புனித ஜோசப் கல்லூரி மற்றும் புனித பேதுரு கல்லூரி அணிகள் மோதிக் கொள்ளும் வருடாந்த மாபெரும் கிரிக்கெட் போட்டியான 83ஆவது புனிதர்களின் சமர் இன்று பி. சரவணமுத்து மைதானத்தில் ஆரம்பமானது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற புனித ஜோசப் கல்லூரியின் அணித்தலைவர் ஹரீன் குரே முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தார். எனினும் பந்துவீச்சாளர்களுக்கு உகந்ததாக காணப்பட்ட ஆடுகளத்தை சிறப்பாக பயன்படுத்திக் கொண்ட புனித பேதுரு கல்லூரியின் பந்துவீச்சாளர்கள் எதிரணிக்கு அழுத்தத்தை வழங்கினர்.

இதன்படி சந்துஷ் குணதிலகவின் பந்துவீச்சில் கெமரன் துருகே ஓட்டமெதனையும் பெறாத நிலையிலும், மானெல்க டி சில்வாவின் பந்துவீச்சில் தினித் மதுராவல ஒரு ஓட்டத்திற்கும் ஆட்டமிழந்தனர். அதனை தொடர்ந்து வேகப்பந்துவீச்சாளர் சந்துஷ் குணதிலகவின் பந்துவீச்சின் போது விவேகமாக செயற்பட்ட விக்கெட் காப்பாளர் லக்ஷிண ரொட்ரிகோ, பந்தினை வீசி எறிந்து எல்லைக்கோட்டின் வெளியே நின்றிருந்த நிபுண சுமனசிங்கவை ஸ்டம்ப் முறையில் ஆட்டமிழக்கச் செய்தார்.

[rev_slider dfcc728]
.

தொடர்ந்தும் புனித ஜோசப் கல்லூரியின் ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்த அவ்வணியின் தஷான் பெரேரா மற்றும் ஹவின் பெரேரா அடுத்தடுத்து ரன் அவுட் முறையில் ஆட்டமிழக்க, புனித ஜோசப் கல்லூரி 9.5 ஓவர்கள் நிறைவில் வெறும் 10 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

ஒரு முனையில் ஜெஹான் டேனியல் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சீரான வேகத்தில் ஓட்டங்கள் குவித்த போதிலும், மறு முனையில் ஷெவோன் பொன்சேகா மற்றும் ஜெஹான் பெர்னாண்டோபுள்ளே முறையே 26 மற்றும் 14 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தனர்.

இதன்படி புனித ஜோசப் கல்லூரியின் நான்கு வீரர்கள் ரன் அவுட் முறையிலும் ஒருவர் ஸ்டம்ப் முறையிலும் ஆட்டமிழந்தமை குறிப்பிடத்தக்கது. எனினும் தனி ஒருவராக நிலைத்து நின்று தனது கல்லூரி சார்பில் போராடிய ஜெஹான் டேனியல், கீழ்வரிசை வீரர்களுடன் இணைந்து ஓட்ட எண்ணிக்கையை அதிகப்படுத்தினார்.

151 பந்துகளை எதிர்கொண்ட அவர் அபாரமான துடுப்பாட்டத்தினை வெளிப்படுத்தி 12 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் உள்ளடங்கலாக ஆட்டமிழக்காது 124 ஓட்டங்களை விளாசி தனது அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீட்டெடுத்தார். அவரது சதத்தின் உதவியுடன் புனித ஜோசப் கல்லூரி 205 ஓட்டங்களை குவித்துக் கொண்டது.

இதன் போது 8ஆவது விக்கெட்டிற்காக ஜெஹான் டேனியல் மற்றும் பஹன் பெரேரா 93 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்து கொண்டனர். பஹன் பெரேரா 25 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் ஆட்டமிழந்தார். பந்துவீச்சில் புனித பேதுரு கல்லூரியின் சந்துஷ் குணதிலக மற்றும் மானெல்க டி சில்வா தலா 3 விக்கெட்டுகள் வீதம் கைப்பற்றினர்.

அடுத்து புனித பேதுரு கல்லூரியானது எதிரணி பெற்றுக் கொண்ட 205 ஓட்டங்களை துரத்திப் பிடித்து முதல் இன்னிங்சில் முன்னிலை பெறும் நோக்குடன் ஆடுகளத்திற்குள் பிரவேசித்தது. எவ்வாறாயினும் புனித பேதுரு கல்லூரிக்கு அழுத்தத்தை வழங்கிய ஜெஹான் டேனியல், ருச்சிர ஏக்கநாயக்க மற்றும் நிபுன் சுமனசிங்க ஒவ்வொரு விக்கெட் வீதம் வீழ்த்த, அவ்வணி ஒரு கட்டத்தில் 28 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்திருந்தது.

அனிஷ்க பெரேரா ஓட்டமெதனையும் பெறாது ஓய்வறை திரும்பியதுடன், வினுல் குணவர்தன மற்றும் சந்துஷ் குணதிலக முறையே 9 மற்றும் 10 ஓட்டங்களிற்கு ஆட்டமிழந்திருந்தனர். ஆயினும் நிதானமான துடுப்பாட்டத்தின் மூலம் அணிக்கு நம்பிக்கையளித்த ஷாலித் பெர்னாண்டோ 47 ஓட்டங்களை குவித்தார்.

அத்துடன் துடுப்பாட்டத்திலும் தனது திறமையை வெளிப்படுத்திய மானெல்க டி சில்வா ஆட்டமிழக்காது 40 ஓட்டங்களுடன் களத்தில் உள்ளார். இதன்படி புனித பேதுரு கல்லூரி 5 விக்கெட்டுகளை இழந்து 138 ஓட்டங்களுடன் முதல் தினத்தை நிறைவு செய்து கொண்டது.

இறுதியாக வீழ்ந்த இரண்டு விக்கெட்டுகளையும் ஹரீன் குரே மற்றும் ஹவின் பெரேரா ஆகியோர் வீழ்த்தினர்.

நாளை போட்டியின் இரண்டாவதும் இறுதியுமான நாளாகும்.

போட்டியின் சுருக்கம்

புனித ஜோசப் கல்லூரி – 205 (57.2) – ஜெஹான் டேனியல் 124*, ஷெவோன் பொன்சேகா 26, பஹன் பெரேரா 25, சந்துஷ் குணதிலக 3/34, மானெல்க டி சில்வா 3/35

புனித பேதுரு கல்லூரி – 138/5 (47) – ஷாலித் பெர்னாண்டோ 47, மானெல்க டி சில்வா 40*

WATCH MATCH REPLAY