இலங்கை மகளிர் அணியுடனான ஒருநாள் தொடரைக் கைப்பற்றிய பாகிஸ்தான்

244

சுற்றுலா பாகிஸ்தான் மகளிர் அணி மற்றும் இலங்கை மகளிர் அணிகளுக்கு இடையில் இன்று (22) தம்புள்ளையில் இடம்பெற்று முடிந்திருக்கும் இரண்டாவது ஒரு நாள் போட்டியில் பாகிஸ்தான் மகளிர் அணி இலங்கை மகளிர் அணியை 94 ஓட்டங்களால் வீழ்த்தியிருப்பதுடன் மூன்று போட்டிகள் கொண்ட தொடரையும் 2-0 என கைப்பற்றியிருக்கின்றது.

[rev_slider LOLC]

ஐ.சி.சி இன் மகளிர் சம்பியன்ஷிப் தொடரின் அங்கமாக நடைபெற்று வரும், இந்த ஒரு நாள் தொடர் செவ்வாய்க்கிழமை (20) ஆரம்பமாகியிருந்தது. தம்புள்ளையில் தொடரின் முதல் போட்டியில் 69 ஓட்டங்களால் பாகிஸ்தான் மகளிர் அணி வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலை பெற்றிருந்த காரணத்தினால் இன்றைய இரண்டாவது போட்டியில் இலங்கை மகளிர் அணி தொடரை பறிகொடுக்காமல் இருக்க இன்றைய போட்டியில் கட்டாயம் வெற்றிபெற வேண்டிய நிலையில் களமிறங்கியது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் மகளிர் அணித்தலைவி பிஸ்மா மஹ்ரூப் முதலில் துடுப்பாட்டத்தினை தேர்வு செய்திருந்தார்.

முதல் போட்டியில் இலங்கை மகளிர் அணியை வீழ்த்திய பாகிஸ்தான் மகளிர் அணி

இதன்படி முதலில் துடுப்பாடிய பாகிஸ்தான் மகளிர் அணிக்கு ஆரம்ப துடுப்பாட்ட வீராங்கணைகளாக நஹீதா கான் மற்றும் முனீபா அலி ஆகியோர் களமிறங்கினர்.

பாகிஸ்தானின் ஆரம்ப துடுப்பாட்ட வீராங்கணைகளில் மூனீபா 31 ஓட்டங்களையும், நஹீதா 29 ஓட்டங்களையும் பெற்றுத்தந்தவாறு மைதானத்தை விட்டு வெளியேறினர்.

இதனையடுத்து கடந்த போட்டியில் சதம் கடந்த வீராங்கணையான ஜவேரியா கான் துடுப்பாட வந்து 16 ஓட்டங்களுடன் ஏமாற்றினார். எனினும், நான்காம் விக்கெட்டுக்காக கைகோர்த்த பாகிஸ்தான் அணித்தலைவி பிஸ்மா மஹ்ரூப் மற்றும் நிதா தார் ஆகியோர் இணைப்பாட்டமாக 109 ஓட்டங்களைப் பெற்றுத்தந்தனர்.

இந்த இணைப்பாட்டாத்தோடு பாகிஸ்தான் மகளிர் அணி வலுவான நிலை ஒன்றுக்கு சென்றிருந்தது. இதில் அணித்தலைவி பிஸ்மா மஹ்ரூப் அரைச்சதம் ஒன்றினையும் நிதா தார் 38 ஓட்டங்களுடனும் அணிக்காகப் பெற்று வலுச்சேர்ந்திருந்தனர்.

அத்தோடு ஏனைய மத்தியவரிசை துடுப்பாட்ட வீராங்கணையான சனா மிர் துரித கதியிலான ஆட்டம் மூலம் பெற்றுக் கொண்ட 27 ஓட்டங்களுடன் பாகிஸ்தான் மகளிர் அணி 50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 250 ஓட்டங்களைக் குவித்துக் கொண்டது.

பாகிஸ்தான் மகளிர் அணியில் அதிகபட்சமாக பிஸ்மா மஹ்ரூப் 90 பந்துகளை எதிர்கொண்டு ஒரு சிக்ஸர் மற்றும் 9 பவுண்டரிகள் அடங்கலாக 89 ஓட்டங்களைக் குவித்திருந்தார்.

இலங்கை மகளிர் அணித்தரப்பின் பந்துவீச்சில் வலதுகை வேகமங்கையான ஸ்ரீபாலி வீரக்கொடி 2 விக்கெட்டுக்களையும், அமா காஞ்சனா மற்றும் இனோகா ரணவீர ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதமும் கைப்பற்றியிருந்தனர்.

தொடர்ந்து போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 250 ஓட்டங்களைப் பெற பதிலுக்கு துடுப்பாடிய இலங்கை மகளிர் அணி ஆரம்பம் முதலே குறுகிய இடைவெளிகளில் விக்கெட்டுக்களை பறிகொடுத்து முடிவில் 37 ஓவர்களுக்கு 156 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியடைந்தது.

இலங்கை மகளிர் அணியின் துடுப்பாட்டத்தில் அதிகபட்சமாக ஸ்ரீபாலி வீரக்கொடி 29 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழக்காது நின்றிருந்தார்.

பாகிஸ்தான் மகளிர் அணியின் பந்துவீச்சில் வலதுகை சுழல் வீராங்கணையான சனா மிர் 32 ஓட்டங்களை மாத்திரம் விட்டுக் கொடுத்து, 4 விக்கெட்டுக்களைக் கைப்பற்றி தனது தரப்பினை தொடரின் வெற்றியாளர்களாக மாற்ற முக்கிய பங்கு வகித்திருந்ததோடு, நிதா தார் 2 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தார்.

இலங்கை அணியின் தோல்விக்கு தலைவர் பொறுப்புக்கூற வேண்டும்: தயாசிறி

இந்த வெற்றியோடு, பாகிஸ்தான் மகளிர் அணி ஐ.சி.சி இன் மகளிர் சம்பியன்ஷிப் போட்டிகளில் முதல் தொடர் வெற்றி ஒன்றைப் பதிவு செய்வதோடு, இலங்கை மகளிர் அணி இரண்டாவது தடவையாகவும் ஐ.சி.சி மகளிர் சம்பியன்ஷிப் தொடர் ஒன்றை பறிகொடுத்திருக்கின்றது. இலங்கை இதற்கு முன்னதாக இந்த சம்பியன்ஷிப் தொடரில் கடந்த ஆண்டின் இறுதியில் மேற்கிந்திய தீவுகள் மகளிர் அணியிடம் மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை 3-0 எனப் பறிகொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தொடரின் மூன்றாவதும் இறுதியுமான ஒரு நாள் போட்டி தம்புள்ளை மைதானத்தில் எதிர்வரும் சனிக்கிழமை (24) நடைபெறவுள்ளது.

Scorecard