இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஒரு நாள் தொடரின் மூன்றாவது போட்டியில் 7 விக்கெட்டுகளால் இலங்கையை வீழ்த்தியிருக்கும் பாகிஸ்தான் ஐந்து போட்டிகள் கொண்ட தொடரையும் 3-0 எனக் கைப்பற்றியுள்ளது.

முன்னதாக அபுதாபியில் ஆரம்பமாகியிருந்த இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணியின் தலைவர் உபுல் தரங்க முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்திருந்தார்.

கொழும்பு றோயல் கல்லூரியை வீழ்த்தியது யாழ் சென். ஜோன்ஸ் கல்லூரி

மிகவும் விறுவிறுப்பாக இடம்பெற்ற…

இறுதியாக தாம் விளையாடிய ஒன்பது ஒரு நாள் போட்டிகளிலும் இலங்கை அணி தோல்வியைத் தழுவியிருந்தது. ஐந்து போட்டிகள் கொண்ட தொடரிலும் பாகிஸ்தான் 2-0 என முன்னிலை வகிப்பதால் தொடரில் உயிர்ப்பாக இருக்க இந்த ஆட்டத்தில் கட்டாயம் வெற்றி பெற வேண்டிய நிலையில் இலங்கை களமிறங்கியிருந்தது.

இன்றைய போட்டியில் இலங்கை அணியில் இருந்து குசல் மெண்டிஸ் மற்றும் சுரங்க லக்மால் ஆகியோர் விடுவிக்கப்பட்டிருந்ததோடு அவர்களுக்கு பதிலாக சாமர கப்புகெதர மற்றும் துஷ்மந்த சமீர ஆகியோர் அணியில் உள்வாங்கப்பட்டிருந்தனர்.

மறுமுனையில் பாகிஸ்தான் அணியில் அஹ்மட் ஷேசாத், இமாத் வஸீம் ஆகியோருக்கு பதிலாக பாஹிம் அஷ்ரப் மற்றும் அறிமுக வீரர் இமாம் உல் ஹக் ஆகியோர் அணிக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

தொடர்ந்து போட்டியின் துடுப்பாட்டத்தை அணித் தலைவர் உபுல் தரங்க மற்றும் நிரோஷன் திக்வெல்ல ஆகியோருடன் இலங்கை ஆரம்பம் செய்திருந்தது. இலங்கை அணிக்கு நல்லதொரு தொடக்கத்தை திக்வெல்ல மற்றும் தரங்க ஆகியோர் பெற்றுத் தந்தனர்.

இலங்கை அணி 59 ஓட்டங்களை குவித்திருந்த வேளையில் நிரோஷன் திக்வெல்ல முதல் விக்கெட்டாக 18 ஓட்டங்களுடன் வெளியேறினார். இதனையடுத்து களம் நுழைந்த தினேஷ் சந்திமால் அணித் தலைவர் உபுல் தரங்க ஆகியோர் இணைந்து இரண்டாம் விக்கெட்டுக்காக மந்த கதியில் இணைப்பாட்டம் ஒன்றைக் கட்டியெழுப்பினர். 43 ஓட்டங்கள் வரையில் நீடித்த இந்த இணைப்பாட்டம் சந்திமாலின் விக்கெட்டுடன் முடிவுக்கு வந்தது. சதாப் கானின் சுழலினால் வீழ்த்தப்பட்ட சந்திமால் 49 பந்துகளை முகம் கொடுத்து வெறும் 19 ஓட்டங்களை மாத்திரம் பெற்று மோசமான இன்னிங்ஸ் ஒன்றை இத்தொடரில் மீண்டும் வெளிப்படுத்தியிருந்தார்.

லாஹூரில் இலங்கையின் T20 உறுதி

இதனையடுத்து அரைச்சதம் கடந்து இலங்கையை பலப்படுத்தி களத்தில் நின்ற அணித் தலைவர் உபுல் தரங்கவும் சதாப் கானினால் வீழ்த்தப்பட்டார். ஆட்டமிழந்த தரங்க தனது 35 ஆவது ஒரு நாள் அரைச் சதத்துடன் மொத்தமாக 80 பந்துகளில் 5 பவுண்டரிகள் அடங்கலாக மொத்தமாக 61 ஓட்டங்களைக் குவித்திருந்தார்.

தரங்கவைத் தொடர்ந்து இலங்கையின் மத்திய வரிசை வீரர்களில் லஹிரு திரிமான்ன (28) தவிர்ந்த ஏனையோர் எதிர்பார்த்த ஆட்டத்தை காட்டியிருக்கவில்லை. இதனால் ஒரு கட்டத்தில் 166 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்டுகளை பறிகொடுத்து இலங்கை அணி தடுமாறியது.

எனினும் போராட்டத்தைக் காட்டிய திசர பெரேராவினால் 48.2 ஓவர்கள் நிறைவில் இலங்கை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 208 ஓட்டங்களைக் குவித்துக் கொண்டது.

இலங்கை அணி சார்பாக பின்வரிசையில் சிறப்பாக செயற்பட்ட திசர பெரேரா 37 பந்துகளில் 5 பவுண்டரிகள் அடங்கலாக மொத்தமாக 38 ஓட்டங்களைக் குவித்திருந்தார்.

பாகிஸ்தான் அணி சார்பாக பந்து வீச்சில், ஹசன் அலி மொத்தமாக 34 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி ஒரு நாள் போட்டிகளில் தனது சிறந்த பந்துவீச்சினை பதிவு செய்திருந்தார். அத்தோடு சதாப் கான் 2 விக்கெட்டுகளை சாய்த்திருந்தார்.

தொடர்ந்து போட்டியின் வெற்றி இலக்கான 209 ஓட்டங்களை 50 ஓவர்களில் பெற பதிலுக்கு துடுப்பாடிய பாகிஸ்தான் அணியில் பொறுப்பாக ஆடிய அறிமுக வீரர் இமாம் உல் ஹக் தனது கன்னி ஒரு நாள் சதத்தை பூர்த்தி செய்து தனது தரப்பினை வலுப்படுத்தினார்.

இவரின் இந்த சதத்தின் உதவியோடு பாகிஸ்தான் வெற்றி இலக்கை 42.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 209 ஓட்டங்களை அடைந்தது.

பாகிஸ்தான் அணியை வெற்றிப்பாதைக்கு வழிநடாத்திய வெறும் 21 வயதேயான இமாம் உல் ஹக் 125 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் 5 பவுண்டரிகள் அடங்கலாக 100 ஓட்டங்களைப் பெற்றிருந்தார். அத்தோடு இவருக்கு உதவியாக இருந்த மொஹமட் ஹபீஸ் 34 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காது நின்றிருந்தார்.

பாகிஸ்தானுடனான T-20 தொடரில் இருந்து விலகும் உபுல் தரங்க

இந்த வருடத்தில் தொடர்ச்சியாக மூன்றாவது ஒரு நாள் தொடரையும் பறிகொடுத்து ஒரு நாள் போட்டிகளிலும் தமது தொடர்ச்சியான பத்தாவது தோல்வியையும் பதிவு செய்திருக்கும் இலங்கை அணியின் பந்துவீச்சில் திசர பெரேரா, ஜெப்ரி வன்டர்சேய் மற்றும் லஹிரு கமகே ஆகிய வீரர்கள் தலா ஒரு விக்கெட் வீதம் கைப்பற்றியிருந்தனர்.

போட்டியின் ஆட்ட நாயகன் விருது தனது கன்னிப் போட்டியில் சதம் கடந்த இமாம் உல் ஹக்குக்கு வழங்கப்பட்டது. இரண்டு அணிகளுக்கும் இடையிலான நான்காவது ஒருநாள் போட்டி வெள்ளிக்கிழமை (20) சார்ஜா நகரில் ஆரம்பமாகின்றது.

போட்டியின் சுருக்கம்

இலங்கை – 208 (48.2) – உபுல் தரங்க 61(80), திசர பெரேரா 38(37), லஹிரு திரிமான்ன 28(45), ஹசன் அலி 34/5(10), சதாப் கான் 37/2(10)

பாகிஸ்தான் – 209/3 (42.3) – இமாம் உல் ஹக் 100(125), மொஹமட் ஹபீஸ் 34*(51), ஜெப்ரி வன்டர்சேய் 43/1(9.3)

போட்டி முடிவு – பாகிஸ்தான் 7 விக்கெட்டுகளால் வெற்றி