பின்வரிசை துடுப்பாட்டத்தில் பிரகாசிக்க எத்தனிக்கும் தனன்ஜய டி சில்வா

1105

இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையில் கண்டி – பல்லேகலை சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி தோல்வியை சந்தித்திருந்தாலும், தனன்ஜய டி சில்வாவின் அதிரடி மத்திய வரிசை துடுப்பாட்டம் அணிக்கு நம்பிக்கையை ஏற்படுத்துவதாக அமைந்திருந்தது.

தொடர்ச்சியாக இரண்டாவது தடவையாக தென்னாபிரிக்காவிடம் ஒருநாள் தொடரை இழந்துள்ள இலங்கை

இலங்கை அணி தென்னாபிரிக்க அணியிடம்..

பந்து வீச்சாளர்களின் கவனக்குறைவினால் 363 ஓட்டங்கள் தென்னாபிரிக்க அணிக்கு வழங்கப்பட, இலக்கினை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, ஆரம்பம் முதல் தடுமாறியது. முதற்தர துடுப்பாட்ட வீரர்களின் விக்கெட்டுகள் வீழ்த்தப்பட ஒரு கட்டத்தில் இலங்கை அணி 155 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுக்களை இழந்து மோசமான தோல்வியை நோக்கி நகர்ந்தது.

எனினும், நீண்ட நாட்களுக்கு பின்னர் ஒருநாள் அணிக்குழாத்தில் கிடைத்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொண்ட தனன்ஜய டி சில்வா, 7வது விக்கெட்டுக்காக அகில தனஞ்சயவுடன் 95 ஓட்டங்களை பகிர்ந்ததுடன், தனியாக 66 பந்துகளுக்கு 3 சிக்ஸர்கள் மற்றும் 8 பௌண்டரிகள் அடங்கலாக 84 ஓட்டங்களை குவித்தார். தனன்ஜயவுக்கு தனது கன்னி சதத்தை எட்டக்கூடிய வாய்ப்பு இருந்த போதும், அணியின் வெற்றிக்கு ஓட்டவேகம் அதிகமாக தேவைப்பட்டதால், துரதிஷ்டவசமாக ஆட்டமிழந்தார்.

முதல் தடவையாக 7ஆம் இலக்க துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய தனன்ஜய டி சில்வாவின் இந்த பொறுப்பான துடுப்பாட்டமானது, அவரை ஒருநாள் குழாமின் நிரந்தரமான மத்தியவரிசை துடுப்பாட்ட வீரராக மாற்றலாம் என்ற எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. எனினும், இவ்வாறான துடுப்பாட்டங்களை அவர் தொடர்ந்தும் வெளிப்படுத்த வேண்டும் என்ற நிலையும் எழுந்துள்ளது.

இவ்வாறான நிலையில், நேற்றைய (06) தினம் இடம்பெற்ற பயிற்சியின் போது, எமது இணையத்தளத்துக்கு தனன்ஜய டி சில்வா வழங்கிய பிரத்தியேக செவ்வியில், அணியின் தேவைக்காக 5, 6 மற்றும் 7ஆம் இடங்களில் துடுப்பெடுத்துவதற்கான பயிற்சிகளில் ஈடுபட்டு வருவதுடன், குறித்த இடங்களில் எவ்வாறு துடுப்பெடுத்தாட வேண்டும் என்ற ஆயத்தங்களையும் செய்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

தந்தையருக்கான கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் கொழும்பில் ஆரம்பம்

பாரம்பரிய கிரிக்கெட்டிலிருந்து நவீன கிரிக்கெட்..

66 பந்துகளுக்கு 84 ஓட்டங்களை பெற்றமை தொடர்பில் கருத்து தெரிவித்த தனன்ஜய,

அணியின் பக்கம் பார்க்கும் போது 84 ஓட்டங்கள் என்பது மிகப்பெரியதாக இருந்தது. எமது துடுப்பாட்ட வீரர்கள் ஒருவருக்கும் 50 ஓட்டங்களை கடக்கமுடியாத சந்தர்ப்பத்தில்தான் இந்த ஓட்டங்களை என்னால் பெறமுடிந்தது. ஒரு கட்டத்தில் நாம் 155 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்திருந்தோம். எனினும், நான் 50 ஓவர்கள் முழுவதும் துடுப்பெடுத்தாடுவதற்காக எத்தனித்தேன்.

இலக்கை எட்டுவதற்கான வாய்ப்புகள் கிடைக்குமாயின், வெற்றியிலக்கை அடைவதற்கும் திட்டமிட்டிருந்தோம். இலக்கை சற்று நெருங்கிய போதிலும் துரதிஷ்டவசமாக ஆட்டமிழந்தமை ஏமாற்றமளித்தது

அகில தனஞ்சயவுடன் பெற்ற 95 ஓட்ட இணைப்பாட்டம் குறித்து,

அகில தனஞ்சய பந்து வீச்சாளராக இருந்தாலும், அவரால் துடுப்பெடுத்தாட முடியும். அகிலவிடமிருந்து ஓட்டங்கள் பெறப்படும் போது, என்னாலும் நிலைத்து நின்று துடுப்பெடுத்தாட முடியும் என நினைத்தேன். இதனால் அவருக்கும் துடுப்பெடுத்தாடுவதற்கு நம்பிக்கையுடன் வாய்ப்புகளை அளித்தேன். அவரும் சிறப்பாக துடுப்பெடுத்தாடினார்.

இதனால் ஓட்டங்களை வேகமாக பெற்றுக்கொள்ள இலகுவாக இருந்தது. பின்னர், அகில ஆட்டமிழக்க, எங்களது திட்டங்களில் சில மாற்றங்கள் ஏற்பட்டன. அகில இன்னும் கொஞ்சம் களத்தில் இருந்திருப்பாராயின் போட்டியில் மாற்றங்கள் நிகழ்ந்திருக்கலாம் என்றார்.

தோல்வியின் பின்னரும் உலகின் கவனத்தை ஈர்த்த இலங்கை ரசிகர்கள்

இலங்கை – தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான..

தென்னாபிரிக்காவுடனான தொடர் இழக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்த இரண்டு போட்டிகளிலும் இலங்கை அணி கொண்டுவரவுள்ள மாற்றங்கள்?

பெரிய மாற்றங்கள் ஒன்றும் செய்வதற்கில்லை. போட்டியை சரியாக கணித்துக்கொள்ள வேண்டும். 360 ஓட்டங்கள் என்பது மிகப்பெரிய ஓட்ட எண்ணிக்கை. ஆடுகளத்தை பொருத்தவரையில் 320-325 ஓட்டங்களுக்கு தென்னாபிரிக்க அணியை கட்டுப்படுத்த முடிந்திருக்குமானால் வெற்றியிலக்கை எட்டியிருக்க முடியும். இதனை கருத்திற்கொண்டு அடுத்த போட்டியில் சிறப்பாக செயற்பட வேண்டும்

டெஸ்ட் போட்டிகளை பொருத்தவரையில் மூன்றாம் இலக்க வீரராக தனன்ஜய டி சில்வா செயற்பட்டிருந்தார். மூன்றாவது இலக்க வீரராக இவர் 44.9 என்ற ஓட்ட சராசரியைக் கொண்டுள்ளார். எனினும், இவருக்கு ஒருநாள் போட்டிகளில் சுமார் ஒரு வருடத்துக்கு பின்னர் விளையாட வாய்ப்பு கிடைத்துள்ளது. உள்ளூர் ஒருநாள் போட்டிகளில் அதிகமாக ஆரம்பத் துடுப்பாட்ட வீரராகவே (ஓட்ட சராசரி 49.8) செயற்பட்டுள்ளார். இந்த நிலையில் இலங்கை அணியில் எந்த இடத்தில் துடுப்பெடுத்தாட தனன்ஜய டி சில்வா விருப்பப்படுகிறார் என கேட்கப்பட்ட போது,

ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் வரிசையில் விளையாட வாய்ப்பு கிடைத்தால் சிறப்பாக இருக்கும். கழகங்களுக்கான போட்டிகளில் முதல் 4 இடங்களில் மாத்திரமே துடுப்பெடுத்தாடியுள்ளேன். ஆனால், தற்போது அணியில் புதிய இடமொன்றில் துடுப்பெடுத்தாடுகிறேன். துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளரின் ஆலோசனைப்படி 5, 6 மற்றும் 7ஆம் இடங்களில் நான் துடுப்பெடுத்தாட வேண்டும். இதனால் தற்போது குறித்த இடங்களில் எவ்வாறு துடுப்பெடுத்தாட வேண்டும் என்பது தொடர்பில் அவதானம் செலுத்தி வருகின்றேன்

ஆரம்பத் துடுப்பாட்ட வரிசையில் ஆடுவதற்கும், மத்தியவரிசை மற்றும் பின்வரிசையில் ஆடுவதற்கும் துடுப்பாட்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும். ஒவ்வொரு பந்துக்கும் ஓட்டங்கள் பெறவேண்டிய நிலை ஏற்படும். வேகமாக ஓட்டங்களை பெற வேண்டும். இதற்காக எவ்வாறான பயிற்சிகளை மேற்கொள்கிறார் என்பதையும் இதன்போது தனன்ஜய குறிப்பிட்டார்.

“உண்மையாக பின்வரிசையில் துடுப்பெடுத்தாடும் போது 10 ஓவர்கள் வழங்கப்படுவதும் நிச்சயமில்லை. ஆறு அல்லது ஏழு ஓவர்கள் மாத்திரமே துடுப்பெடுத்தாட வாய்ப்பு கிடைக்கும். இதனால் குறித்த தருணங்களில் துடுப்பெடுத்தாடுவதற்கான திறமைகளை வளர்த்துக்கொள்ளுவதற்கான பயிற்சிகளை மேற்கொள்கிறேன். அத்துடன் பந்து வீச்சிலும் சிறப்பாக செயற்படுவதற்கான பயிற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றேன்என்றார்.

இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான நான்காவது ஒருநாள் போட்டி கண்டி – பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நாளை (08) பகலிரவு போட்டியாக நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<