இலங்கை பாடசாலைகள் மெய்வல்லுனர் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் வருடாந்தம் இடம்பெற்றுவருகின்ற 48ஆவது சேர். ஜோன் டாபர்ட் கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் வருடத்தின் அதி சிறந்த கனிஷ்ட மெய்வல்லுனர் வீரராக பலப்பிட்டிய சித்தார்த்த மத்திய கல்லூரியைச் சேர்ந்த எம். அபேசேகர தெரிவானார்.

இம்முறை ஜோன் டார்பட் கனிஷ்ட மெய்வல்லுனரில் 15 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான நீளம் பாய்தலில் கலந்துகொண்ட அவர், 6.52 மீற்றர் தூரம் பாய்ந்து 13 வருடங்கள் பழைமையான போட்டி சாதனையை முறியடித்திருந்தார்.

இதன்படி, சர்வதேச மெய்வல்லுனர் சம்மேளத்தின் விதிமுறைகளின்படி 884 புள்ளிகளைப் பெற்றுக்கொண்ட அவர், வருடத்தின் அதி சிறந்த கனிஷ்ட மெய்வல்லுனர் வீரருக்கான விருதை தட்டிச் சென்றார்.

இந்நிலையில், வருடத்தின் அதி சிறந்த கனிஷ்ட மெய்வல்லுனர் வீராங்கனையாக 15 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான நீளம் பாய்தலில் 5.47 மீற்றர் தூரத்தைப் பதிவுசெய்து புதிய போட்டி சாதனையுடன் தங்கப்பதக்கத்தை வென்ற திக்வெல்ல விஜித கல்லூரியைச் சேர்ந்த சதுனி கவீசா தெரிவானார். சர்வதேச மெய்வல்லுனர் சம்மேளத்தின் விதிமுறைகளின்படி 820 புள்ளிகளைப் பெற்றுக்கொண்ட அவர், வருடத்தின் அதி சிறந்த நீளம் பாய்தல் வீராங்கனைக்கான விருதையும் தட்டிச் சென்றார்.

48ஆவது சேர். ஜோன் டாபர்ட் கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரின் இறுதிக் கட்டம் கடந்த 8ஆம் திகதி தியகம மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் ஆரம்பமாகியது.

சேர். ஜோன் டாபர்ட் போட்டித் தொடரின் 2ஆவது நாளில் சாதனை மழை

12, 13, 14 மற்றும் 15 ஆகிய வயதுப் பிரிவுகளுக்காக 2000 இற்கும் அதிகமான பாடசாலை மாணவர்கள் பங்குபற்றலுடன் நடைபெற்ற இம்முறை ஜோன் டாபர்ட் கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டித் தொடரில் 15 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியை 59.1 செக்கன்களில் நிறைவு செய்து 11 வருடங்களுக்குப் பிறகு ஜோன் டார்பட் கனிஷ்ட மெய்வல்லுனரில் புதிய போட்டி சாதனை நிகழ்த்திய நாவல ஜனாதிபதி கல்லூரியைச் சேர்ந்த எஸ். எதிரிசிங்க, வருடத்தின் சிறந்த கனிஷ்ட குறுந்தூர ஓட்ட வீரராகத் தெரிவானார்.

ஆண்களுக்கான தொடர் ஓட்டப் போட்டிகளில் ஆண்கள் பிரிவில் நீர்கொழும்பு மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரியும், பெண்கள் பிரிவில் இரத்தினபுரி சுமனா மகளிர் கல்லூரியும் சம்பியன்களாகத் தெரிவாகின. எனினும், இம்முறைப் போட்டித் தொடரில் 15 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் பிரிவில் தலா ஒவ்வொரு தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப்பதக்கங்களை வென்ற யாழ் ஹார்ட்லி கல்லூரி, ஆண்கள் பிரிவில் 27 புள்ளிகளைப் பெற்று 2ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டது.

இதேவேளை, 48ஆவது சேர். ஜோன் டாபர்ட் கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் 62 புள்ளிகளைப் பெற்றுக்கொண்ட மருதானை புனித ஜோசப் கல்லூரி ஆண்கள் பிரிவில் ஒட்டுமொத்த சம்பியனாகவும், 62 புள்ளிகளைப் பெற்றுக்கொண்ட நாவல ஜனாதிபதி மகளிர் கல்லூரி பெண்கள் பிரிவில் ஒட்டுமொத்த சம்பியனாகவும் தெரிவாகின.

இதன்படி, போட்டிகளின் முதல் நாளில் 15 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான தட்டெறிதல் மற்றும் 13 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான நீளம் பாய்தல் மற்றும் 14 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான 80 மீற்றர் சட்டவேலி ஓட்டம் ஆகிய போட்டிகளில் 3 புதிய போட்டி சாதனைகள் நிலைநாட்டப்பட்டன.

இதனையடுத்து போட்டியின் 2ஆவது நாளில் 9 போட்டி சாதனைகள் நிகழ்த்தப்பட்ட அதேநேரம், 4 போட்டி சாதனைகள் சமப்படுத்தப்பட்டதுடன், 7 போட்டி சாதனைகள் மீண்டும் புதுப்பிக்கப்பட்டன. இதில் சுவட்டு மைதான நிகழ்ச்சிகளில் 7 சாதனைகளும், மைதான நிகழ்ச்சிகளில் 2 சாதனைகளும் நிகழ்த்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

எனினும், போட்டித் தொடரின் இறுதி நாளான இன்றைய தினம் (10), 11 போட்டி சாதனைகளும், ஒரு போட்டி சாதனை சமப்படுத்தலும் நிகழ்த்தப்பட்டன. இதில் 4 போட்டி சாதனைகள் 15 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான 4 x 100, 4 x 400 மற்றும் 14, 12 ஆகிய வயதுக்கு உட்பட்ட 4 x 100 தொடரோட்டம் ஆகிய போட்டிகளில் நிகழ்த்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதன்படி தொடர்ந்து 3 நாட்கள் இம்முறை போட்டித் தொடரில் 23 போட்டி சாதனைகள் நிகழ்த்தப்பட்டதுடன், 2 போட்டி சாதனைகள் சமப்படுத்தப்பட்டன.

ருவன்சாவின் ஹெட்ரிக் போட்டி சாதனை

சேர். ஜோன் டாபர்ட் கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடர் வரலாற்றில் சுமார் 23 வருடங்களுக்குப் பிறகு 13 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான நீளம் பாய்தலில் புதிய போட்டி சாதனை நிகழ்த்திய நாவல ஜனாதிபதி மகளிர் கல்லூரியைச் சேர்ந்த ருவன்சா வீரக்கொடி, நேற்று நடைபெற்ற பெண்களுக்கான 200 மீற்றர் ஓட்டப் போட்டியில் சுமார் 9 வருடங்களுக்குப் பிறகு புதிய போட்டி சாதனை படைத்தார். குறித்த போட்டியில் 26.7 செக்கன்களில் ஓடிமுடித்து அவர் இந்த புதிய மைல்கல்லை எட்டினார்.

இந்நிலையில், இன்று நடைபெற்ற பெண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் கலந்து கொண்ட ருவன்சா வீரக்கொடி, போட்டியை 13.0 செக்கன்களில் நிறைவுசெய்து ஹெட்ரிக் போட்டி சாதனை படைத்து ஜோன் டார்பட் மெய்வல்லுனரில் புதிய வரலாறும் படைத்தார்.

சேர். ஜோன் டாபர்ட் கனிஷ்ட மெய்வல்லுனரில் ஹார்ட்லி மாணவன் மிதுன் புதிய போட்டி சாதனை

2006 மற்றும் 2008 ஆம் ஆண்டுகளில் கொழும்பு மியூசியஸ் கல்லூரி மற்றும் மாத்தளை ஸ்ரீ சங்கமித்தா மகளிர் வித்தியாலயத்தைச் சேர்ந்த நெத்மி டி சில்வா, மெதானி விக்ரமநாயக்க ஆகிய வீராங்கனைகளால் (13.2 செக்கன்கள்) நிகழ்த்தப்பட்ட சாதனையை அவர் இவ்வாறு மீண்டும் முறியடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மல்வான்னவின் 2ஆவது போட்டி சாதனை

15 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் பிரிவில் 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் வருடத்தின் அதிவேக வீரராக காலி மஹிந்த கல்லூரியைச் சேர்ந்த எச்.எஸ் மல்வான்ன தெரிவானார். அவர் குறித்த போட்டியை 11.1 செக்கன்களில் நிறைவு செய்து தங்கப்பதக்கம் வென்றதுடன், புதிய போட்டி சாதனையும் நிகழ்த்தினார்.

இதன்படி, 1995 ஆம் ஆண்டு கொழும்பு ஆனந்த கல்லூரியைச் சேர்ந்த சந்தன கோட்டேகொட (11.3 செக்கன்கள்) நிகழ்த்திய சாதனையை சுமார் 22 வருடங்களுக்குப் பிறகு மல்வான்ன முறியடித்தார்.

எனினும், நேற்று (09) நடைபெற்ற 15 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான 200 மீற்றர் ஓட்டப் போட்டியில் கலந்து கொண்ட மல்வான்ன, குறித்த போட்டியை 22.6 செக்கன்களில் நிறைவுசெய்து புதிய போட்டி சாதனை நிகழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

விஜேதுங்கவுக்கு ஹெட்ரிக் தங்கம்

14 வயதுக்கு உட்பட்ட பெண்கள் பிரிவில் கலந்து கொண்ட கொழும்பு ஆனந்த மகளிர் கல்லூரியைச் சேர்ந்த ஜி. விஜேதுங்க 200 மீற்றர் ஓட்டப் போட்டியில் புதிய போட்டி சாதனை நிகழ்த்தியதுடன், இன்று நடைபெற்ற 100 மற்றும் 400 மீற்றர் ஓட்டப் போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்று இம்முறை போட்டித் தொடரில் ஹெட்ரிக் தங்கம் வென்று அசத்தினார்.

இதில் இன்று நடைபெற்ற பெண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் கலந்து கொண்ட அவர், குறித்த போட்டியை 12.9 செக்கன்களில் நிறைவுசெய்து குறித்த பிரிவில் வருடத்தின் அதிவேக வீராங்கனையாக மாறியதுடன், ஒரு செக்கனில் முன்னைய போட்டி சாதனையை முறியடிக்கும் வாய்ப்பை தவறிவிட்டார். முன்னதாக 2008 ஆம் ஆண்டு ராஜகிரிய கேட்வே சர்வதேச பாடசாலையைச் சேர்ந்த ருவன்தி பேர்டினென்டஸ் 12.8 செக்கன்களில் குறித்த போட்டியை நிறைவுசெய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதனைத் தொடர்ந்து, நடைபெற்ற பெண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் கலந்து கொண்ட ஜி. விஜேதுங்க, குறித்த போட்டியை 62.2 செக்கன்களில் நிறைவுசெய்து தங்கப்பதக்கம் வென்றார்.

இதேவேளை, நேற்று நடைபெற்ற 200 மீற்றர் ஓட்டப் போட்டியில் கலந்து கொண்ட ஜி. விஜேதுங்க, 26.4 செக்கன்களில் போட்டியை நிறைவுசெய்து புதிய போட்டி சாதனை நிகழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

உயரம் மற்றும் நீளம் பாய்தலில் புதிய சாதனை

போட்டிகளின் 3 ஆவது நாளான இன்று நடைபெற்ற மைதான நிகழ்ச்சிகளில் 2 போட்டி சாதனைகள் நிகழ்த்தப்பட்டன. இதில் 14 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான உயரம் பாய்தலில் பன்னிப்பிட்டிய தர்மபால கல்லூரியைச் சேர்ந்த உதில் வித்சரித், புதிய போட்டி சாதனை படைத்தார். அவர் குறித்த போட்டியில் 1.75 மீற்றர் தூரத்தைப் பாய்ந்து 2000 ஆம் ஆண்டு மாதம்பை சுகாதானந்த மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த எஸ்.டி சில்வா (1.74 மீற்றர்) நிலைநாட்டிய சாதனையை 7 வருடங்களுக்குப் பிறகு முறியடித்தார்.

அத்துடன், 15 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான நீளம் பாய்தலில் கலந்து கொண்ட பலப்பிட்டிய சித்தார்த்த மத்திய கல்லூரியைச் சேர்ந்த எம். அபேசேகர, 6.52 மீற்றர் தூரம் பாய்ந்து புதிய போட்டி சாதனையை நிகழ்த்தினார்.

சேர். ஜோன் டாபர்ட் கனிஷ்ட மெய்வல்லுனரில் யாழ் ஹார்ட்லிக்கு முதல் பதக்கம்

முன்னதாக 2004 ஆம் ஆண்டு காலி றிச்மண்ட் கல்லூரியைச் சேர்ந்த சி. குமார, 6.34 மீற்றர் தூரம் பாய்ந்து நிலைநாட்டிய சாதனையை 13 வருடங்களுக்குப் பிறகு அவர் முறியடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

400 மீற்றரில் மேலும் 3 புதிய போட்டி சாதனைகள்

15 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் கலந்து கொண்ட நாவல ஜனாதிபதி கல்லூரியைச் சேர்ந்த எஸ். எதிரிசிங்க, போட்டியை 59.1 செக்கன்களில் நிறைவு செய்து 2006 ஆம் ஆண்டு கொழும்பு மகளிர் கல்லூரியைச் சேர்ந்த தனுஷ்கி பெரேரா (59.4 செக்கன்கள்) நிகழ்த்திய சாதனையை 11 வருடங்களுக்குப் பிறகு முறியடித்தார்.

இந்நிலையில், 14 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் கலந்து கொண்ட குருநாகலை சேர். ஜோன் கொத்தலாவல மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த எஸ். ஜயசுந்தர, 55.1 செக்கன்களில் நிறைவுசெய்து தங்கப்பதக்கத்தை வென்றதுடன், புதிய போட்டி சாதனையும் நிகழ்த்தினார். முன்னதாக கடந்த வருடம் கொழும்பு கேரி கல்லூரியைச் சேர்ந்த துலான்ஞன் பெரேரா (55.4 செக்கன்கள்) நிகழ்த்திய சாதனையை அவர் முறியடித்தார்.

இதேவேளை, 15 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான 400 மீற்றரில் கலந்து கொண்ட கொடகம ஆனந்த சாஸ்த்ராலயா தேசிய பாடசாலையைச் சேர்ந்த பி. அபேவர்தன, 51.1 செக்கன்களில் போட்டியை நிறைவுசெய்து 2004 ஆம் ஆண்டில் நிலைநாட்டப்பட்டு 2008 ஆம் ஆண்டு சமப்படுத்தப்பட்ட (54.6 செக்கன்கள்) சாதனையை முறியடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.