குருநாகல, வெலகெதர கிரிக்கெட் மைதானத்தில் புனித அன்னம்மாள் மற்றும் மலியதேவ கல்லூரிகளுக்கு இடையிலான இரண்டு நாட்களை கொண்ட 34ஆவது பெரும் சமர் இன்றைய தினம் ஆரம்பமானது. நாணய சுழற்சியில் வெற்றியீட்டிய மலியதேவ கல்லூரி, முதலில் புனித அன்னம்மாள் கல்லூரியை துடுப்பாடுமாறு பணித்தது.

அந்த வகையில் முதலில் துடுப்பாடக் களமிறங்கிய புனித அன்னம்மாள் கல்லூரி 73.5 ஓவர்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்த நிலையில் 307  ஓட்டங்களுடன் ஆட்டத்தை நிறுத்திக் கொண்டது. ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய விமுக்தி பண்டார உடல் உபாதை காரணமாக 7ஆவது ஓவரில் ஓய்வறை திரும்பினார். அதேநேரம் சிறப்பாக பந்து வீசிய மலியதேவ பந்து வீச்சாளர்கள் சொற்ப ஓட்டங்களுக்கு முதல் 2 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு புனித அன்னம்மாள் கல்லூரிக்கு நெருக்கடி கொடுத்திருந்தார்கள்.

எனினும், அதனையடுத்து இணைந்து கொண்ட ரந்தீர ரணசிங்க மற்றும் புபுது கனேகம மூன்றாவது விக்கெட்டுக்காக நிதானமாக துடுப்பாடி  இணைப்பாட்டமாக 41 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட அதேநேரம் அணியின் ஓட்ட எண்ணிகையை உயர்த்தினர். சிறப்பாக துடுப்பாடிய புபுது கனேகம 34 ஓட்டங்களால் பங்களிப்பு செய்தார்.

அவரின் ஆட்டமிழப்பின் பின்னர் போட்டியை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த ரந்தீர ரணசிங்க சிறப்பாக துடுப்பாடி 116 பந்துகளில் 98 ஓட்டங்களை பெற்ற நிலையில் துரதிஷ்டவசமாக சதம் பெறுவதற்கு இரண்டு ஓட்டங்கள் குறைவான நிலையில் ஆட்டமிழந்து சென்றார். அவ்வேளையில் மீண்டும் துடுப்பாட களம் திரும்பியிருந்த விமுக்தி பண்டார  27 ஓட்டங்களை பெற்ற நிலையில் ஆட்டமிழந்தார்.

199 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து நெருக்கடியான நிலையிலிருந்த போது ஏழாவது விக்கெட்டுக்காக இணைந்து கொண்ட தரிந்து விஜேசிங்க மற்றும் கவிந்து ரணசிங்க அரை சதங்களை பெற்றுக்கொண்டு அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்திய அதேநேரம் 108 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றுக்கொண்டனர். அந்த வகையில் புனித அன்னம்மாள் கல்லூரி 307 ஓட்டங்களை பதிவு செய்திருந்த வேளை கவிந்து ரணசிங்கவின் ஆட்டமிழப்புடன் முதல் இன்னிங்சை நிறுத்திக்கொண்டது.

அதேநேரம் மலியதேவ கல்லூரி சார்பாக சிறப்பாக பந்து வீசிய அணித்தலைவர் தமித சில்வா மற்றும் கவின் பண்டார தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர். அதனை தொடர்ந்து களமிறங்கிய மலியதேவ கல்லூரி இன்றைய நாள் அட்ட நேர நிறைவின் போது இரண்டு விக்கெட்டுகளை இழந்து 48 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுள்ளது. எட்டு விக்கெட்டுகள் கையிருப்பில் மேலும் 259 ஓட்டங்களால் பின்னிலையுற்று நெருக்கடியான நிலையில் உள்ளது.

நாளை போட்டியின் இரண்டாம் நாளாகும்.

போட்டியின் சுருக்கம்

புனித அன்னம்மாள் கல்லூரி, குருநாகல் (முதல் இன்னிங்ஸ்): 307/7d (73.5) – ரந்தீர ரணசிங்க 98, தரிந்து விஜேசிங்க 56*, கவிந்து ரணசிங்க 56, புபுது கனேகம 34, விமுக்தி பண்டார 27, தமித சில்வா 2/68

மலியதேவ கல்லூரி, குருநாகல் (முதல் இன்னிங்ஸ்): 48/2 (19) – பிரையன் சந்திரசேன 22*