தமது டெஸ்ட் கோட்டையில் இலங்கை எவ்வாறு சாதிக்கும்?

1196
SL vs ENG

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டி நாளை (14) காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

ஐசிசி புதிதாக அறிமுகப்படுத்தியிருக்கும் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்புக்கான இந்த தொடரில் இரண்டு அணிகளும் தங்களுடைய முதல் வெற்றியை பெற்றுக்கொள்ளும் நோக்கில் களமிறங்கவுள்ளன. குறிப்பாக, இந்த தொடரை முழுமையாக 2-0 என வெற்றிபெறும் பட்சத்தில், வெற்றிபெறும் அணி டெஸ்ட் சம்பியன்ஷிப்பின் ஒரு தொடருக்கு வழங்கப்படும் 120 புள்ளிகளையும் மொத்தமாக பெற்றுக்கொள்ளும். 

இலங்கையின் புதிய வீரர்களுக்கு எதிராக நியூசிலாந்து அணியின் திட்டம்

நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட்………

இலங்கை அணியின் பக்கம் பார்க்கும் போது, மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளில் சறுக்கி வந்தாலும், டெஸ்ட் போட்டிகளில் ஓரளவு பிரகாசித்து வருகின்றது. இலங்கை அணியின் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்காக புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள திமுத் கருணாரத்ன அணியை சிறப்பாக வழிநடத்தி வருகின்றார்.

இறுதியாக, கடந்த வருட இறுதியில் நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என இலங்கை அணி தோல்வியுற்றிருந்தாலும், குறித்த தொடரின் முதல் போட்டியில் குசல் மெண்டிஸ் மற்றும் மெதிவ்ஸ் இலங்கை அணியை தோல்வியிலிருந்து மீட்டு, போட்டியை சமனிலைப்படுத்தியிருந்தனர்.

குறித்த தொடருக்கு பின்னர் நடைபெற்ற அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இலங்கை அணி 2-0 என இழந்திருந்தது. ஆனால், திமுத் கருணாரத்னவின் தலைமையில் முதன்முறையாக தென்னாபிரிக்கா சென்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய இலங்கை அணி 2-0 என டெஸ்ட் தொடரை கைப்பற்றி வரலாறு படைத்திருந்தது. ஆசிய நாடொன்று தென்னாபிரிக்காவில் டெஸ்ட் தொடரை வென்ற பெருமையையும் இலங்கை அணி இதன்போது பெற்றிருந்தது.

குறித்த தொடரில் மிகச்சிறப்பாக பிரகாசித்திருந்த குசல் மெண்டிஸ், குசல் பெரேரா, ஓசத பெர்னாண்டோ, லசித் எம்புல்தெனிய மற்றும் விஷ்வ பெர்னாண்டோ ஆகியோர் நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான குழாத்தில் இடம்பெற்றுள்ளமை இந்த தொடரில் அணிக்கு பலமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேநேரம், நியூசிலாந்து அணியானது உலகக் கிண்ணத்தை மயிரிழையில் தவறவிட்ட நிலையில் இலங்கைக்கு வருகைத் தந்துள்ளது. மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளில் மட்டுமல்லாது டெஸ்ட் போட்டிகளிலும் மிகச்சிறந்த அணியாக நியூசிலாந்து வளம் வருகின்றது.

கேன் வில்லியம்சனின் தலைமைத்துவம் நியூசிலாந்து அணிக்கு அதீத பலத்தை அளித்து வருவதுடன், அவரது துடுப்பாட்டமும் எதிரணிகளுக்கு சவால் விடுக்கும் வகையில் அமைந்திருக்கிறது.  குறிப்பாக, இறுதியாக நடைபெற்ற ஐந்து டெஸ்ட் தொடர்களிலும் தொடர்ச்சியாக வெற்றிகளை குவித்த நியூசிலாந்து டெஸ்ட் தரவரிசையில் 2வது இடத்தில் உள்ளது.

குறித்த வெற்றிகளில் மிகச்சிறந்த வெற்றியாக சுழல் பந்துவீச்சுக்கு சாதகமான ஐக்கிய அரபு அமீரகத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி நியூசிலாந்து அணி தொடரை வென்றிருந்தது.

அதேபோன்று, இலங்கை சூழ்நிலைக்கேற்ப நான்கு சுழல் பந்துவீச்சாளர்களை தங்களது குழாத்துக்கு இணைத்திருக்கும் நியூசிலாந்து அணி, இலங்கைக்கு மிகச்சவாலாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர்களது சுழல் பந்துவீச்சாளர்களில் பாகிஸ்தானில் அசத்தி அஜாஷ் பட்டேல் இந்த தொடரில் முக்கிய துறுப்புச்சீட்டாக பார்க்கப்படுகிறார்.

முதல் டெஸ்ட் போட்டிக்கான இலங்கை குழாம் அறிவிப்பு

நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெறவுள்ள ……

இரு அணிகளதும் கடந்தகால மோதல்கள்

இரு அணிகளதும் கடந்தகால மோதல்களை பொருத்தவரை, ஒட்டுமொத்தமாக நியூசிலாந்து அணி முன்னிலை பெற்றிருந்தாலும், இலங்கையில் அவர்களது ஆதிக்கம் மிகக்குறைவாகவே உள்ளது.

ஒட்டுமொத்த டெஸ்ட் போட்டிகளை பார்க்கும் போது, நியூசிலாந்து அணி 34 போட்டிகளில் 15 வெற்றிகளை பெற்றுள்ளதுடன், இலங்கை அணி வெறும் 8 போட்டிகளில் மாத்திரமே வெற்றிபெற்றுள்ளது. மீதமுள்ள போட்டிகள் சமனிலையில் முடிவடைந்துள்ளன.

ஆனால் நியூசிலாந்து அணியின் இலங்கை சுற்றுப் பயணத்தை பொருத்தவரை 1984ம் ஆண்டு தங்களுடைய முதல் தொடரை 2-0 என வென்றிருந்த போதும், அதன் பின்னர் எந்தவொரு தொடரையும் இலங்கை மண்ணில் அந்த அணி வெற்றிக்கொண்டதில்லை. நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற 15 போட்டிகளில் இலங்கை 6 வெற்றிகளை பெற்றுள்ளதுடன், நியூசிலாந்து அணி 4 வெற்றிகளை பெற்றுள்ளது. 

அதுமாத்திரமின்றி காலி மைதானத்தில் நியூசிலாந்து அணிக்கு எதிராக 3 டெஸ்ட் போட்டிகளில் இலங்கை அணி விளையாடி, அனைத்திலும் வெற்றிபெற்றுள்ளது. 

இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களில் மாற்றம் ஏற்படலாம் – திமுத்

நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் ……..

எதிர்பார்ப்பு வீரர்கள்

அஞ்செலோ மெதிவ்ஸ்

இலங்கை அணியின் அனுபவமிக்க துடுப்பாட்ட வீரரான அஞ்செலோ மெதிவ்ஸ், தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான இறுதி டெஸ்ட் தொடரில் விளையாடாத போதும், டெஸ்ட் போட்டிகளில் மெதிவ்ஸ் முக்கிய வீரராக கருதப்படுகிறார்.

Angelo Mathewsகுறிப்பாக நியூசிலாந்து அணிக்கு எதிராக இறுதியாக நடைபெற்ற டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் 120 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்று அணியை தோல்வியிலிந்து காப்பாற்றியதுடன், குறித்த தொடரில் முற்றுமுழுதாக அணியின் துடுப்பாட்டத்தை வழிநடத்தியிருந்தார். 

நியூசிலாந்து அணிக்கு எதிராக 7 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள இவர், 57.84 என்ற சராசரியில் 752 ஓட்டங்களை குவித்திருக்கிறார்.

கேன் வில்லியம்சன் 

உலக கிரிக்கெட் இரசிகர்கள் மத்தியில் தலைமைத்துவம் மற்றும் கிரிக்கெட்டுக்கு அப்பாற்பட்ட செயற்பாடுகள் தொடர்பில் அதிகம் பேசப்படும் மற்றும் விரும்பப்படும் வீரர் கேன் வில்லியம்சன். அந்த அணியை ஒட்டுமொத்தமாக சிறந்த முறையில் வழிநடத்தி வருகிறார். 

தலைமைத்துவத்திலும் சரி, துடுப்பாட்டத்திலும் சரி தன்னுடைய பங்கினை சிறப்பாக வழங்கி வருகின்றார். சர்வதேச டெஸ்ட் அரங்கில் 53.38 என்ற சராசரியில் 6,139 ஓட்டங்களை குவித்துள்ள இவர், இலங்கை அணிக்கு எதிராகவும் துடுப்பாட்டத்தில் பிரகாசித்துள்ளார்.

 

இலங்கை அணிக்கு எதிராக 8 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள இவர், 80.66 என்ற மிகச்சிறந்த சராசரியுடன் 968 ஓட்டங்களை குவித்திருக்கிறார். இதில் இரட்டைச்சதம் ஒன்றும் அடங்குகிறது.

உத்தேச பதினொருவர்

அஞ்செலோ மெதிவ்ஸின் வருகையின் காரணமாக தென்னாபிரிக்க அணிக்கெதிரான இறுதி டெஸ்ட் போட்டியில் ஆட்டமிழக்காமல் 75 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து அணிக்கு வெற்றியை பெற்றுக்கொடுத்திருந்த ஓசத பெர்னாண்டோ முதல் போட்டியில் விளையாட மாட்டார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ஆரம்ப துடுப்பாட்ட வீரராக லஹிரு திரிமான்னேவும், ஏழாவது துடுப்பாட்ட வீரராக தனன்ஜய டி சில்வாவும் களமிறங்க வாய்ப்புள்ளது. அதேநேரம், தென்னாபிரிக்காவில் அசத்திய லசித் எம்புல்தெனிய சுழல் பந்துவீச்சை வழிநடத்துவார் என்பதுடன், அவருடன் அகில தனன்ஜய இரண்டாவது சுழல் பந்துவீச்சாளராக இணைவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. அத்துடன், வேகப் பந்துவீச்சாளர்களாக லஹிரு குமார மற்றும் சுரங்க லக்மால் ஆகியோர் செயற்படுவர் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. 

இலங்கை அணி 

திமுத் கருணாரத்ன (தலைவர்), லஹிரு திரிமான்னே, குசல் மெண்டிஸ், அஞ்செலோ மெதிவ்ஸ், குசல் பெரேரா, நிரோஷன் டிக்வெல்ல, தனன்ஜய டி சில்வா, அகில தனன்ஜய, லசித் எம்புல்தெனிய, லஹிரு குமார, சுரங்க லக்மால்

டெஸ்ட் தரப்படுத்தில் இரண்டாவது இடத்தில் உள்ள நியூசிலாந்து அணி, கட்டுநாயக்கவில் நடைபெற்ற பயிற்சிப் போட்டியில் மழைக்காரணமாக துடுப்பெடுத்தாடும் வாய்ப்பை இழந்திருந்தது. எனினும், இதற்கு முன்னர் சுழல் பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களில் பாகிஸ்தானை வீழ்த்தி டெஸ்ட் தொடரை வென்றிருந்தது.

நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கான இலங்கை குழாம் அறிவிப்பு

நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெறவுள்ள ………

இந்த நிலையில், அணித் தலைவர் கேன் வில்லியம்சன் துணைக் கண்டங்களில் துடுப்பாட்டத்தில் பிரகாசித்துள்ளார். இவருடன், டொம் லேத்தம், ரொஸ் டெய்லர் மற்றும் ஹென்ரி நிக்கோல்ஸ் ஆகியோர் நியூசிலாந்தின் துடுப்பாட்டத்தை வலுப்படுத்துவர்.

சுழல் பந்துவீச்சை அஜாஸ் பட்டேல் மற்றும் வில் சமர்வில் ஆகியோர் பலப்படுத்துவார்கள் என்பதுடன் டிம் சௌதி மற்றும் ட்ரென்ட் போல்ட் ஆகியோர் வேகப் பந்துவீச்சாளர்களாக செயற்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

நியூசிலாந்து அணி

டொம் லேத்தம், ஜீட் ராவல், கேன் வில்லியம்சன் (தலைவர்), ரொஸ் டெய்லர், ஹென்ரி நிக்கோல்ஸ், பிஜே வெட்லிங், கொலின் டி கிராண்டோம், டிம் சௌதி, ட்ரென்ட் போல்ட், வில் சமர்வில், அஜாஷ் பட்டேல்

ஆடுகளம் மற்றும் காலநிலை

காலி மைதான ஆடுகளமானது முதல் நாளிலிருந்து சுழல் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக அமையும் என்பதுடன், துடுப்பாட்ட வீரர்களுக்கும் சாதகத்தன்மையை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

காலநிலையை பொருத்தவரை போட்டியில் மழைக்குறுக்கிட வாய்ப்பு இருந்தாலும், கடல் காற்றின் காரணமாக போட்டி முற்றாக தடைப்படாது என எதிர்பார்க்கப்படுகிறது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<