ஜிம்பாப்வே அணியின் இலங்கை சுற்றுப் பயணத்தின் முதற்கட்டமான ஒரு நாள் தொடர் முடிவடைந்திருக்கின்றது. இத்தொடரின் மூலம் முதற்தடவையாக இலங்கையின் சொந்த மண்ணில் அவர்களை 3-2 என வீழ்த்தி, வரலாற்று சிறப்பு மிக்க பதிவுடன் ஒரு நாள் தொடரை கைப்பற்றி, தமது முதலாவது இலக்கினை அடைந்துள்ளது ஜிம்பாப்வே அணி.  

ஜிம்பாப்வேயுடனான டெஸ்டில் அறிமுக வீரருடன் களமிறங்கும் இலங்கை

நடைபெற்று முடிந்த இந்த ஒரு நாள் தொடர் இலங்கைக்கு வெற்றிகரமாக அமையாத காரணத்தினால் அணி மீதும் தேர்வாளர்கள் மீதும் பலவாறான விமர்சனங்கள் எழுப்பப்பட்டு வருவதோடு, அணியில் சில மாற்றங்களும் இடம்பெற்றிருக்கின்றன. இவ்வாறானதொரு நிலையில், தமது விருந்தாளி அணியுடன் இலங்கை மோதும் ஒரேயொரு டெஸ்ட் போட்டி, நாளை (14) கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச மைதானத்தில் ஆரம்பமாகின்றது.

ஜிம்பாப்வே இலங்கை இடையிலான டெஸ்ட் போட்டிகள்

இலங்கை, டெஸ்ட் போட்டியொன்றில் இறுதியாக ஜிம்பாப்வே அணியினை அவர்களது சொந்த மண்ணில் கடந்த வருடம், நவம்பர் மாதத்தில் சந்தித்திருந்தது. அதில், ரங்கன ஹேரத்தின் சிறந்த ஆட்டத்தின் காரணமாக இலங்கை அணி இரண்டு போட்டிகள் கொண்ட தொடரினையும் 2-0 என கைப்பற்றியிருந்தது.

இதுவரையில் இரண்டு அணிகளும் 17 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியிருக்கின்றன. அதில் 12 போட்டிகளில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளதோடு, 5 போட்டிகள் சமநிலை அடைந்திருக்கின்றன. எந்தவொரு டெஸ்ட் போட்டியிலும் ஜிம்பாப்வே அணியானது இதுவரை இலங்கையை வீழ்த்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அணிகளது அண்மைய டெஸ்ட் ஆட்டங்களின் கள நிலவரங்கள்

இலங்கை அணியானது, இவ்வருட ஆரம்பத்தில் தென்னாபிரிக்கா மற்றும் பங்களாதேஷ் ஆகிய அணிகளுடன் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருந்தன.

இவ்வருடத்தில் நான்கு டெஸ்ட் போட்டிகளில் ஆடியிருக்கும் இலங்கை அணியானது அதில் ஒரு போட்டியில் (அதுவும் பங்களாதேஷ் அணிக்கெதிரான) மாத்திரமே வெற்றி பெற்றிருந்தது.

மெதிவ்சின் பொறுப்பு தரங்க மற்றும் சந்திமாலுக்கு பிரித்து வழங்கப்பட்டது

டெஸ்ட் தரவரிசையில், எட்டாம் இடத்தில் இருக்கும் இலங்கை சங்கா, மஹேல, முரளிதரன் போன்ற முக்கிய வீரர்களின் ஓய்விற்குப் பின்னர் தொடர்ந்தும் டெஸ்ட் போட்டிகளில் நல்லதொரு நிலையினை எட்ட தடுமாறி வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும். டெஸ்ட் போட்டியொன்றில், கடந்த மார்ச் மாதம் பங்களாதேஷ் அணியுடன் முதற்தடவையாக பெற்ற தோல்வி, தென்னாபிரிக்கா அணியுடனான தொடரில் வைட் வொஷ் செய்யப்பட்டமை என்பவற்றை இலங்கை அணியின் அண்மைய மோசமான ஆட்டங்களுக்கு உதாரணங்களாக குறிப்பிட முடியும்.

எனினும், ஜிம்பாப்வே அணியுடனான டெஸ்ட் போட்டி தமது சொந்த மைதானத்தில் இடம்பெறவுள்ள காரணத்தினாலும், ஜிம்பாப்வே வீரர்கள் டெஸ்ட் போட்டிகளில் நீண்ட இன்னிங்சுகளை வெளிப்படுத்துவதில் பொதுவாகவே சிரமம் கொள்பவர்கள் என்பதனாலும், இந்த டெஸ்டின் வெற்றி வாய்ப்பு இலங்கை அணிக்கு சாதமாகவே அமைந்திருக்கின்றது.

ஜிம்பாப்வே அணியினை பொறுத்தவரை, இது அவர்கள் இவ்வருடத்தில் விளையாடவுள்ள முதலாவது டெஸ்ட் போட்டியாகும். இறுதியாக இலங்கை அணியுடனான தொடரிலேயே அவர்கள் டெஸ்ட் போட்டியில் விளையாடி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கை அணியுடனான அத்தொடரிற்கு முன்பாக, டெஸ்ட் போட்டிகளில் நியூசிலாந்து அணியினை எதிர்கொண்டிருந்த அவர்கள் அத்தொடரினையும் 2-0 என பறிகொடுத்திருந்தனர்.

இறுதியாக, 2013 ஆம் ஆண்டில் டெஸ்ட் போட்டியொன்றில் வெற்றியை சுவைத்திருந்த ஜிம்பாப்வே அணியினர், தற்போது சிறப்பான முறையில் ஆட்டத்தினை வெளிக்காட்டி வருவதனால், இலங்கை அணிக்கு ஒரு நாள் தொடர் போன்று, டெஸ்ட் போட்டியிலும் அதிர்ச்சியளிக்க முடியும்.

இலங்கை அணி

இலங்கை அணித் தலைவர் அஞ்செலோ மெதிவ்ஸ், ஜிம்பாப்வே அணியுடனான ஒரு நாள் தொடரில் பெற்ற தோல்வியினை அடுத்து தனது தலைமைப் பொறுப்பினை இராஜினாமா செய்த காரணத்தினால், இத்தொடரில் இலங்கை புதிய டெஸ்ட் தலைவரான தினேஷ் சந்திமாலுடன் களமிறங்குகின்றது.

சந்திமால், திறமைமிக்க துடுப்பாட்ட வீரர் எனினும் தனது அண்மைய மோசமான ஆட்டங்களின் காரணமாக இலங்கை அணியின் ஒரு நாள் குழாத்தில் சேர்க்கப்படாது போயிருந்தார். எனினும், டெஸ்ட் போட்டிகளில் 42.33 என்கிற சிறப்பான ஓட்ட சராசரியினைக் கொண்டிருக்கும் இவர் அணியின் தலைவர் என்பதால் துடுப்பாட்டத்தினை மேலும் சிறந்த முறையில் முன்னெடுக்க வேண்டிய கட்டாயத்தில் காணப்படுகின்றார்.

Dinesh

அணித் தலைவராக இல்லாவிடினும் இலங்கை அணியின் துடுப்பாட்ட முதுகெலும்பாக காணப்படும் அஞ்செலோ மெதிவ்ஸ், இதுவரையில் ஜிம்பாப்வே அணியுடன் டெஸ்ட் போட்டிகள் எதிலும் விளையாடியதில்லை. எனினும், 46.08 என்னும் டெஸ்ட் ஓட்ட சராசரியினைக் கொண்டிருக்கும் அவர், இம்முறை அணியின் தலைவர் இல்லை என்பதனால் அழுத்தங்கள் ஏதும் இன்றி தனது அணிக்காக சிறந்த முறையில் ஆடுவார் என எதிர்பார்க்க முடியும்.

Mathews (2)

மேலும், இளம் வீரர்களான நிரோஷன் திக்வெல்ல, குசல் மெண்டிஸ் மற்றும் அறிமுக டெஸ்ட போட்டியொன்றில் விளையாடும் வாய்ப்பினைப் பெற்றிருக்கும் தனுஷ்க குணத்திலக்க ஆகியோர் இலங்கை அணியின் மேலதிக துடுப்பாட்ட பெறுமதிகள் ஆகும்.

ஜிம்பாப்வே – இங்கை அணிகள் இடையிலான ஒரு நாள் தொடரில், அதிக ஓட்டங்கள் (323)  குவித்த வீரரான தனுஷ்க குணத்திலக்க, நடைபெறப்போகும் டெஸ்ட் போட்டியிலும் ஆரம்ப வீரராகவே களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதோடு இவரது சுழல் பந்து வீச்சும் இலங்கைக்கு கைகொடுக்கும்.

Danushka

இலங்கை அணியின் பந்து வீச்சினை நோக்குமிடத்து சிரேஷ்ட சுழல் வீரரான ரங்கன ஹேரத் அணியினை பலப்படுத்தும் முக்கிய வீரர். ஜிம்பாப்வேயுடன் இலங்கை இறுதியாக மோதியிருந்த இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரினை 2-0 எனக் கைப்பற்ற, ஹேரத்தின் பந்து வீச்சே மிகப் பெரிய துணையாக காணப்பட்டிருந்தது.

Herathஹேரத் அத்தொடரின் இரண்டாம் டெஸ்ட் போட்டியில் ஜிம்பாப்வே அணிக்கெதிராக 13 விக்கெட்டுக்களை சாய்த்ததுடன் அந்த டெஸ்ட் தொடரில் மொத்தமாக 19 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதோடு சகல துறை வீரர்களான அசேல குணரத்ன மற்றும் தில்ருவான் பெரேரா ஆகியோரும் சிறப்பான பந்து வீச்சாளர்களாக செயற்பட்டு இலங்கைக்கு உதவுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய வரிசை வீரராக களமிறங்கும் குணரத்ன, ஜிம்பாப்வே அணிக்கெதிராக இறுதியாக நடைபெற்ற டெஸ்ட் தொடரில், அதிக ஓட்டங்கள் (225) குவித்த இரண்டாவது வீரர் என்பதோடு, அண்மைய ஒரு நாள் தொடரில் அவ்வணிக்கெதிராக 7 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியிருக்கின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Asela (2)மேலும், நீண்ட காலத்தின் பின்னர் இம்முறை டெஸ்ட் போட்டிகளில் உள்வாங்கப்பட்டிருக்கும் துஷ்மந்த சமீரவுடன் இணைந்து சுரங்க லக்மால் அணியின் வேகப்பந்து வீச்சு துறையினை முன்னெடுப்பார்.

எதிர்பார்க்கப்படும் இலங்கை அணி

தனுஷ்க குணத்திலக்க, நிரோஷன் திக்வெல்ல, குசல் மெண்டிஸ், உபுல் தரங்க, திமுத் கருணாரத்ன, அஞ்செலோ மெதிவ்ஸ், அசேல குணரத்ன, தில்ருவான் பெரேரா, ரங்கன ஹேரத், சுரங்க லக்மால், துஷ்மந்த சமீர

ஜிம்பாப்வே அணி

ஒரு நாள் போட்டிகளில் சிறந்த முறையில் அணியை வழிநடாத்திய கிரேம் கிரீமர் தலைமையில் டெஸ்ட் போட்டியிலும் களமிறங்கும் ஜிம்பாப்வே அணியானது, இலங்கை போன்று தமது அணியில் மாற்றங்கள் எதனையும் டெஸ்ட் த் தொடரிற்காக மேற்கொண்டிருக்கவில்லை.

அவ்வணியின் துடுப்பாட்ட தூண்களாக ஆரம்ப வீரர் ஹமில்டன் மசகட்சா, சோலமன் மிர் மற்றும் சிக்கந்தர் ரஷா ஆகியோர் ஒரு நாள் தொடர் போன்று செயற்படுவார்கள் என எதிர்பார்க்க முடியும்.

Masakadza AFPமசகட்சா இதுவரையில் 32 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருப்பதோடு, அதன் மூலம் 30 ஐ அண்மித்த ஓட்ட சராசரியினைக் கொண்டிருக்கின்றார். அதோடு, இலங்கைப் பந்து வீச்சாளர்களுக்கு தனது அதிரடியான ஆட்டம் மூலம் சவால் விடுத்த சோலமன் மிர்ரும் இம்முறை இலங்கை அணிக்கு அழுத்தம் தரக்கூடிய வீரர்களில் ஒருவராகக் காணப்படுகின்றார்.

மேலும், அணியின் மத்திய வரிசை துடுப்பாட்டம் சிக்கந்தர் ரஷாவுடன் இணைந்து தரிசாய் முசகண்கடா, கிரைக் இர்வின் மற்றும் சீன் வில்லியம்ஸ் ஆகியோரால் பலப்படுத்தப்பட்டுள்ளது. அதோடு, சிக்கந்தர் ரஷா தனது சுழல் மூலமும் அணிக்கு பங்களிப்பினை வழங்க கூடிய ஒருவர்.

CRICKET-ZIM-NZL

பந்து வீச்சில், ஜிம்பாப்வே அணியின் துரும்புச் சீட்டாக அவ்வணியின் தலைவர் கிரேம் கிரீமர் காணப்படுகின்றார். சுழல் வீரரான இவர் இறுதியாக இரண்டு அணிகளும் மோதிய டெஸ்ட் தொடரில், ஜிம்பாப்வே சார்பாக அதிக விக்கெட்டுக்களை (11) சாய்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

CRICKET-ZIM-SRI-TEST

மேலும், ஜிம்பாப்வே அணிக்கு தென்டாய் சட்டாரா மற்றும் கிறிஸ் பொபு ஆகிய வீரர்கள் தமது வேகம் மூலம் பலம் சேர்க்கவுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

எதிர்பார்க்கப்படும் ஜிம்பாப்வே அணி

ஹமில்டன் மசகட்சா, சோலமன் மிர், தரிசாய் முசகண்டா, கிரைக் இர்வின், சீன் வில்லியம்ஸ், சிக்கந்தர் ரஷா, மால்கோம் வால்லர், பீட்டர் மூர், கிரேம் கிரீமர், கிறிஸ் பொபு, தென்டாய் சட்டாரா

இறுதியாக

ஜிம்பாப்வே அணியின் இலங்கைக்கான இந்த சுற்றுப் பயணம் மூலம் கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் நீண்ட காலத்திற்குப் பின்னர் டெஸ்ட்  போட்டியொன்று நடைபெறவுள்ளது.

எனவே, ஒரு நாள் தொடரில் அடைந்த எதிர்பாராத அதிர்ச்சித் தோல்வியினால் அழுத்தங்களுக்கு உள்ளாகியிருக்கும் இலங்கை, விருந்தாளி அணியிடம் இருந்து இந்த டெஸ்ட் போட்டி மூலம் ஆறுதல் வெற்றியினைப் பெறுமா? அல்லது ஜிம்பாப்வே அணி மீண்டும் சரித்திரம் படைக்குமா? என்பதனை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.