புனித அந்தோனியார் கல்லூரியின் இரண்டாம் பாதி அபாரத்தினால் தோல்வியை தழுவியது தர்மராஜ கல்லூரி

251
St. Anthony's College vs Dharmaraja College

சிங்கர் ரக்பி லீக் தொடரின் ஆறாம் வாரத்திற்கான போட்டியொன்றில் புனித அந்தோனியார் கல்லூரி மற்றும் தர்மராஜ கல்லூரி அணிகள் மோதிக் கொண்டன. நித்தவளை மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியில் புனித அந்தோனியார் கல்லூரி 34-24 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றியை சுவீகரித்துக் கொண்டது.

கடந்த போட்டிகளைப் போன்றே இப்போட்டியையும் ட்ரை ஒன்றுடன் ஆரம்பித்தது தர்மராஜ கல்லூரி. 3 தடுப்பு வீரரர்களை தாண்டி முன்னேறிய அணித்தலைவர் சாமிக பெரேரா வலப்பக்க மூலையில் ட்ரை வைத்தார். கிஹான் இஷார கொன்வெர்சன் உதையை வெற்றிகரமாக உதைத்தார். (புனித அந்தோனியார் கல்லூரி 00 – 07 தர்மராஜ கல்லூரி)

சில நிமிடங்கள் கடந்த நிலையில் தர்மராஜ கல்லூரியின் இரண்டாவது சென்டர் வீரரான கிஹான் மாலிங்க முதல் ட்ரையினை போன்ற மற்றுமொரு ட்ரையினை பெற்று புள்ளி வித்தியாசத்தை அதிகரித்தார். சாமிக பெரேராவிடம் இருந்து பந்தை பெற்றுக் கொண்ட கிஹான் மாலிங்க இடப்பக்க மூலையில் ட்ரை வைத்தார். எனினும் இம்முறை கிஹான் இஷார உதையினை தவறவிட்டார். (புனித அந்தோனியார் கல்லூரி 00 – 12 தர்மராஜ கல்லூரி)

முன்வரிசை வீரர்களின் சிறப்பான நகர்வுகளின் பின்னர் மொஹமட் மகாரிம் புனித அந்தோனியார் கல்லூரிக்கு முதல் ட்ரையினை பெற்றுக் கொடுத்தார். கம்பங்களுக்கு அருகில் கிடைத்த இலகுவான கொன்வெர்சன் உதையை சாமுவேல் மதுவந்த புள்ளிகளாக மாற்றினார். (புனித அந்தோனியார் கல்லூரி 07 – 12 தர்மராஜ கல்லூரி)

எனினும் அசத்தலான ஆட்டத்தினை வெளிப்படுத்திய தர்மராஜ கல்லூரியின் பின்கள வீரர்கள் மற்றும் அணித்தலைவர் சாமிக பெரேரா ஆகியோர் மற்றுமொரு ட்ரை வாய்ப்பினை உருவாக்கிக் கொண்டனர். சாமிக பெரேரா தடுப்பு வீரர்களை தன் பக்கம் ஈர்த்து பந்தினை லாவகமாக விங் நிலை வீரரான துலந்த பியதிஸ்ஸவிற்கு கடத்த, அவர் ட்ரை வைத்தார். இம்முறை இடப்பக்க மூலையில் கிடைத்த கொன்வெர்சன் உதையை கிஹான் இஷார வெற்றிகரமாக உதைத்தார். (புனித அந்தோனியார் கல்லூரி 07 – 19 தர்மராஜ கல்லூரி)

தர்மராஜ கல்லூரி போட்டியில் ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில் புனித அந்தோனியார் கல்லூரிக்கு பெனால்டி வாய்ப்பொன்று கிடைத்ததுடன், புள்ளி வித்தியாசத்தை குறைக்க எண்ணிய அவ்வணி கம்பங்களை நோக்கி உதைக்க முடிவெடுத்தது. சாமுவேல் மதுவந்தவின் உதை கம்பங்களை ஊடறுத்துச் செல்ல, புனித அந்தோனியார் கல்லூரி மூன்று புள்ளிகளை பெற்றுக் கொண்டது. (புனித அந்தோனியார் கல்லூரி 10 – 19 தர்மராஜ கல்லூரி)

புனித அந்தோனியார் கல்லூரியின் அணித்தலைவர் தினுக் அமரசிங்க அபாரமான ஓட்டத்தின் மூலம் பல தடுப்பு வீரர்களை தாண்டி ஏறத்தாழ 60m தூரத்தினை கடந்து அற்புதமான ட்ரை ஒன்றை வைத்தார். சுலபமான உதையை சாமுவேல் மதுவந்த உதைக்க, புள்ளி வித்தியாசம் இரண்டாக குறைந்தது. (புனித அந்தோனியார் கல்லூரி 17 – 19 தர்மராஜ கல்லூரி)

முதல் பாதி நிறைவடையும் தருவாயில் தர்மராஜ கல்லூரியின் கிஹான் மாலிங்க தனது இரண்டாவது ட்ரையினை பெற்றுக் கொண்டார். பவந்த உடன்கமுவவிடம் இருந்து பந்தை பெற்றுக் கொண்ட அவர் ட்ரை வைத்ததுடன், கொன்வெர்சன் உதையை கிஹான் இஷார தவறவிட்டார். அத்துடன் முதல் பாதி நிறைவுக்கு வந்தது. (புனித அந்தோனியார் கல்லூரி 17- 24 தர்மராஜ கல்லூரி)

இதேவேளை இரண்டு அணிகளினதும் முக்கிய வீரர்களான சாமுவேல் மதுவந்த மற்றும் கிஹான் மாலிங்க ஆகியோர் உபாதைகள் காரணமாக ஆடுகளத்தை விட்டு வெளியேறியதன் காரணமாக இரு அணிகளும் பின்னடைவை சந்தித்திருந்தன.

முதல் பாதி: புனித அந்தோனியார் கல்லூரி 17- 24 தர்மராஜ கல்லூரி

இரண்டாம் பாதி ஆரம்பித்து சில நிமிடங்களில் மொஹமட் மகாரிமிடமிருந்து பந்தை பெற்றுக் கொண்ட தினுக் அமரசிங்க தனது இரண்டாவது ட்ரையினை வைத்து புனித அந்தோனியார் கல்லூரிக்கு சிறப்பான ஆரம்பம் ஒன்றை பெற்றுக் கொடுத்தார். மாற்று வீரராக களமிறங்கிய சமோத் வனசிங்க தன் முதலாவது கொன்வெர்சன் உதையை தவறவிட்டார். (புனித அந்தோனியார் கல்லூரி 22 – 24 தர்மராஜ கல்லூரி)

இதனை தொடர்ந்து புனித அந்தோனியார் கல்லூரி முன்னேற்றகரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் மறுபுறத்தில் தர்மராஜ கல்லூரி தமக்கு கிடைத்த பல வாய்ப்புகளை அடுத்தடுத்து தவறவிட்டது. இந்நிலையில் புனித அந்தோனியார் கல்லூரிக்கு ஸ்க்ரம் வாய்ப்பொன்று கிடைத்ததுடன், அதனை சிறப்பாக பயன்படுத்திக் கொண்ட 8ஆம் இலக்க வீரரான மொஹமட் ஷபீர் தமது அணியின் நான்காவது ட்ரையினை வைத்து போனஸ் புள்ளியை பெற்றுக் கொடுத்தார். இலகுவான உதையை சமோத் வனசிங்க உதைத்ததுடன், போட்டியில் முதல் முறையாக புனித அந்தோனியார் கல்லூரி முன்னிலை பெற்றுக் கொண்டது. (புனித அந்தோனியார் கல்லூரி 29 – 24 தர்மராஜ கல்லூரி)

இறுதி 10 நிமிடங்களில் ட்ரை ஒன்றினை பெற்றுக் கொள்ள தர்மராஜ கல்லூரி பல முயற்சிகளை மேற்கொண்டதுடன், எதிரணியின் பாதிக்குள் பலத்த அழுத்தத்தை வழங்கியது. எனினும் புனித அந்தோனியார் கல்லூரி வீரர்கள் சிறப்பாக தடுப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன் தர்மராஜ கல்லூரி அணி முக்கிய தருணங்களில் தவறுகளை இழைத்த காரணத்தினால் பந்தை கையிருப்பில் வைத்திருக்க தவறியது.

இவ்வாறான சூழ்நிலையில் பந்தினை பெற்றுக் கொண்ட புனித அந்தோனியார் கல்லூரி 76ஆவது நிமிடத்தில் ஜனிது ஹிம்ஸர ஊடாக ட்ரை ஒன்றினை வைத்து தனது வெற்றியை உறுதி செய்துகொண்டது. கடினமான உதையை சமோத் வனசிங்க தவறவிட்ட போதிலும், அத்துடன் போட்டி நிறைவுக்கு வந்ததுடன் புனித அந்தோனியார் கல்லூரி வெற்றியை தனதாக்கிக் கொண்டது. (புனித அந்தோனியார் கல்லூரி 34 – 24 தர்மராஜ கல்லூரி)

முழுநேரம்: புனித அந்தோனியார் கல்லூரி 34 – 24 தர்மராஜ கல்லூரி

ThePapare.com இன் ஆட்டநாயகன் – தினுக் அமரசிங்க (புனித அந்தோனியார் கல்லூரி)

புள்ளிகளைப் பெற்றோர்

புனித அந்தோனியார் கல்லூரி – 34

தினுக் அமரசிங்க (1T)

மொஹமட் மகாரிம் (1T)

மொஹமட் ஷபீர் (1T)

ஜனிது ஹிம்ஸர (1T)

சாமுவேல் மதுவந்த (1C 1P)

சமோத் வனசிங்க (1C)

தர்மராஜ கல்லூரி – 24

கிஹான் மாலிங்க (2T)

சாமிக பெரேரா (1T)

துலந்த பியதிஸ்ஸ (1T)

கிஹான் இஷார (2C)