கண்டியில் முதல் தடவையாக நடைபெறவுள்ள ஒலிம்பியன்ஸ் ஓட்டம்

126

சர்வதேச ஒலிம்பிக் தினத்தை முன்னிட்டு ஸ்ரீலங்கா ஒலிம்பியன்ஸ் சங்கத்தினால் முதல் தடவையாக ஏற்பாடு செய்துள்ள ஒலிம்பியன்ஸ் ரன் நட்பு ரீதியிலான ஓட்ட நிகழ்வு இம்மாதம் 22 ஆம் திகதி கண்டி போகம்பரை மைதானத்தில் நடைபெறவுள்ளது.

பாடசாலை மாணவர்கள் ஆயிரம் பேர், பல்கலைக்கழக மாணவர்கள் 300 பேர், இளைஞர் அமைப்புக்களைச் சேர்ந்த 200 பேர் என 1500 இற்கும் அதிகமானோர் இந்த ஒலிம்பியன்ஸ் ஓட்ட நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளனர்.

ஆசிய கனிஷ்ட மெய்வல்லுநர் இலங்கை அணியின் முகாமையாளர் பதவிநீக்கம்

ஜப்பானின் கிபு நகரில் இம்மாதம் 7ஆம் திகதி..

இதன்படி, கண்டி, போகம்பரை மைதானத்தில் அன்றைய தினம் காலை 8.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ள ஏழரை கிலோ மீற்றரைக் கொண்ட இந்த ஓட்ட நிகழ்வானது முற்பகல் 11.30 மணிக்கு கெடம்பே மைதானத்தில் நிறைவடையவுள்ளது.

இந்நிலையில், குறித்த ஓட்டத் தொடர் ஸ்ரீலங்கா ஒலிம்பியன்ஸ் சங்கம் ஏற்பாடு செய்திருந்த விசேட செய்தியாளர் சந்திப்பு கடந்த திங்கட்கிழமை (04) கொழும்பு என்.சீ.சீ (NCC) விளையாட்டுக் கழக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இதில் ஸ்ரீலங்கா ஒலிம்பியன்ஸ் சங்கத்தின் தலைவியும், முன்னாள் சட்டவேலி ஓட்ட வீராங்கனையுமான ஸ்ரீயானி குலவன்ச கருத்து வெளியிடுகையில்,

”எமது சங்கம் கடந்த வருடம் ஜுலை மாதம் 15 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. எனவே எமது சங்கத்தினால் ஒலிம்பிக் தினத்தை கொண்டாடும் முகமாக முதல்  தடவையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஒலிம்பியன்ஸ் ரன் நட்பு ரீதியிலான ஓட்டம் இம்மாதம் 22 ஆம் திகதி கண்டியில் நடைபெறவுள்ளது. இதனை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு நாம் எதிர்பார்த்துள்ளோம்.

அத்துடன், கண்டி திரித்துவக் கல்லூரியின் பழைய மாணவரான டங்கன் வைட் 1948 ஆம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் ஆண்களுக்கான 400 மீற்றர் சட்டவேலி ஓட்டப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று இலங்கைக்கான முதலாவது ஒலிம்பிக் பதக்கத்தை வென்று கொடுத்தார். எனவே அவரை கௌரவிக்கும் நோக்கில் அவருடைய சொந்த ஊரான கண்டியில் இந்த நட்புறவு ஒட்ட நிகழ்வை நடத்துவதற்கு தீர்மானித்தோம்.

(இந்த ஊடகவயிலாளர் சந்திப்பில் முன்னாள் குத்துச்சண்டை வீரர் சுமித் லியனகே, முன்னாள் குறுந்தூர ஓட்ட வீராங்கனை தமயந்தி தர்ஷா (செயலாளர்), முன்னாள் சட்டவேலி ஓட்ட வீராங்கனை ஸ்ரீயானி குலவன்ச (தலைவி), முன்னாள் குறுந்தூர ஓட்ட வீரர் சுகத் திலகரத்ன (உப தலைவர்), முன்னாள் நீச்சல் வீரர் ஜுலியன் போலிங் உள்ளிட்டோர் படத்தில் இருப்பதைக் காணலாம்.)

அதுமாத்திரமின்றி, பாடசாலை மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், இளைஞர் அமைப்புக்களைச் சேர்ந்த உறுப்பினர்கள், விளையாட்டு ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் இந்த ஒலிம்பியன்ஸ் நட்புறவு ஓட்டத்தில் கலந்துகொள்ளவுள்ளனர்

அதிலும், குறிப்பாக விளையாட்டில் ஆர்வத்தை ஏற்படுத்தும் நோக்கில் பாடசாலை மாணவர்களையும் இதில் இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளோம். இதன்படி, ஏழரை கிலோ மீற்றர் தூரத்தைக் கொண்டதாக இடம்பெறவுள்ள இந்த ஓட்ட நிகழ்வில் பங்கேற்கவுள்ள ஆயிரம் மாணவர்களையும் விசேட வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்திய பின்னரே பங்கேற்க அனுமதிக்கப்படுவர்.

அதுதவிர, இந்த ஓட்ட நிகழ்வில் பங்கேற்கவுள்ள அனைவருக்கும் தனிப்பட்ட முறையில் வைத்திய பரிசோதனைகளை மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளோம். எனவே அந்த வைத்திய அறிக்கைகளையும் பரிசோதனை செய்த பிறகுதான் அவர்களுக்கும் இதில் பங்கேற்க அனுமதி வழங்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இந்நிலையில், இலங்கைக்கு மற்றுமொரு வெள்ளிப் பதக்கத்தை 2000 ஆம் ஆண்டு சிட்டி ஒலிம்பிக்கில் பெண்களுக்கான 200 மீற்றர் ஓட்டப் போட்டியில் வென்று கொடுத்த சுசந்திகா ஜயசிங்க ஏன் இந்த சங்கத்தில் இணைந்து கொள்ளவில்லை என்று ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு இலங்கையின் முன்னாள் நட்சத்திர நீச்சல் வீரரும், தேசிய பயிற்சியாளர்களுள் ஒருவருமான ஜுலியன் போலிங் கருத்து வெளியிடுகையில்,

”இலங்கைக்கு இரண்டாவது ஒலிம்பிக் பதக்கத்தை வென்று கொடுத்த முன்னாள் குறுந்தூர ஓட்ட வீராங்கனையான சுசந்திகா ஜயசிங்கவை எமது சங்கத்தின் சிறப்பு அங்கத்தவராக இணைத்துக்கொள்ள நாங்கள் அவரை பல தடவைகள் தொடர்பு கொண்டோம். எனினும், அவரிடமிருந்து எந்தவொரு பதிலும் இதுவரை கிடைக்கவில்லை” என அவர் தெரிவித்தார்.

இதேநேரம், 1948 முதல் இதுவரை நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி 96 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இவர்களில் 67 பேர் தற்போது உயிருடன் உள்ளதுடன், இவர்களிலும் 47 பேர்தான் இலங்கையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். எனவே ஸ்ரீலங்கா ஒலிம்பியன்ஸ் சங்கத்தினால் முதல் தடவையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நிகழ்வில் குறைந்தபட்சம் 25 பேர் பங்கேற்க உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேநேரம், குறித்த ஓட்ட நிகழ்வினை ஒட்டி விசேட புகைப்படப் போட்டியும், மூன்று வயதுப் பிரிவுகளில் பாடசாலை மாணவர்களுக்கிடையிலான சித்திரப் போட்டியும் நடைபெறவுள்ளது.

எனவே இந்த ஒலிம்பியன்ஸ் ரன் நட்பு ரீதியிலான ஓட்டத்தை வெற்றிகரமாக நிறைவுசெய்கின்ற அனைவருக்கும் ஒலிம்பிக் வீரர்களின் கரங்களினால் பதக்கங்களும், சான்றிதழ்களும் வழங்கிவைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினர்களாக விளையாட்டுத்துறை அமைச்சர் பைசர் முஸ்தபா, ஆசிய ஒலிம்பியன்ஸ் சங்கத்தின் தலைவரான இந்தியாவைச் சேர்ந்த மலாவி உள்ளிட்ட பலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.

இதேவேளை, ஒலிம்பியன்ஸ் சங்கத்தினால் முதல் தடவையாக ஏற்பாடு செய்துள்ள ஒலிம்பியன்ஸ் ரன் நட்பு ரீதியிலான ஓட்ட நிகழ்விற்கு நெஸ்ட்லே லங்கா நிறுவனமும், ஆசிரி வைத்தியசாலையும் பிரதான அனுசரணை வழங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.