மக்காவு அணியுடனான போட்டியில் இலங்கை மகளிர் கரப்பந்தாட்ட அணி வெற்றி

211
Asian Women’s U23 Volleyball
Sri Lanka v Macau - 2nd Asian Women's U23 Volleyball Championship

23 வயதுக்கு உட்பட்ட இரண்டாவது ஆசிய மகளிர் கரப்பந்தாட்ட சம்பியன்ஷிப் போட்டிகளில், 9 தொடக்கம் 13 வரையான இடங்களுக்கான அணிகளை தெரிவு செய்யும் முகமாக மக்காவு அணியுடன் நடைபெற்ற போட்டியில் 25-23, 24-26, 25-21, 26-24 என்ற செட் கணக்கில் இலங்கை வெற்றியீட்டியது.

C குழுவில் இடம்பெற்ற போட்டிகளின் பெறுபேறுகளின் அடிப்படையில் நான்காவது இடத்திலிருந்த இலங்கை மகளிர் கரப்பந்தாட்ட அணி, A குழுவில் மூன்றாவது இடத்தைப் பிடித்திருந்த மக்காவு அணியை எதிர்கொண்டிருந்தது.  

இவ்விரு அணிகளுக்கிடையே நடைபெற்ற விறுவிறுப்பான போட்டியில், இலங்கை அணி முதலாவது செட்டில் 25-23 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றியீட்டி சிறந்த ஆரம்பத்தைப் பெற்றுக்கொண்டது. எனினும், இரண்டாவது செட்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிக்காட்டிய மக்காவு அணி 26-24 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்று சமநிலை செய்தது.

அதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து நடைபெற்ற மூன்றாவது மற்றும் நான்காவது செட்களில் 25-21, 26-24 என்ற புள்ளிகள் அடிப்படையில் இலங்கை மகளிர் அணி தொடர்ச்சியாக வெற்றியை பதிவு செய்தது.

இலங்கை அணி சார்பாக சிறப்பாக விளையாடிய திலினி பெரேரா 13 புள்ளிகளை பெற்றார். அதேநேரம் லா வெங் சாம் போட்டியின் கூடிய புள்ளிகளாக 21 புள்ளிகளைப் பதிவு செய்தார். அத்துடன், லியோங் ஒன் லெங்  19 புள்ளிகளை தமது அணி சார்பாக பெற்றுக்கொடுத்தார்.

குறித்த போட்டியின் பின்னர், இந்த போட்டி தொடர் குறித்து கருத்து தெரிவித்த இலங்கை மகளிர் கரப்பந்தாட்ட அணியின் தலைமை பயிற்றுவிப்பளார் ஜனக இந்தரஜித்

”எனது அணி பெற்றுக்கொண்ட இந்த வெற்றிக்காக மகிழ்ச்சியடைகின்றேன். ஏனெனில், எனது பிறந்த நாளான இன்று இந்த வெற்றியின் மூலம் எனக்கு சிறந்த பரிசு ஒன்றை அளித்துள்ளனர். முதல் சுற்றுப்போட்டிகளில் இரண்டு போட்டிகளில் நாம் தோல்வியுற்றிருந்தோம். ஆனால், இன்றைய தினம் நாம் சிறப்பாக விளையாடினோம். தாய்லாந்தில் நடைபெறும் இந்த போட்டிக்காக நான் எனது அணியை மூன்று மாதங்கள் மட்டுமே பயிற்சியளித்தேன். அநேகமாக, வலிமையான அணிகளுடனான போட்டிகளில் பங்குபற்றி எனது வீரர்கள் மேலும் நல்ல அனுபவத்தை பெற்றிருப்பார்கள் என நம்புகின்றேன். அத்துடன், இந்த போட்டித் தொடரில் சிறந்த ஒரு இடத்தை அடைவோம் என்று நம்புகின்றேன்” என்று தெரிவித்தார்.

குழு G

pool G

கடந்த போட்டிகளுக்கான பெறுபேறுகள்

இறுதியாக நடைபெற்ற கசகஸ்தான் மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுடனான குழு மட்டப் போட்டிகளில் இலங்கை தோல்வியுற்றிருந்தது. அவுஸ்திரேலிய அணியுடனான முதல் போட்டியில் 25-16, 25-23, 21-25 25-14 என்ற புள்ளிகள் கணக்கில் தோல்வியைத் தழுவியது. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற கசகஸ்தான் அணியுடனான போட்டியிலும் 25-14, 25-8 மற்றும் 25-12 புள்ளிகள் அடிப்படையில் தோல்வியுற்றிருந்தது.

திங்கட்கிழமை நடைபெற்ற போட்டிகளின் பெறுபேறுகள் (மே மாதம் 15ஆம் திகதி)

  • உஸ்பெகிஸ்தான் அணியுடனான போட்டியில் ஜப்பான் வெற்றி 3-0 (25-6, 25-11, 25-12)
  • கசகஸ்தான் அணியுடனான போட்டியில் சைனிஸ் தாய்பே வெற்றி 3-0 (25-19, 25-17, 25-19)
  • நியூசிலாந்து அணியுடனான போட்டியில் ஈரான் வெற்றி 3-0 (28-26, 25-22, 25-20)
  • மக்காவு அணியுடனான போட்டியில் ஹொங்கொங் வெற்றி 3-2 (20-25, 25-3, 25-16, 16-25, 15-9)
  • இலங்கை அணியுடனான போட்டியில் அவுஸ்திரேலியா வெற்றி 3-1 (25-16 25-23 21-25 25-14)