இன்று ஐக்கிய அரபு இராச்சியத்தின் துபாய் நகரில் நடைபெற்று முடிந்திருக்கும் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 68 ஓட்டங்களால் பாகிஸ்தானை இலங்கை வீழ்த்தியுள்ளதுடன் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரினையும் 2-0 என வைட் வொஷ் செய்து கைப்பற்றியுள்ளது.

பகலிரவு ஆட்டமாக நடைபெற்ற இந்தப் போட்டியின் நான்காம் நாள் நிறைவில், இலங்கை அணியினால் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 317 ஓட்டங்களைப் பெற தமது இரண்டாம் இன்னிங்சினை ஆரம்பித்திருந்த பாகிஸ்தான் அணி 73 ஓவர்களுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்து 198 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

போட்டியின் நான்காம் நாளில் தமது அணியினை உயிர்ப்பாக வைத்திருக்க சிறந்த இணைப்பாட்டம் ஒன்றினை (146*) வழங்கிய பாகிஸ்தானின் அணித்தலைவர் சர்பராஸ் அஹ்மட் 57 ஓட்டங்களுடனும் அசாத் சபீக் 86 ஓட்டங்களுடனும் களத்தில்  ஆட்டமிழக்காது இருந்தனர்.

இப் போட்டியில் வெற்றி பெற மேலதிகமாக 119 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில் பாகிஸ்தான் ஆட்டத்தின் தீர்மானமிக்க இறுதி நாளில் தமது இரண்டாம் இன்னிங்சினை தொடர்ந்தது.

பாகிஸ்தான் இன்றைய நாளின் ஆரம்பத்தில் விரைகதியில் ஓட்டங்களை சேர்த்து சவாலான இலக்கினை அடைய முயற்சி செய்திருந்தது. எனினும், போட்டியின் 79ஆவது ஓவரில் தனது சிறப்பான சுழல் மூலம் தில்ருவான் பெரேரா பாகிஸ்தான் அணிக்கு தடுப்பு ஒன்றினை போட்டிருந்தார்.

பெரேராவின் ஓவரில் பெளண்டரி ஒன்றினை எதிர்பார்த்து சர்பராஸ் அஹ்மட்டினால் அடிக்கப்பட்ட பந்து நுவன் பிரதீப்பினால் அழகிய முறையில் பிடியெடுக்கப்பட்டது. இதனால், இன்றைய நாளின் முதல் விக்கெட்டாகவும் பாகிஸ்தானின் ஆறாவது விக்கெட்டாகவும் அணித்தலைவர் சர்பராஸ் அஹ்மட் ஓய்வறை திரும்ப வேண்டி ஏற்பட்டது. சர்பராஸ், ஆட்டமிழக்கும் போது தனது 14ஆவது டெஸ்ட் அரைச் சதத்துடன் மொத்தமாக 130 பந்துகளில் 5 பெளண்டரிகள் அடங்கலாக 68 ஓட்டங்களினை குவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இன்னும் சர்பராஸ் அஹ்மட்டின் இந்த விக்கெட்டோடு டெஸ்ட் போட்டிகளில் இலங்கை அணிக்கெதிராக பாகிஸ்தான் வீரர்கள் ஆறாவது விக்கெட்டுக்காக பதிந்த அதிகூடிய இணைப்பாட்டமும் (173) முடிவுக்கு வந்தது.

பாகிஸ்தானின் பெரும் நம்பிக்கையாக காணப்பட்ட இந்த இரண்டு வீரர்களினதும் இணைப்பாட்டம் நிறைவுக்கு வர பெரும் அழுத்தங்களுடன் அவ்வணியினர் தொடர்ந்து துடுப்பாட தொடங்கினர். எனினும் பாகிஸ்தான் அணிக்கு களத்தில் நின்ற அசாத் சபீக் தனது 11 ஆவது டெஸ்ட் சதத்தினை பூர்த்தி செய்து இறுதி நம்பிக்கையாக காணப்பட்டிருந்தார்.

இவ்வாறானதொரு தருணத்தில் இலங்கை அணிக்கு மீண்டும் ஒரு விக்கெட்டினை கைப்பற்றி தில்ருவான் பெரேரா பெறுமதி சேர்த்திருந்தார்.இந்த இன்னிங்சின் 80 ஆவது ஓவரின் பின்னர் எடுக்கப்பட்ட புதிய பந்து மூலம் இம்முறை தில்ருவான் பெரேராவினால் மொஹமட் அமீர் 4 ஓட்டங்களுடன் ஓய்வறை நோக்கி அனுப்பட்டிருந்தார். பாகிஸ்தான் இந்த ஆட்டமிழப்புக்கு மூன்றாம் நடுவரின் உதவியினை நாடியிருந்த போதும் அது கைகொடுத்திருக்கவில்லை.

அவரை அடுத்து அசாத் சபீக்குடன் பின்வரிசை துடுப்பாட்ட வீரரான யாசிர் சாஹ் சிறிது நேரம் போராட்டத்தினை வெளிப்படுத்த முயன்றிருந்தார். எனினும், சுழல் வீரர் ரங்கன ஹேரத்தை தாண்டி அவரால் போராட்டத்தை காண்பிக்க முடியாது போனது.

பாகிஸ்தானின் இறுதி நம்பிக்கையாக காணப்பட்ட அசாத் சபீக்கும் சுரங்க லக்மால் மூலம் வீழ்த்தப்பட முடிவில், 90.2 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்த பாகிஸ்தான் 248 ஓட்டங்களை மாத்திரம் தம்முடைய இரண்டாம் இன்னிங்சில் பெற்று இலங்கையிடம் தோல்வியினை தழுவியது.

தாம் பங்குபற்றிய முதலாவது பகலிரவு டெஸ்ட் போட்டியில் கிடைத்த வெற்றி மூலம் பாகிஸ்தானின் இரண்டாம் தாயகமாக கருதப்படும் ஐக்கிய அரபு இராச்சியத்தில் டெஸ்ட் தொடரொன்றில் பாகிஸ்தானை வீழ்த்திய முதலாவது அணியாக இலங்கை அரிய சாதனை ஒன்றினையும் பதிவு செய்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் அணியின் துடுப்பாட்டத்தில் போராட்டத்தினை காட்டியிருந்த அசாத் சபீக் 176 பந்துகளுக்கு 10 பெளண்டரிகள் அடங்கலாக 112 ஓட்டங்களினை பெற்றிருந்தார்.

இலங்கை அணியின் பந்து வீச்சில் தில்ருவான் பெரேரா மொத்தமாக 98 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை கைப்பற்றியதோடு, ரங்கன ஹேரத்தும் இரண்டு விக்கெட்டுக்களை சாய்த்து தமது அணி பிரபல்யமான வெற்றியொன்றினை அடைய பங்காற்றியிருந்தார்.

போட்டியின் ஆட்ட நாயகன் விருதும் தொடர் நாயகன் விருதும் முதலாம் இன்னிங்சில் சிறப்பான துடுப்பாட்டத்தினை வெளிப்படுத்திய திமுத் கருணாரத்னவுக்கு வழங்கப்பட்டது.

இலங்கை அணியனர் தமது ஐக்கிய அரபு இராச்சிய சுற்றுப் பயணத்தில் அடுத்த கட்டமாக ஐந்து போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பாகிஸ்தானுடன் மோதுகின்றனர். முதல் போட்டி வெள்ளிக்கிழமை (13) இதே மைதானத்தில் ஆரம்பமாகின்றது.

ஸ்கோர் விபரம்

Scorecard