பொர்னியோ செவன்ஸ் ரக்பி கிண்ணத்தினை சுவீகரித்த இலங்கை மகளிர் அணி

64

மலேசியாவில் நடைபெற்று முடிந்திருக்கும் அணிக்கு ஏழு பேர் கொண்ட பொர்னியோ ரக்பி தொடரின் மகளிர் பிரிவில் பொறி கலங்கவைக்கும் ஆட்டத்தினை வெளிப்படுத்திய இலங்கை மகளிர் அணி முதல் முறையாக சம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.

சுதத் சம்பத்தின் பயிற்றுவிப்பின் கீழான இலங்கை மகளிர் அணி, இத்தொடரின் இறுதிப் போட்டியில் தாய்லாந்திற்கு 12-05 என்னும் புள்ளிகள் கணக்கில் அதிர்ச்சியளித்தே இத்தொடரின் வெற்றியாளராக மாறியிருக்கின்றது.   

>> போர்னியோ தொடருக்காக மலேசிய செல்லும் இலங்கை எழுவர் ரக்பி அணி

இத்தொடர் ஆரம்பித்த முதல் நாளில் ஆரம்ப கட்டத்திற்குரிய இரண்டு போட்டிகளில் முதற் தரமான ஆட்டத்தினை வெளிப்படுத்தியிருந்த இலங்கை மகளிர் அணி, அந்நாளில் சபாஹ் ஈக்கிள்ஸ் அணியை 48-00 எனவும், தாய்லாந்தை 26-05 எனவும் அபாரமாக வீழ்த்தியிருந்தது.  

அதனை அடுத்து, அரையிறுதிப் போட்டியில் மலேசிய மகளிர் அணிக்கு  29-05 என திகைப்பூட்டிய இலங்கை இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியது.

எனினும், இறுதிப் போட்டியில் இலங்கை மங்கைகள் வெளிப்படுத்திய ஆட்டமே அதி சிறப்பானதாகும். அயேஷா பெரேரா, தனுஜ வீரக்கொடி, அனுஷ அத்தநாயக்க, ரந்திக்க குமுதமலி மற்றும் தசுனி சில்வா ஆகிய அனைவரும் இலங்கை சார்பாக ட்ரை வைத்து புள்ளி பெற்ற வீராங்கனைகளில் வரவேற்கத்தக்க ஆட்டத்தினை வெளிக்காண்பித்தனர்.

இத்தொடரில் வெற்றி பெற்ற இலங்கை மகளிர் அணியின் பயிற்றுவிப்பாளர், சுதத் சம்பத் மலேசியாவிலிருந்து எமது இணையதளமான ThePapare.com இற்கு கருத்து தெரிவிக்கையில்,

இத்தொடரினை வெற்றி கொண்டதில் உண்மையாகவே அதிகம் மகிழ்ச்சி அடைகிறேன். எமது வீராங்கனைகள் மலைக்க வைக்கும் ஆட்டத்தினை வெளிப்படுத்தி இருந்தனர். எமக்கு ஏனைய அணிகள் போன்று போதிய வசதிகள் இல்லாதிருந்த நிலையிலும் கூட பயிற்சி ஆட்டங்களில் கடந்த மூன்று மாதங்களாக எமது தரப்பினர் அதிக முனைப்புடன் செயற்பட்டிருந்தனர்.

இத்தொடர் வெற்றியானது எமக்கு வரும் தொடர்களில் எம் அணி மிடுக்குடன் விளையாடுவதற்கு ஒரு பயிற்சியாக அமைந்திருக்கின்றது. அத்துடன், எமக்கு அனுசரணை வழங்கிய SAGT நிறுவனத்தினருக்கும் நான் இத்தருணத்தில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்என்றார்.

முன்னதாக, தாய்லாந்து மகளிர் அணியினை எதிர்கொள்ள அயராது பாடு பட்ட இலங்கை மகளிர் அணி, இறுதியில் அவ்வணியினை இத்தொடரில் இரு தடவைகள் ஜெயித்துள்ளது. அத்துடன் இத்தொடரில் இலங்கை மகளிர் அணியின் விளையாட்டு முன்னேற்றம் அடைந்ததையும் அவதானிக்க கூடியதாக இருந்தது.

இலங்கை மகளிர் அணி போட்டிகளை விளையாடிய விதத்தில் இலங்கை ஆண்கள் அணியினர் காட்டியிராத சிறந்த பாங்குகளையும் காணக்கூடியதாக இருந்தது.

வெற்றி பெற்ற இலங்கை மகளிர் குழாத்தின் வீராங்கனைகள்

ரந்திக்க குமுதுமலி (அணித் தலைவி), அனுஷ அத்தநாயக்க, அயெஷா பெரேரா, அயெஷா கழுவராச்சி, சரணி லியனகே, தசுனி டீ சில்வா, திலினி காஞ்சனா, துலானி பல்லிக்கொன்டகே, நதீகா முனசிங்க, சஜீவனி டி சில்வா, தனுஜ வீரக்கொடி, வாசனா வீரக்கொடி

இதற்கிடையே, இத்தொடரில் பங்கேற்றிருக்கும் இலங்கை ஆண்கள் எழுவர் அணியினர் தொடரில் மோசமான இரு தோல்விகளை சந்தித்திருக்கின்றனர். தொடரின் காலிறுதிப் போட்டியில் புள்ளிகள் எதுவும் பெறாமால் ஹொங்ஹொங் அணியுடன் 31-00 என தோல்வியடைந்ததோடு, DBKL அணியுடன் பிளேட் இறுதிப் போட்டியிலும் 33-15 என படுதோல்வியடைந்திருந்தனர்.

இத்தொடரின் தீர்மானமிக்க போட்டிகளில் ஒன்றான, பிளேட் அரையிறுதிப் போட்டியில் மாத்திரமே இலங்கை அணிக்கு மலேசியாவினை 26-05 என வீழ்த்த முடியுமாக இருந்தது.

இத்தொடரில் பங்கேற்க முன்னர், இலங்கை அணியின் பிரதான பயிற்சியாளரான பீட்டர் வூட்ஸ், இலங்கை எழுவர் ரக்பி அணி ஏழு வீரர்கள் கொண்ட ஒரு அணியினை வழிநடாத்துவதற்குரிய போதிய உடற்தகவு (Fitness) மற்றும் தராதரங்களினை கொண்டிருக்கிவில்லை என்று வெளிப்படையாகவே கூறியிருந்தார்.

அத்தோடு, ஹொங்ஹொங்கில் அடுத்த மாதம் நடைபெற இருக்கும் World Sevens தொடர் தகுதிகாண் போட்டிகளுக்கும் சில மாற்றங்கள் இருக்க வேண்டும் என்றும் தனது கருத்தினை வெளிக்காட்டி இருந்தார்.

இலங்கை எழுவர் அணி, உடற்தகுதியில் மட்டும் அல்லாது Restart, kick off, Break Down, Line Out, மற்றும் inside 22m red zone ஆகியவற்றிலும் மோசமாகவே செயற்படுகின்றது. அடுத்து  நடைபெறவுள்ள தகுதிகாண் தொடருக்கு மூன்று வாரங்கள் பயிற்சிபெற போதாத காலமாகும். எனினும் இருக்கும் மூன்று வாரங்களில் குறித்த தொடருக்காக இலங்கை கடுமையாக உழைக்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகியுள்ளது.  

>> மேலும் செய்திகளைப் படிக்க <<