அடுத்தடுத்த வெற்றிகளுக்குப்பின் பாகிஸ்தான் மகளிரிடம் வீழ்ந்த இலங்கை

164

மகளிர் ஆசிய கிண்ண டி20 தொடரில் பாகிஸ்தானுடனான போட்டியில் இலங்கை மகளிர் அணி கடைசி ஓவர் வரை போராடியபோதும் வெற்றி இலக்கை எட்ட முடியாமல் 23 ஓட்டங்களால் தோல்வியை சந்தித்தது.

இதன்போது பாகிஸ்தான் சுழல் வீராங்கனை நிதா தார் இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வரிசையை சாய்த்தது, இலங்கை அணிக்கு வெற்றி இலக்கை நோக்கி செல்வதில் நெருக்கடியை ஏற்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.  

மலேசியாவை சவாலின்றி வென்ற இலங்கை மகளிர்

மகளிர் ஆசிய கிண்ண டி-20 தொடரில் மலேசியாவுடனான..

எனினும் இந்த தொடரில் முதல் இரு போட்டிகளிலும் இலகு வெற்றியை பெற்றதன் மூலம் ஷஷிகலா சிறிவர்தன தலைமையிலான இலங்கை மகளிர் அணி 4 புள்ளிகளுடன் நிகர ஓட்ட விகிதத்தின் அடிப்படையில் இரண்டாவது இடத்தை தக்கவைத்துக் கொண்டிருப்பதன் மூலம் அதற்கு இறுதிப் போட்டிக்கு முன்னேற அதிக வாய்ப்பு உள்ளது.

கோலாலம்பூரில் உள்ள கின்ராரா அகடமி ஓவல் மைதானத்தில் இன்று (06) நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை மகளிர் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பாடக் களமிறங்கிய பாகிஸ்தான் மகளிர் அணியின் முதல் விக்கெட்டை 16 ஓட்டங்களில் இலங்கை அணியால் வீழ்த்த முடிந்தது. சுகந்திகா குமாரியின் பந்தில் ஆரம்ப துடுப்பாட்ட வீராங்கனை முனீபா அலி 5 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

எனினும், இரண்டாவது விக்கெட்டுக்கு இணைந்த நாஹிதா கான் மற்றும் அணித்தலைவி பிஸ்மாஹ் மஹ்ரூப் 60 ஓட்டங்களை பகிர்ந்துகொண்டனர். குறிப்பாக அணித்தலைவி பிஸ்மாஹ் சிறப்பாக துடுப்பெடுத்தாடி ஆட்டமிழக்காது 41 பந்துகளில் 60 ஓட்டங்களை குவித்தார். மறுமுனையில் நாஹிதா கான் 34 பந்துகளில் 38 ஓட்டங்களைப் பெற்றார்.

இதன் மூலம் பாகிஸ்தான் மகளிர் அணிக்கு 20 ஓவர்களிலும் 4 விக்கெட்டுகளை இழந்து 136 ஓட்டங்களைப் பெறமுடிந்தது. இலங்கை சார்பில் சுகந்திகா குமாரி 2 விக்கெட்டுகளை பதம்பார்த்தார். இதன் மூலம் அவர் தொடரில் மொத்தம் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

இந்நிலையில் பதிலுக்கு துடுப்பெடுத்தாட களமிறங்கிய இலங்கை மகளிர் அணி ஆரம்ப விக்கெட்டுக்கு 48 ஓட்டங்களை பெற்று ஸ்திரமான நிலையில் இருந்தபோதும் தொடர்ந்து அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்ததால் தேவைப்படும் ஓட்ட வேகத்தை பெறத் தவறியது. ஆரம்ப துடுப்பாட்ட வீராங்கனை யசோதா மெண்டிஸ் 25 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க மறுமுனையில் நிபுனி ஹன்சிக்கா 24 ஓட்டங்களுடன் வெளியேறினார்.

பங்களாதேஷை துவம்சம் செய்து ஆசிய கிண்ணத்தை ஆரம்பித்த இலங்கை மகளிர்

பங்களாதேஷ் அணியை 63 ஓட்டங்களுக்கு சுருட்டி மகளிர்..

இவர்கள் இருவரையும் ஆட்டமிழக்கச் செய்த நிதா தார் அடுத்து வந்த அனுஷ்கா சஞ்சீவனியை 11 ஓட்டங்களுடன் வெளியேற்ற இலங்கை அணி 12 ஓவர்களில் 67 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை பறிகொடுத்தது.

இதனைத் தொடர்ந்து ஹசினி பெரேரா (08), ரொபேகா வெண்டொர்ட் (05) இருவரையும் ரன் அவுட் செய்த பாகிஸ்தான் வீராங்கனைகள் அடுத்து வந்த ஓஷதி ரணசிங்கவை 10 ஓட்டங்களுடன் வெளியேற்றினர். இதனால் இலங்கை மகளிர் அணி 16 ஓவர்களில் 86 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து நெருக்கடியை சந்தித்தது.  

இந்த நெருக்கடியிலிருந்து மீண்டு வராத இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 113 ஓட்டங்களையே பெற்றது. இதன்போது பாகிஸ்தான் அணி சார்பில் 21 ஓட்டங்களுக்கு ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய நிதா தார் இந்த தொடரில் அதிக விக்கெட்டுகள் (7) வீழ்த்தியவர் வரிசையில் முன்னணியில் இருப்பதோடு போட்டியின் ஆட்ட நாயகி விருதையும் வென்றார்.

இலங்கை மகளிர் அணி நாளை (07) தீர்க்கமான ஒரு போட்டியில் இந்திய மகளிர் அணியை எதிர்கொள்ளவுள்ளது.

இதனிடையே ஆசிய கிண்ணத்தின் மற்றொரு போட்டியில் இன்று போட்டியை நடாத்தும் மலேசிய அணி தாய்லாந்து மகளிர் அணியை எதிர்கொண்டது. இந்த போட்டியில் முதலில் துடுப்பாடிய மலேசிய அணி 20 ஓவர்களுக்கும் 8 விக்கெட்டுகளை இழந்து 36 ஓட்டங்களை மாத்திரம் எடுக்க தாய்ந்து அணி ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து அந்த இலக்கை எட்டியதன் மூலம் ஆசிய கிண்ணத்தில் முதல் வெற்றியை பதிவு செய்து கொண்டது.

போட்டியின் சுருக்கம்

பாகிஸ்தான் மகளிர் – 136/4 (20) – பிஸ்மாஹ் மஹ்ரூப் 60*, நாஹிதா கான் 38, சுகந்திகா குமாரி 2/18

இலங்கை மகளிர் – 113/9 (20) – யசோதா மெண்டிஸ் 25, நிபுனி ஹன்சிக்கா 24, நிதா தார் 5/21

முடிவு – பாகிஸ்தான் மகளிர் அணி 23 ஓட்டங்களால் வெற்றி

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<