T20 உலக சம்பியன்ஷிப் தொடருக்கான இலங்கை மகளிர் அணி அறிவிப்பு

233

எதிர்வரும் நவம்பர் மாதம் மேற்கிந்திய தீவுகளில் ஆரம்பமாகவுள்ள மகளிர் அணிகளுக்கான T20 உலக சம்பியன்ஷிப் தொடரில் பங்கெடுக்கும், 15 பேர் அடங்கிய இலங்கை மகளிர் கிரிக்கெட் குழாம் இன்று (12) வெளியிடப்பட்டுள்ளது.

ஆறாவது முறையாக நடைபெறவுள்ள மகளிர் அணிகளுக்கான இந்த மகளிர் T20 உலக சம்பியன்ஷிப் தொடரில், இலங்கை மங்கைகளை வழிநடாத்தும் பொறுப்பினை சமரி அட்டபத்து ஏற்றுள்ளார்.

இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டத்தை கட்டுப்படுத்துவது குறித்து அகில தனன்ஜய

28 வயதாகும் சமரி அட்டபத்து, அண்மையில் நடந்து முடிந்த இந்திய மகளிர் அணிக்கு எதிரான T20 தொடரில் இலங்கை சார்பாக அதிக ஓட்டங்கள் பெற்றிருந்ததோடு, கடந்த காலங்களில் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளில் இலங்கை மகளிர் அணிக்காக துடுப்பாட்டம், பந்துவீச்சு என இரண்டு துறைகளிலும் ஜொலிக்கும் ஒருவராகவும் உள்ளார்.

முதல் முறையாக நடுவர் தீர்ப்புக்கு எதிராக முறையிடும் செய்யும் முறைமை (DRS) அறிமுகப்படுத்தப்படவுள்ள இந்த T20 உலக சம்பியன்ஷிப் தொடரில் இலங்கையின் துடுப்பாட்டத்துக்கு வலுச்சேர்க்க யசோதா மெண்டிஸ், எஷானி லொக்குசூரியகே, ஹசினி பெரேரா மற்றும் ரெபேக்கா வன்டோர்ட் ஆகியோருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கின்றது.

பத்து நாடுகளின் மகளிர் கிரிக்கெட் அணிகள் பங்கு கொள்கின்ற இம்முறைக்கான தொடரில் இலங்கை மகளிர் அணி தமது பந்துவீச்சுத்துறையினை பலப்படுத்த சஷிகலா சிறிவர்தன, உதேஷிகா ப்ராபோதனி, ஓஷதி ரணசிங்க மற்றும் ஸ்ரீபாலி வீரக்கொடி ஆகியோரின் சேவைகளை எதிர்பார்க்கின்றது.

இவர்களில் சஷிகலா சிறிவர்தன சுழல் பந்துவீச்சாளர் என்பதோடு T20 சர்வதேசப் போட்டிகளில் அவர் இதுவரையில் 60 இற்கும் மேலான விக்கெட்டுக்களை சாய்த்த அனுபவத்தையும் கொண்டிருக்கின்றார். இதேநேரம் ஸ்ரீபாலி வீரக்கொடி, உதேஷிகா ப்ரபோதினி மற்றும்  ஓஷதி ரணசிங்க ஆகியோர் வேக மங்கைகளாக எதிரணியின் விக்கெட்டுக்களை சாய்க்க கூடியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேநேரம், இலங்கை மகளிர் அணியின் சிரேஷ்ட வீராங்கனைகளான  இனோக்கா ரணவீர மற்றும் நிபுனி ஹன்சிக்கா ஆகியோர் இத்தொடரிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை மகளிர் அணி அண்மையில் பலம் மிக்க இந்திய மகளிர் அணியுடன் இடம்பெற்ற T20 தொடரினை 4-0 என பறிகொடுத்திருந்த போதிலும், குறித்த தொடரில் அனைத்து போட்டிகளிலும் இந்திய மகளிர் அணிக்கு சவால் தரும் வகையில் செயற்பட்டிருந்தது.

T20 உலக சம்பியன்ஷிப் தொடரில், குழு A இல் போட்டியிடும் இலங்கை மகளிர் அணி நவம்பர் மாதம் 10 ஆம் திகதி தமது முதல் போட்டியில், T20 மகளிர் அணிகளுக்கான தரவரிசையில் இரண்டாம் இடத்தில் இருக்கும் இங்கிலாந்து மகளிர் அணியை சென். லூசியா மைதானத்தில் எதிர்கொள்ளவுள்ளது.

அகில தனன்ஜய திறமை வாய்ந்த பந்துவீச்சாளர் – ஜோ ரூட்

T20 உலக சம்பியன்ஷிப் தொடருக்கான இலங்கை மகளிர் அணி – சமரி அட்டபத்து (அணித்தலைவி), நிலக்ஷி டி சில்வா, கவிஷா டில்ஹாரி, அமா காஞ்சனா, சுகந்திகா குமாரி, எஷானி லொக்குசூரியகே, திலானி மனோதரா, யஷோதா மெண்டிஸ், ஹசினி பெரேரா, உதேஷிகா ப்ரபோதினி, இனோஷி ப்ரியதர்ஷினி, ஓஷதி ரணசிங்க, சஷிகலா சிறிவர்தன, ரெபேக்கா வன்டோர்ட், ஸ்ரீபாலி வீரக்கொடி.

T20 உலக சம்பியன்ஷிப் தொடரில் இலங்கை மகளிர் அணி பங்குகொள்ளும் போட்டிகள்

நவம்பர் 10 – இலங்கை எதிர் இங்கிலாந்து – சென். லூசியா

நவம்பர் 12 – இலங்கை எதிர் தென்னாபிரிக்கா – சென். லூசியா

நவம்பர் 14 – இலங்கை எதிர் பங்களாதேஷ் – சென். லூசியா

நவம்பர் 16 – இலங்கை எதிர் மேற்கிந்திய தீவுகள் – சென். லூசியா

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க