சென் ஜோன்ஸ் கல்லூரி மற்றும் யாழ். மத்திய கல்லூரி அணிகளுக்கிடையே இடம்பெறும் வடக்கின் பெரும் போரின் 15ஆவது மட்டுப்படுத்தப்பட்ட 50 ஓவர் போட்டி இன்று சென் ஜோன்ஸ் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றிருந்தது. இப்போட்டியில் 5 விக்கெட்டுகளால் சென. ஜோன்ஸ் கல்லூரி வெற்றிபெற்றிருந்தது.

நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற யாழ். மத்திய கல்லூரியின் தலைவர் பிரியலக்ஷன் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தார். முதலில் துடுப்பெடுத்தாடிய யாழ். மத்திய கல்லூரி தமது ஆரம்ப 3 விக்கெட்டுகளை 22 ஓட்டங்களுக்கு இழந்து தடுமாறிக் கொண்டிருந்தது. 4 ஆவது விக்கெட்டுக்காக இணைப்பாட்டமாக 38 ஓட்டங்களைப் பெற்ற வேளையில் ஜரோசன் 22 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, அதற்கு அடுத்தடுத்த ஓவர்களில் மதுசன்(13), சஜீபன், கார்த்தீபன் ஆகியோரும் ஆட்டமிழக்க யாழ். மத்திய கல்லூரி 64 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து இக்கட்டான நிலைக்குள்ளானது. 8 ஆவது விக்கெட்டுக்காக இணைந்த தசோபன், ஜெயதர்சன் உடன் சேர்ந்து 27 ஓட்டங்களை சேகரிக்க கௌரவமான ஓட்ட எண்ணிக்கையை யாழ். மத்திய கல்லூரி எட்டிப்பிடித்தது. இறுதியாக 39.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 101 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது யாழ். மத்திய கல்லூரி அணி.  யாழ். மத்திய கல்லூரி சார்பில் ஜரோசன், மதுசன், தசோபன், ஜெயதர்சன் ஆகியோர் தவிர ஏனைய எந்தவொரு வீரரும் இரட்டை இலக்க ஒட்டங்களைப் பெறவில்லை. பந்துவீச்சில் யதுசன் 4 ஓட்டமற்ற ஓவர்கள் உள்ளடங்கலாக 9.3 ஓவர்கள் வீசி 10 ஓட்டங்களிற்கு 5 விக்கெட்டுகளையும், கபில்ராஜ், அபினாஷ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் நிரோசன் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

[rev_slider dfcc728]

.

பதிலுக்குக் களம் புகுந்த சென் ஜோன்ஸ் கல்லூரி அணிக்கு முதலாவது விக்கெட்டுக்காக 35 ஓட்டங்கள் பகிரப்பட்ட வேளையில் சோமஸ்கரன் (05) ஆட்டமிழக்க, தொடர்ந்து துடுப்பாடிய துலக்சன் 31 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்து ஆட்டமிழந்தார். அதே வேகத்தில் அடுத்தடுத்து தேவபிரசாத் (07), ஜெனி பிளமின் (08) மைதானத்தை விட்டு அகற்றப்பட போட்டி விறுவிறுப்படைந்தது. அடுத்து களம்புகுந்த கிஷாந்துஜன் 16 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுக்க போட்டி புனித ஜோன்ஸ் கல்லூரியின் கட்டுப்பாட்டிற்குள் வந்தது. யதுசன், கபில்ராஜ் ஆகியோர் முறையே ஆட்டமிழக்காது 13, 09 ஓட்டங்களைப் பெற சென் ஜோன்ஸ் கல்லூரி 5 விக்கெட்டுகளால் வடக்கின் பெரும் போரின் 15ஆவது மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் போட்டியில் வெற்றிபெற்றது.

போட்டியின் ஆட்டநாயகன் – வசந்தன் யதுசன் (10/5 & 13*)

இது வடக்கின் பெரும் போர் ஒருநாள் போட்டியில் யதுசன் பெற்றுக்கொண்ட மூன்றாவது (2014, 2016, 2017) ஆட்டநாயகன் விருது என்பது குறிப்பிடத்தக்கது.

போட்டியின் சுருக்கம்

யாழ். மத்திய கல்லூரி – 101 (39.3) – ஜரோசன் 22(47), மதுசன் 13(31), தசோபன் 14(42), ஜெயதர்சன் 10(54), யதுசன் 10/5, கபில்ராஜ் 14/2, அபினாஷ் 25/2, நிரோசன் 33/1

சென். ஜோன்ஸ் கல்லூரி – 102/5 (28.3) – துலக்சன் 31(40), கிஷாந்துஜன் 16(17) யதுசன் 13*(23), கபில்ராஜ் 09*(07), துசாந்தன் 16/2, தசோபன் 13/1, மதுசன் 20/1, சுஜன் 32/1