சிம்பாப்வே அணியுடன் போராடி வென்ற இலங்கை அணி

1010
CRICKET-SRI-ZIM

இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் ஐந்தாவது நாளான இன்று, 412 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு தனது இரண்டாம் இன்னிங்சை ஆரம்பித்த ஜிம்பாப்வே அணி 90.3 ஓவர்களில் தனது சகல விக்கெட்டுகளையும் இழந்து 186 ஓட்டங்களை மாத்திரமே பெற்று 225 ஓட்டங்களால் தோல்வியுற்றது.

மதிய போசனத்துக்கு ஆட்டம் இடைநிறுத்தப்படும் பொழுது 5 விக்கெட்டுகளை இழந்து 74 ஓட்டங்களைப் பெற்று இக்கட்டான நிலையிலிருந்த சிம்பாப்வே அணி மதிய போசனத்துக்கு பின் தோல்வியை தவிர்ப்பதற்காக கடுமையாகப் போராடியது.

மதிய போசனத்துக்குப் பின்னர் 7ஆவது விக்கெட்டுக்காக இணைந்த சோன் வில்லியம்ஸ் மற்றும் கிராம் கிரேமர் நிதான ஆட்டதை வெளிப்படுத்தி தேநீர் இடைவேளை வரை எந்தவிதமான விக்கெட் இழப்பின்றி 19 ஓவர்கள் தடுத்தாடி, இணைப்பாட்டமாக 36 ஓட்டங்களைப் பெற்று ஓட்ட எண்ணிகையை உயர்த்தினர்.

தேநீர் இடைவேளைக்கு ஆட்டம் இடைநிறுத்தப்படும் போது 6 விக்கெட்டுகளுக்கு மொத்தமாக 136 ஓட்டங்களைப் பெற்றிருந்த வேளை ஆட்டத்தை வெற்றி தோல்வியின்றி நிறைவுக்கு கொண்டுவர சிம்பாப்வே அணிக்கு 36 ஓவர்களே மீதமிருந்தன.  தீர்க்கமான இந்தப் போட்டியில் இறுதி வரை போராடிய சோன் வில்லியம் மற்றும் கிராம் கிரேமர்  இலங்கை பந்து வீச்சாளர்களை தடுத்தாடினர்.

எனினும், இலங்கை அணித்தலைவர் மற்றும் அனுபவ சுழல் பந்து வீச்ச்சாளர் ரங்கன ஹேரத்தின் சுழல் பந்து வீச்சில் சிக்குண்ட இவ்விருவரும் முறையே 40(92) மற்றும்  43(144)  ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து சென்றனர்.

இலங்கை அணி சார்பாக சிறப்பாக பந்து வீசிய ரங்கன ஹேரத் 30 ஓவர்களுக்கு 38 ஓட்டங்களைக் கொடுத்து 3 விக்கெட்டுகளையும், தில்ருவான் பெரேரா 15.3 ஓவர்களில் 34 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

அந்த வகையில் வெற்றியீட்டிய இலங்கை அணி இரண்டு டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

போட்டியின் ஆட்ட நாயகனாக முதல் இன்னிங்சில் ஆட்டமிழக்காமல் 102 ஓட்டங்களையும், இரண்டாம் இன்னிங்சில்  சிம்பாப்வே அணியை தோல்வியிலிருந்து மீட்டெடுக்க 144 பந்துகளுக்கு முகம் கொடுத்து 43 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்ட கிராம் கிரேமர்  தெரிவு செய்யப்பட்டார்.

போட்டியின் சுருக்கம்

இலங்கை அணி (முதல் இன்னிங்ஸ்) – 537(155) – உபுல் தரங்க 110*(208), குசல் பெரேரா 110(121), கெளஷல் சில்வா 94(194), திமுத் கருணாரத்ன 56(110), அசேல குணரத்ன 54(102), கிரேம் கிரேமர் 142/4(42), கிரிஸ் 96/2(31), மல்கோம் வோல்லர் 25/1(6)

சிம்பாப்வே அணி (முதல் இன்னிங்ஸ்) -373(107.5) – பீடர் மோர் 79(84), கிரேம் கிரேமர் 102*(260), டொனால்ட் டிரிபானோ 46(92), டீனோ மவோயோ 45(93), சுரங்க லக்மால் 69/3(21.5), ரங்கன ஹேரத் 97/3(37), டில்ருவன் பெரேரா 66/2(18)

இலங்கை அணி (இரண்டாவது இன்னிங்ஸ்) – 247/6d (61.5) – திமுத் கருணாரத்ன 110(173), தனஞ்சய டி சில்வா 64(82), கார்ல் மும்பா 50/4(11.5)

சிம்பாப்வே அணி (இரண்டாவது இன்னிங்ஸ்): 186(90.3) – கிராம் கிரேமர் 43(144), சோன் வில்லியம் 40(92), டீனோ மவோயோ 37(85), ஹமில்டன் மஸகட்ஸா 20(48)   

ரங்கன ஹேரத் 38/3 (30), டில்ருவன் பெரேரா 34/3(15.3), சுரங்க லக்மால் 43/2(24), லஹிறு குமார 45/2(19)

சிம்பாப்வே மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நவம்பர் மாதம் 6ஆம் திகதி ஹராரே விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது.