுவ ட்ரை ஒன்றை வைத்தார். கொன்வெர்சன் மூலம் மேலதிக 2 புள்ளிகளை தேஷப்ரிய பெற்றுக்கொடுத்தார். (புனித ஜோசப் கல்லூரி 16 – 12 தர்மராஜ கல்லூரி)

எனினும் அதன் பின்னர் தவறுக்கு மேல் தவறுகளை இழைத்த தர்மராஜ கல்லூரியினர் எதிரணிக்கு புள்ளிகளைத் தாரைவார்த்த வண்ணம் இருந்தனர்.

இலக்கை நோக்கி உதைப்பதில் குறி தவறாமல் இருந்த சச்சித் சில்வா 47ஆவது மற்றும் 60ஆவது நிமிடங்களில் மேலும் இரண்டு பெனால்டிகளை புனித ஜோசப் கல்லூரி சார்பாகப் பெற்றுக்கொடுத்தார். (புனித ஜோசப் கல்லூரி 22 – 12 தர்மராஜ கல்லூரி)

பின்னர் அடுத்தடுத்து கிடைத்த இரண்டு பெனால்டிகளை தர்மராஜ கல்லூரியினர் முறையாகப் பயன்படுத்த தவறியதுடன் எதிரணிக்கு பெனால்டி ஒன்றையும் கொடுத்தனர்.

போட்டியின் 68ஆவது நிமிடத்தில் புனித ஜோசப் அணியினர் சிறந்த வியூகங்களை அமைத்து விளையாடி சத்துர செனவிரட்ன மூலம் ட்ரை ஒன்றை வைத்தனர். அதற்கான மேலதிக 2 புள்ளிகளை கொன்வெர்சன் மூலமாக சச்சித் சில்வா பெற்றுக்கொடுத்தார். (புனித ஜோசப் கல்லூரி 29 – 12 தர்மராஜ கல்லூரி)

மேலும் மூன்று நிமிடங்கள் கழித்து புனித ஜோசப் கல்லூரி அணித் தலைவர் வினுல் பெர்னாண்டோ இடதுபக்க மூலை கொடிக்கு அருகில் அலாதியான ட்ரை ஒன்றை வைத்தார். ஆனால் அதற்கான மேலதிகப் புள்ளிகளை சச்சித் சில்வா தவறவிட்டார். அவர் உதைத்த பந்து வலது கோல் கம்பத்தில் பட்டு திசை திரும்பியது. (புனித ஜோசப் கல்லூரி 34 – 12 தர்மராஜ கல்லூரி)

போட்டி முடிவடைய சில செக்கன்கள் இருந்தபோது புனித ஜோசப் அணியினருக்கு ட்ரை வைப்பதற்கு ஒரு சிறந்த வாய்ப்பு கிடைத்தபோதிலும் அதனை அவர்கள் தவறவிட்டனர்.

முழு நேரம்: புனித ஜோசப் கல்லூரி 34 – 12 தர்மராஜ கல்லூரி