வீரர்களின் திறமைக்குதான் வெற்றி கிடைத்தது என்கிறார் ஹத்துருசிங்க

711

இலங்கை கிரிக்கெட் அணி பங்களாதேஷில் பெற்றுக்கொண்ட தொடர் வெற்றியானது தனது திறமையை காட்டிலும் அணியில் இடம்பெற்றிருந்த ஒவ்வொரு வீரர்களினதும் தனிப்பட்ட திறமையினால் கிடைத்த வெற்றி என இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளர் சந்திக்க ஹத்துருசிங்க தெரிவித்தார்.

[rev_slider LOLC]

பங்களாதேஷில் டெஸ்ட் மற்றும் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்களைக் கொண்ட போட்டித் தொடர்களைக் கைப்பற்றி 2018ஆம் ஆண்டை வெற்றியுடன் ஆரம்பித்துள்ள இலங்கை அணி, நேற்று (19) மாலை நாடு திரும்பியது.

உங்களது சொந்த இன்னல்களில் திசரவை பாருங்கள்

நாளுக்கு நாள் அதிகரிக்கும் தனது எடை பற்றி பிரித்தானிய..

சுமார் ஒன்றரை வருடங்களாக தொடர் தோல்விகளை சந்தித்து வந்த இலங்கை அணி, புதிய பயிற்றுவிப்பாளரான சந்திக்க ஹத்துருசிங்கவின் பயிற்றுவிப்பின் கீழ் சிறப்பாகச் செயற்பட்டு தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து வெற்றிகளை பெற்றுக்கொண்டது.

இந்நிலையில், குறித்த போட்டித் தொடரை நிறைவுசெய்த பிறகு நேற்று(19) மாலை நாடு திரும்பிய இலங்கை அணிக்கு மகத்தான வரவேற்பு அளிக்கப்பட்டதுடன், இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஹத்துருசிங்க இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் கருத்து வெளியிடுகையில்,

முதலிரண்டு போட்டிகளிலும் தோல்வியைத் தழுவினாலும், மீண்டும் திறமைகளை வெளிப்படுத்தி வெற்றிகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கை எம்மிடம் இருந்தது. எனினும், எதிரணியினர் குறித்த 2 போட்டிகளிலும் எம்மைவிட சிறப்பாக விளையாடியிருந்தனர். அதிலும் குறிப்பாக அங்குள்ள நிலைமைகளுக்கு மாறுவதற்கு எமது வீரர்களுக்கு சிறிது நேரம் தேவைப்பட்டது. எனவே அவற்றையெல்லாம் சரிசெய்து கொண்டு மீண்டும் திறமைகளை வெளிப்படுத்தி எஞ்சிய போட்டிகளில் வெற்றிகளைப் பதிவு செய்ய முடிந்ததாக அவர் தெரிவித்தார்.

இந்நிலையில், உபாதைக்குள்ளாகியுள்ள குசல் ஜனித் பெரேரா, அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள சுதந்திர கிண்ண T-20 முத்தரப்பு தொடரில் அணியில் இடம்பெறும் பட்சத்தில் அணியில் எவ்வாறான மாற்றங்களை மேற்கொள்ள எதிர்பார்த்திருக்கிறீர்கள் என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு ஹத்துருசிங்க பதிலளிக்கையில்,  

இதே அணிதான் அந்த தொடரிலும் விளையாடுவார்கள் என கூறமுடியாது. அது எதிரணியினை கருத்திற்கொண்டுதான் தீர்மானிக்கப்படும். அதேபோல குறித்த தொடருக்காக தெரிவு செய்யப்படும் வீரர்கள் தமக்கு என்ன செய்ய வேண்டும் என்பதையும் நன்கு அறிந்து வைத்துள்ளார்கள். அதிலும் குறிப்பாக ஒவ்வொரு வீரர்களுக்கும் வழங்கப்படவுள்ள பொறுப்புக்கள் தொடர்பிலும் நாம் திட்டங்களை வகுத்து வருகின்றோம்.

அதுமாத்திரமின்றி பங்களாதேஷ் தொடரில் நாம் வீரர்களுக்கு அணிக்குள்ளேயே சிறந்த சூழலொன்றை அமைத்துக் கொடுத்தோம். என்னுடன் பணிபுரிகின்ற சக பயிற்சியாளர்கள் இதற்காக மிகப் பெரிய பங்களிப்பினை வழங்கியிருந்தனர். அதேபோல நாம் ஒவ்வொரு வீரர்களுடனும் தனிப்பட்ட முறையில் பல தடவைகள் பேசியிருந்தோம். எவ்வாறு பயப்படாமல் மைதானத்துக்குச் சென்று விளையாட வேண்டும் என்பது உள்ளிட்ட அடிப்படை விடயங்கள் தொடர்பில் தெளிவினைப் பெற்றுக் கொடுத்தோம். அதுதான் எமது வெற்றிக்கு முக்கிய காரணமாகவும் அமைந்தது என்றார்.  

இந்நிலையில், அண்மைக்காலமாக தேசிய அணியில் இருந்து நீக்கப்பட்டு வந்த திசர பெரேரா, பங்களாதேஷ் தொடரில் சகலதுறையிலும் பிரகாசித்தமை குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு ஹத்துருசிங்க பதிலளிக்கையில்,   

உண்மையைச் சொல்லப் போனால் திசரவும் மிகவும் திறமையான வீரர். நான் திசர பெரேராவுடன் அதிக நேரம் கலந்துரையாடினேன். அதிலும் அவரால் அணிக்காக என்ன செய்ய முடியும் என்பதையும், அவருடைய பொறுப்பு என்ன என்பது பற்றியும் தெளிவுபடுத்தியிருந்தேன். எனவே நீண்ட இடைவெளியின் பிறகு அணியில் இடம்பெற்றிருந்த திசரவின் பயிற்றுவிப்பு முறைகளிலும் மாற்றங்களை மேற்கொண்டமை தான் அவரை வழமையான நிலைக்கு கொண்டு வருவதற்கு முக்கிய காரணமாக அமைந்தது. எனவே தொடர்ந்து அவர் தன்னுடைய திறமைகளை வெளிப்படுத்துவார் என நான் நம்புகிறேன்.

பங்களாதேஷ் தொடரில் குடும்பமாக விளையாடினோம் – சந்திமால்

பங்களாதேஷில் இடம்பெற்று முடிந்த டெஸ்ட், ஒரு நாள்…

இதேநேரம், இலங்கையின் இன்னும் பல திறமையான வீரர்கள் உள்ளனர். ஏன் உலகின் அதிக விக்கெட்டுக்களை வீழ்த்திய வலதுகை (முத்தையா முரளிதரன்) மற்றும் இடதுகை(ரங்கன ஹேரத்) பந்துவீச்சாளர்களை கொண்ட ஒரேயொரு நாடு இலங்கைதான். இதைதவிர வேறு என்ன எமக்கு வேண்டும். எனவே நிச்சயம் எதிர்வரும் காலங்களில் திறமையான வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும். அதிலும் குறிப்பாக தற்போதுள்ள வீரர்களின் திறமையில் நாளுக்கு நாள் முன்னேற்றம் காணப்படுகின்றது. மேலும் 4 வீரர்கள் உபாதைகளுக்கு முகங்கொடுத்துள்ளனர். எனவே அவர்களும் அணிக்கு திரும்பினால் பலமிக்க அணிகளுக்கு எம்மால் சிறந்த போட்டியைக் கொடுக்க முடியும் என அவர் தெரிவித்தார்.

இதேவேளை, அடுத்த மாதம் கொழும்பில் நடைபெறவுள்ள முத்தரப்பு T-20 தொடர் தான் இலங்கை அணியின் அடுத்த இலக்காகும். இதில் பிரபல இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுடன் இலங்கை அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இப்போட்டித் தொடருக்கான ஆயத்தம் குறித்து ஹத்துருசிங்க கருத்து வெளியிடுகையில்,

எமக்கு கிடைக்கவுள்ள எதிரணி தொடர்பில் ஆழமாக ஆராய்ந்து எங்களுடைய இலக்கை அடைவதற்கு எதிர்பார்த்துள்ளோம். இதுதொடர்பில் நாங்கள் வீரர்களுக்கு அறியப்படுத்தியுள்ளோம். அவர்களுடைய பொறுப்பு என்ன என்பது பற்றி தெளிவுபடுத்தியுள்ளோம். எனவே அனைத்து வீரர்களும் தமது 100 சதவீத பங்களிப்பினை வழங்குவார்கள் என எதிர்பார்க்கிறோம்.

கிரிக்கெட் விளையாட்டில் வெற்றியையோ, தோல்வியையோ எப்போதும் எதிர்பார்க்க முடியாது. தொடர்ந்து நாம் பயிற்சியளிப்பதும் ஒவ்வொரு முறையும் விளையாடுவதும் நல்லதுதான். நாம் எங்களால் இயன்றதைச் செய்தால், விளையாடுவதை விட அதிக வெற்றிகளைப் பெற்றுக் கொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<