இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களில் மாற்றம் ஏற்படலாம் – திமுத்

3694

நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களில் ஒருவராக லஹிரு திரிமான்ன அல்லது ஓஷத பெர்னாண்டோ ஆகியோரில் ஒருவர் களமிறங்கலாம் என அணித் தலைவர் திமுத் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் நடைபெறவுள்ள இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான ஊடகவியலாளர் சந்திப்பு இன்று (7) நடைபெற்றது. இந்த சந்திப்பில் கலந்துக்கொண்டிருந்த திமுத் கருணாரத்ன இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்டம் தொடர்பில் கருத்து வெளியிட்டிருந்தார்.

நியூசிலாந்துக்கு எதிரான பயிற்சிப் போட்டியில் மொஹமட் சிராஸ்

நியூசிலாந்து அணிக்கு எதிராக நாளை (8) ஆரம்பமாகவுள்ள மூன்று……

தென்னாபிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இறுதியாக இலங்கை அணி விளையாடிய போது, ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக திமுத் கருணாரத்ன மற்றும் லஹிரு திரிமான்ன ஆகியோர் களமிறங்கியிருந்தனர். எனினும், இந்த ஆரம்ப இணைப்பாட்டமானது குறித்த தொடரில் இலங்கை அணிக்கு பேசக்கூடிய அளவில் பங்கினை வழங்கியிருக்கவில்லை.

இந்த நிலையில், எதிர்வரும் நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களில் மாற்றங்கள் ஏற்படுமா? என ஊடகவியலாளர் சந்திப்பில் கேள்வி எழுப்பப்பட்டது. 

அறிவிக்கப்பட்டுள்ள 22 பேர் கொண்ட குழாத்தில் தனுஷ்க குணதிலக்க, லஹிரு திரிமான்ன, ஓஷத பெர்னாண்டோ மற்றும் திமுத் கருணாரத்ன ஆகிய நான்கு ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் உள்ளனர். இவர்களை தவிர்த்து குசல் பெரேரா மற்றும் நிரோஷன் டிக்வெல்ல ஆகியோரும் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக செயற்பட்டுள்ளனர்.

எனினும், நியூசிலாந்து தொடரை பொருத்தவரை திமுத் கருணாரத்ன ஆரம்ப துடுப்பாட்ட வீரராக செயற்படுவார் என்பதுடன், அவருக்கு ஜோடியாக ஓஷத பெர்னாண்டோ அல்லது லஹிரு திரிமான்ன ஆகியோரில் ஒருவர் களமிறங்குவர் என திமுத் கருணாரத்ன சுட்டிக்காட்டினார்.

“இறுதி டெஸ்ட் தொடரில் லஹிரு திரிமான்ன என்னுடன் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கினார். ஆனால், நாம் இந்த தொடருக்கான 15 பேர் கொண்ட குழாத்தை இதுவரை தெரிவுசெய்யவில்லை. இப்போதைய நிலையில் 22 பேர் உள்ளனர். எனவே, நாம் யார் இந்த தொடருக்கு தேவை என்பதை தீர்மானிக்க வேண்டும். ஆனால், லஹிரு திரிமான்ன அல்லது ஓஷத பெர்னாண்டோ ஆகியோரில் ஒருவர் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்குவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன” என திமுத் கருணாரத்ன குறிப்பிட்டார்.

நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கான இலங்கை குழாம் அறிவிப்பு

நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெறவுள்ள இரண்டு…….

நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான 22 பேர் கொண்ட குழாம் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், குறித்த குழாத்தில் இருக்கும் சில வீரர்கள் நாளைய (8) தினம் ஆரம்பமாகவுள்ள பயிற்சிப் போட்டியில் விளையாடவுள்ளனர். இதனால், குறித்த பயிற்சிப் போட்டிக்கு பின்னர், இலங்கை அணியின் 15 பேர் கொண்ட குழாம் அறிவிக்கப்படும் என்பதுடன், ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் தொடர்பான இறுதித் தீர்மானம் இதன்போது எடுக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<