கரப்பந்தாட்ட விளையாட்டில் ஆசியாவை வென்ற இலங்கைக்கு ஏழாமிடம்

743

மியன்மாரின் தை – பெய் – தோ நகரில் நிறைவுக்கு வந்த ஆடவருக்கான ஆசிய கழக கரப்பந்தாட்டப் போட்டித் தொடரில் இலங்கையின் லங்கா லயன்ஸ் அணி, நேற்று (06) நடைபெற்ற 7ஆவது மற்றும் 8ஆவது இடத்திற்கான அணிகளைத் தீர்மானிக்கின்ற நிரல்படுத்தல் போட்டியில் சீன தாய்ப்பேயின் அணியை 3-2 என்ற செட் வித்தியாசத்தில் தோல்வியடையச் செய்தது.

இதன்மூலம், ஆரம்ப போட்டிகளில் அடுத்தடுத்து நான்கு வெற்றிகளைப் பதிவுசெய்த லங்கா லயன்ஸ் அணி, ஒட்டுமொத்த தரப்படுத்தல் நிலையில் ஏழாவது இடத்தை பெற்றுக் கொண்டது.

>> ஆசிய கரப்பந்தாட்ட அரங்கில் புதிய மைல்கல்லை எட்டிய லங்கா லயன்ஸ் அணி

கடந்த வருடம் வியட்நாமில் நடைபெற்ற ஆசிய கழக கரப்பந்தாட்டப் போட்டித் தொடரில் 11ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்ட இலங்கை அணி, இம்முறை போட்டிகளில் பிரபல அணிகளையெல்லாம் வீழ்த்தி ஆசிய மட்டத்தில் இரண்டாவது தடவையாகவும் முதல் 8 அணிகளுக்குள் இடம்பிடித்தமை இலங்கை கரப்பந்தாட்ட வரலாற்றில் பெற்றுக்கொண்ட மிகப் பெரிய வெற்றியாக பதிவாகியுள்ளது.

இம்முறை போட்டிகளில் சி குழுவில் இடம்பெற்ற லங்கா லயன்ஸ் அணி, முன்னதாக நடைபெற்ற லீக் ஆட்டங்களில் அவுஸ்திரேலியாவின் கென்பரா ஹீட் (3-0), ஹொங்கொங்கின் யான்சாய் (3-0) மற்றும் தாய்லாந்தின் நாக்கொன்ரட்சிமா (32) ஆகிய அணிகளுக்கு எதிராக அபார வெற்றிகளைப் பதிவுசெய்து குழு நிலைப் போட்டிகளில் தோல்வி அடையாத அணியாக இரண்டாம் சுற்றுக்கு தகுதிபெற்றது.

இந்த நிலையில், போட்டிகளை நடாத்தும் மியன்மாரின் ஏசியா வேர்ல்ட் கப் அணியுடன் கடந்த 03ஆம் திகதி நடைபெற்ற காலிறுதிக்கு முன்னைய சுற்றிலும் அபாரமாக விளையாடிய இலங்கை அணி, 3-2 என்ற செட் கணக்கில் வெற்றிபெற்று சுப்பர் 8 சுற்றுக்குத் தகுதிபெற்றது.  

இதனையடுத்து கடந்த சனிக்கிழமை (04) நடைபெற்ற காலிறுதிப் போட்டியில் கஸகஸ்தானின் அடிராவு கரப்பந்து கழக அணியை எதிர்கொண்ட இலங்கை வீரர்கள், எதிர்பாராதவிதமாக 1-3 என்ற செட்கள் அடிப்படையில் தோல்வியைத் தழுவி அரையிறுதிக்கான வாய்ப்பை இழந்தனர்.

>> ஆசிய கரப்பந்தாட்ட அரங்கில் புதிய மைல்கல்லை எட்டிய லங்கா லயன்ஸ் அணி

பின்னர், 5ஆவது இடத்தைத் தீர்மானிக்கும் போட்டியில் ஜப்பானின் டுராய் அரோஸ் அணியை நேற்றுமுன்தினம் (05) எதிர்கொண்ட இலங்கை அணி, முறையே 20-25, 25-19, 20-25, 21-25 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் (1-3) தோல்வி கண்டது.

இதன்படி, இம்முறை போட்டிகளில் 7ஆவது மற்றும் 8ஆவது இடங்களுக்கான அணிகளைத் தீர்மானிக்கின்ற நிரல்படுத்தல் போட்டியில் இலங்கையின் லங்கா லயன்ஸ் அணியும், சீன தாய்ப்பேயின் லோங் பவர் அணியும் நேற்று (06) பலப்பரீட்சை நடத்தின.

இந்தப் போட்டியில் ஆரம்பம் முதல் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய இலங்கை அணி வீரர்கள், 25-23, 25-22, 26-24 என புள்ளிகளைப் பெற்று 30 என்ற நேர் செட் கணக்கில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தனர்.

இலங்கை மற்றும் சீன தாய்ப்பே அணிகளுக்கிடையிலான போட்டியின் போது

இலங்கை அணி சார்பில், ஜனித சுரத் அபாரமாக விளையாடி 21 புள்ளிகளை அதிகபட்சமாகப் பெற்றுக்கொண்டார்.

இதேவேளை, இம்முறை போட்டிகளில் இலங்கை அணி பங்குபற்றிய 7 போட்டிகளிலும் குறைந்தது ஒரு தடவையாவது எதிரணியை வீழ்த்தியிருந்தமை சிறப்பம்சமாகும்.

இந்நிலையில், சிரேஷ்ட மற்றும் தேசிய வீரர்களைக் கொண்ட இலங்கை கரப்பந்தாட்ட அணியொன்று அண்மைக்காலத்தில் சர்வதேச மட்டத்தில் இடம்பெற்ற கரப்பந்தாட்டத் தொடரொன்றில் லீக் சுற்றில் முதலிடத்தைப் பெற்று காலிறுதி வரை விளையாடிய இரண்டாவது சந்தர்ப்பமாக இது வரலாற்றில் பதிவாகியது. இதற்கு முன் 2011ஆம் ஆண்டு நடைபெற்ற ஆடவருக்கான ஆசிய கரப்பந்தாட்டத் தொடரில் இலங்கை அணி எட்டாவது இடத்தைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.  

இலங்கை அணியின் இந்த குறுகிய கால முன்னேற்றத்துக்கு அண்மையில் நியமிக்கப்பட்ட செர்பிய நாட்டைச் சேர்ந்த கரப்பந்தாட்ட பயிற்றுவிப்பாளரான டெஜான் டுலிசிவிக்கின் பங்களிப்பு முக்கிய காரணம் என இலங்கை கரப்பந்தாட்ட சம்மேளனத்தின் செயலாளர் .எஸ் நாலக தெரிவித்தார்.

இதேநேரம், போட்டியின் பிறகு இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளர் கருத்து வெளியிடுகையில், ”இம்முறை போட்டியில் எமது அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 7ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டமை மகிழ்ச்சியளிக்கிறது. இந்த உத்தேவகத்துடன் அடுத்த மாதம் சொந்த மண்ணில் நடைபெறவுள்ள ஆடவருக்கான ஆசிய சவால் கிண்ண கரப்பந்தாட்டத் தொடரில் வெற்றிபெறும் முனைப்புடன் களமிறங்கவுள்ளோம். இதற்காக எமது தேசிய அணி வீரர்களும் பங்குபற்றவுள்ளனர். எனவே, இம்முறை ஆசிய கழக மட்ட கரப்பந்தாட்டப் போட்டித் தொடரில் இலங்கை அணி பெற்றுக்கொண்ட அடைவு திருப்தி அளிக்கின்றது” என அவர் தெரிவித்தார்.

>> கனிஷ்ட அதிவேக வீரர் மொஹமட் சபானுக்கு 200 மீற்றரில் தங்கப் பதக்கம்

இந்த தொடர் நிறைவடைந்துள்ள நிலையில், இலங்கை தேசிய கரப்பந்தாட்ட அணி இம்மாத இறுதியில் ஆரம்பமாகவுள்ள ஆசிய விளையாட்டு விழாவுக்காக இந்தோனேஷியா நோக்கி பயணமாகவுள்ளது.  

அதனைத்தொடர்ந்து எதிர்வரும் செப்டெம்பர் மாதம் (15 முதல் 22 வரை) கொழும்பில் முதற்தடவையாக நடைபெறவுள்ள ஆடவருக்கான ஆசிய சவால் கிண்ண கரப்பந்தாட்டப் போட்டித் தொடரிலும் இலங்கை அணி பங்குபற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேநேரம், இம்முறை ஆடவருக்கான ஆசிய கழக கரப்பந்தாட்டப் போட்டித் தொடரில் சம்பியன் பட்டத்தை ஈரானின் கஹதம் அர்டகன் அணி வெற்றி கொள்ள, கஸகஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகள் 2ஆவது மற்றும் 3ஆவது இடங்களைப் பெற்றுக்கொண்டன.

>> மேலும் பல விளையாட்டு செய்திகளைப் படிக்க <<