பயனற்றுப் போன ரஹ்மானின் கோல் : இலங்கையை வீழ்த்தியது லாவோஸ்

434
Sri Lanka vs Laos
Photo courtesy - AFC

ஆசிய கால்பந்து கூட்டமைப்பின் ஏற்பாட்டில் முதல் முறையாக இடம்பெறும் ஒற்றுமைக் கிண்ண கால்பந்து சுற்றுத் தொடரில் இலங்கை அணி பங்கு கொண்ட முதல் போட்டியில் இறுதி நேரத்தில் அசிகுர் ரஹ்மான் கோலைப் பெற்றாலும், இலங்கை அணி 1-2 என்ற கோல்கள் கணக்கில் லாவோஸ் அணியிடம் தோல்வியுற்றது.

மலேசியாவின் குஷிங் நகரில் உள்ள நெகேரி விளையாட்டரங்கில் இடம்பெற்ற இந்தப் போட்டியின் முதல் பாதியில் ஆரம்பம் முதல் லாவோஸ் அணியினரின் நடுக்கள மற்றும் முன்கள வீரர்கள் சிறந்த ஒரு ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அவ்வணியின் வீரர்கள் இலங்கை அணியின் எல்லையில் தமது ஆதிக்கத்திலேயே அதிக நேரம் பந்தை வைத்திருந்தனர்.

எனினும் அதனை எதிர்த்து ஆடிய இலங்கை வீரர்களும், லாவோஸ் அணிக்கு கோல்களை வழங்கும் சந்தர்ப்பத்தில் இருந்து தமது அணியை பாதுகாக்கும் முகமாக போட்டியின் ஆரம்பத்தில் ஆடினர்.

இலங்கை அணி வீரர்களின் கால்களுக்கு பந்து கிடைத்த பல சந்தர்ப்பங்களிலும் அவர்கள் அதனை சிறந்த முறையில் நிறைவு செய்யவில்லை. குறிப்பாக, இலங்கை வீரர் மதுஷான் டி சில்வாவுக்கு கோல் பெறுவதற்கான மிகவும் சிறந்த ஒரு வாய்ப்பு கிடைத்தது. எனினும், அவர் அதன்போது கோலை நோக்கி உதைந்த பந்து கோல் கம்பங்களுக்கு வெளியே சென்றது.

அது போன்றே, இலங்கை அணிக்கு கிடைத்த பல வாய்ப்புகளையும், லாவோஸ் அணியின் பின்கள வீரர்கள் மிகவும் நிதானமாகவும், சிறந்த முறையிலும் தடுத்தாடினர்.

முதல் பாதியில் லாவோஸ் அணியினருக்கு 10 ஐயும் விட அதிகமான கோணர் உதை வாய்ப்புகள் கிடைத்தன. எனினும் இலங்கை அணிக்கு மிகவும் குறைந்த அளவிலான கோணர் வாய்ப்புகளே இடைத்தன. எனினும் அவற்றின்மூலம் எந்த அணிகளும் கோல்களைப் பெறவில்லை.

முதல் பாதி : இலங்கை (00) (00) லாவோஸ்

பின்னர் வெற்றியைத் தீர்மானிப்பதற்கான இரண்டாவது பாதியில் ஆட்டம் மிகவும் விறுவிறுப்பானது. எனினும் போட்டியில் அதிக ஆதிக்கம் லாவோஸ் அணியின் பக்கமே இருந்தது.

இதன்போது லாவோஸ் அணியின் பல கோல் பெறும் முயற்சிகளை இலங்கை அணியின் கோல் காப்பாளர் சுஜான் பெரேரா சிறந்த முறையில் தடுத்து ஆடினார்.

இந்நிலையில் ஆட்டத்தின் போக்கை மாற்றும் வகையில் 58ஆவது நிமிடத்தில் லாவோஸ் அணி வீரர் சௌக்சவத் போட்டியின் முதல் கோலைப் பெற்றார். தமது அணிக்கு கிடைத்த கோணர் உதைப் பந்தை தலையால் முட்டி அந்த கோலைப் அவர் பெற்றார்.

அதன் பின்னர் இலங்கை அணியும் தீவிரமடைந்தது. தமது அணி சார்பாக சிறந்த விளையாட்டை வெளிப்படுத்திய எடிசன் பிகுராடோ இரு சந்தர்ப்பங்களில் இரண்டு உதைகளை கோல் நோக்கி உதைந்தார். எனினும் அதில் ஒன்றை எதிரணி கோல் காப்பாளரும், மற்றைய உதையை பின்கள வீரர் ஒருவரும் தடுத்தனர்.

அதனைத் தொடர்ந்து மீண்டும் போட்டியின் 83ஆவது நிமிடத்தில் லாவோஸ் வீரர் சொன்தனாலே அவ்வணிக்கான இரண்டாவது கோலைப் பெற்றுக் கொடுத்தார். எனவே, போட்டி நிறைவடையும் தருவாயில் வெற்றியின் சுவையில் இருந்த லாவோஸ் அணிக்கு அதிர்ச்சியொன்றும் காத்திருந்தது.

இலங்கை அணியினர் பெற்ற கோணர் உதை ஒன்றின்போது, அணியின் பின்கள வீரர் அசிகுர் ரஹ்மான் எதிரணி கோல் திசைக்கு சென்று பந்தை தலையால் முட்டி கோல் ஒன்றைப் பெற்றார். இதனால் இலங்கை வீரர்கள் உட்சாகமடைந்தனர். எனினும் அந்த கோல் மேலதிக நேரத்தின் 3ஆவது நிமிடத்திலேயே (93ஆவது நிமிடம்) பெறப்பட்டது.

அந்த கோலைத் தொடர்ந்து இலங்கை அணியினர் போட்டியை சமப்படுத்த வேகமாக செயற்பட்டனர். எனினும் நடுவரால் போட்டி முடிவடைவதற்கான விசில் ஊதப்பட்டதால் லாவோஸ் அணியினர் மேலதிகமான ஒரு கோலினால் வெற்றியைப் பெற்றுக்கொண்டனர்.

முழு நேரம் : இலங்கை (01) (02) லாவோஸ்

கோல் பெற்றவர்கள்

  • லாவோஸ் mzp – சௌக்சவத் (58’), சொன்தனாலே (83’)
  • இலங்கை அணி – அசிகுர் ரஹ்மான் (90+3)

Thepapare.com இன் ஆட்ட நாயகன் – பத்தானா சிவிலே (லாவோஸ்)

போட்டியின் பின்னர் இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளர் ட்டலி ஸ்டேன்வோல் கருத்து தெரிவிக்கையில் ”அணியின் பின்கள வீரர்களின் செயற்பாடு மோசமாக இருந்தமையே போட்டியில் தோல்வியடைவதற்கு காரணமாக இருந்தது.

எனினும், அடுத்த போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். எனவே எமது குறைகளை நிவர்த்தி செய்துகொண்டு அதற்காக முயற்சிப்போம்” எனறார்.

இலங்கை அணி பங்குகொள்ளும் அடுத்த போட்டி மொங்கோலியாவுக்கு எதிராக எதிர்வரும் 6ஆம் திகதி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.