தென்னாபிரிக்க தொடர்களுக்கான இலங்கை மகளிர் அணி அறிவிப்பு

105

தென்னாபிரிக்காவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ள இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி, அங்கு தென்னாபிரிக்க மகளிர் கிரிக்கெட் அணியுடன் மூன்று போட்டிகள் கொண்ட T20 தொடர் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் என்பவற்றில் விளையாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த சுற்றுப் பயணத்தின் போது தென்னாபிரிக்க மகளிர் கிரிக்கெட் அணியுடன் விளையாடவுள்ள 15 பேர் அடங்கிய இலங்கை மகளிர் கிரிக்கெட் குழாம் இன்று (22) வெளியிடப்பட்டுள்ளது.

வெளியிடப்பட்டிருக்கும் இலங்கை மகளிர் குழாத்தின் அடிப்படையில் இடதுகை வேக மங்கையான தரிக்க செவ்வந்தி முதல் தடவையாக இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியினை சர்வதேசப் போட்டிகளில் பிரதிநிதித்துவம் செய்யும் சந்தர்ப்பத்தினைப் பெற்றிருக்கின்றார்.

இலங்கையுடனான டெஸ்ட் போட்டியில் 25 வயதுடைய ஆஸி வீரர் இணைப்பு

கோல்ட்ஸ் கழகத்திற்காக விளையாடி வரும் வெறும் 21 வயதேயான தரிக்க செவ்வந்தி பந்துவீச்சோடு மட்டுமல்லாது துடுப்பாட்டத்திலும் ஜொலிக்க கூடிய ஒரு வீராங்கனை என்பது குறிப்பிடத்தக்கது.

இதேநேரம், தென்னாபிரிக்க சுற்றுப் பயணத்திற்கான இலங்கை மகளிர் அணியினை வழிநடாத்தும் பொறுப்பை வழமை போன்று சமரி அட்டபத்து ஏற்றிருக்கின்றார்.

துடுப்பாட்ட சகலதுறை (Batting all-rounder) வீராங்கனையான சமரி அட்டபத்து, இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிக்காக கடந்த ஆண்டில் அதிக ஓட்டங்களை குவித்த வீராங்கனையாக மாறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதேநேரம், சமரி அட்டபத்து போன்று இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிக்கு துடுப்பாட்டத்தில் பலம் சேர்க்க கூடிய மற்றுமொரு அனுபவ வீராங்கனையான சஷிகலா சிறிவர்தனவும் தென்னாபிரிக்க சுற்றுப் பயணத்தில் விளையாடும் சந்தர்ப்பத்தினை பெற்றிருக்கின்றார்.

இவர்களோடு தென்னாபிரிக்க சுற்றுப் பயணத்தில் இலங்கை மகளிர் அணியின் துடுப்பாட்டத்துறைக்கு வலுச்சேர்க்கும் ஏனைய வீராங்கனைகளாக பிரசாதினி வீரக்கொடி, அனுஷ்கா சஞ்சீவனி மற்றும் ஹசினி பெரேரா ஆகியோர் காணப்படுகின்றனர்.

மறுமுனையில் பந்துவீச்சிற்கு பலம் சேர்க்க உதேஷிகா பிரபோதினி, இனோக்கா ரணவீர மற்றும் கவீஷா தில்ஹாரி ஆகியோர் இலங்கை மகளிர் கிரிக்கெட் குழாமில் காணப்படுகின்றனர்.

இலங்கை மகளிர் அணி தமது தென்னாபிரிக்க சுற்றுப் பயணத்தினை பெப்ரவரி மாதம் 01 ஆம் திகதி கேப்டவுன் நகரில் இடம்பெறும் T20 தொடரின் முதல் போட்டியுடன் ஆரம்பம் செய்கின்றது.

இதன் பின்னர், இலங்கை – தென்னாபிரிக்க மகளிர் அணிகளுக்கு இடையிலான T20 தொடரின் இரண்டாவது போட்டி பெப்ரவரி மாதம் 03 ஆம் திகதி ஜொஹன்னஸ்பேர்க் நகரில் இடம்பெறவுள்ளதுடன் மூன்றாவதும் இறுதியுமான போட்டி பெப்ரவரி மாதம் 06 ஆம் திகதி செஞ்சுரியன் நகரில் இடம்பெறவுள்ளது.

ஒருநாள் அரங்கில் கோஹ்லியின் சாதனையை முறியடித்த ஹசிம் அம்லா

T20 தொடரினை அடுத்து இரு அணிகளும் மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாட பொச்சேஸ்ப்ரூம் நகருக்கு பயணமாகின்றன.

பொச்சேஸ்ப்ரூம் நகரில் ஒரு நாள் தொடரின் முதல் போட்டி பெப்ரவரி மாதம் 11 ஆம் திகதியும், இரண்டாவது போட்டி பெப்ரவரி மாதம் 14 ஆம் திகதியும், மூன்றாவது போட்டி பெப்ரவரி மாதம் 17 ஆம் திகதியும் இடம்பெறவுள்ளது.

இப்படியாக தென்னாபிரிக்க அணியுடனான அனைத்து தொடர்களினையும் நிறைவு செய்த பின்னர், இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி பெப்ரவரி மாதம் 18 ஆம் திகதி நாடு திரும்பவுள்ளது.

இலங்கை மகளிர் அணி

  1. சமரி அட்டபத்து (அணித்தலைவி)
  2. பிரசாதினி வீரக்கொடி
  3. அனுஷ்கா சஞ்சீவனி
  4. தரிக்கா செவ்வந்தி
  5. ஹாசினி பெரேரா
  6. இமால்கா மெண்டிஸ்
  7. ஹர்சித்த சமரவிக்ரம
  8. சஷிகலா சிறிவர்தன
  9. உமேஷா திமேஷனி (உடற்தகுதி உறுதி செய்யப்படும் பட்சத்தில்)
  10. நிலக்ஷி டி சில்வா
  11. கவீஷா டில்ஹாரி
  12. அச்சினி குலசூரிய
  13. உதேஷிகா பிரோபதினி
  14. இனோக்கா ரணவீர
  15. ஒசதி ரணசிங்க

மேலதிக வீராங்கனைகள்

  1. ஹன்சிம கருணாரத்ன
  2. மதுஷிகா மெத்தனானன்த
  3. சத்யா சந்தீப்பனி
  4. இனோஷி பெர்னாந்து
  5. சுஹந்திக்கா குமாரி

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<