சுற்றுலா இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையில் நடைபெற்று முடிந்திருக்கும் T20 போட்டியில், இந்திய அணி இலங்கையை 7 விக்கெட்டுகளால் வீழ்த்தி டெஸ்ட், ஒரு நாள் தொடர்களுடன் T20 போட்டியையும் கைப்பற்றியுள்ளது.

கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச மைதானத்தில் தொடங்கிய இந்த ஆட்டம் மைதான ஈரலிப்பு காரணமாக 40 நிமிடங்கள் வரையில் தாமதமாகியிருந்தது. போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணியின் தலைவர் விராத் கோஹ்லி முதலில் இலங்கை அணியை துடுப்பாடுமாறு பணித்திருந்தார்.

முன்னதாக இந்தியாவுடனான டெஸ்ட் தொடரிலும் ஒரு நாள் தொடரிலும் முழுமையாக வைட் வொஷ் செய்யப்பட்டிருந்த இலங்கை, இந்தியாவின் சுற்றுப்பயணத்தில் முதல் வெற்றியைத் தேடி இன்றைய போட்டியில் களமிறங்கியிருந்தது. அத்தோடு இலங்கை அணி சார்பாக இப்போட்டியின் மூலம் T20 போட்டிகளில் முதல் தடவையாக விளையாடும் வாய்ப்பினை சகலதுறை வீரர் அஷான் பிரியன்ஞன் பெற்றிருந்தார்.

தொடர்ந்து நாணய சுழற்சி முடிவுகளுக்கு அமைவாக இலங்கை அணியின் துடுப்பாட்டத்தை அணித் தலைவர் உபுல் தரங்க மற்றும் நிரோஷன் திக்வெல்ல தொடங்கியிருந்தனர். ஒரு மெதுவான ஆரம்பத்தை இலங்கை காட்டியிருப்பினும் ஜஸ்பிரிட் பும்ரா வீசிய போட்டியின் இரண்டாவது ஓவரில் தொடர்ந்து மூன்று பவுண்டரிகளை விளாசிய திக்வெல்ல போட்டியை விறுவிறுப்பாக மாற்றினார்.

இவ்வாறனதொரு நிலையில், தமது முதல் விக்கெட்டாக அணித் தலைவர் உபுல் தரங்கவை பறிகொடுத்த இலங்கை அணி சற்று பதற்றத்தினை எதிர்கொண்டது. புவ்னேஸ்வர் குமாரினால் போல்ட் செய்யப்பட்ட தரங்க வெறும் 5 ஓட்டங்களுடன் வெளியேறினார்.

பின்னர் மைதானம் நுழைந்த தில்ஷான் முனவீர இந்திய பந்து வீச்சாளர்களுக்கு நெருக்கடி தந்து அதிரடி காட்டத் தொடங்கினார். இதனால் இலங்கை அணியின் ஓட்ட எண்ணிக்கை விரைவாக உயரத் தொடங்கியது. இலங்கை அணியின் இரண்டாம் விக்கெட்டாக வெளியேறிய திக்வெல்ல நல்ல ஆரம்பத்தை பெற்றுத்தந்தும் அதனை நீண்ட இன்னிங்சாக மாற்றத்தவறி 17 ஓட்டங்களுடன் ஓய்வறை திரும்பினார்.

திக்வெல்லவை அடுத்து துடுப்பாட வந்த வீரர்களில் அஞ்செலோ மெதிவ்ஸ் ஏமாற்றம் அளித்திருந்தார். எனினும் களம் வந்த இன்றைய அறிமுக வீரர் அஷான் பிரியன்ஞன் உடன் ஜோடி சேர்ந்த தில்ஷான் முனவீர தனது கன்னி T20 அரைச் சதத்தைக் கடந்து அணியை வலுப்படுத்தியிருந்தார்.

போட்டியின் 12 ஆவது ஓவரில் குல்தீப் யாதவின் சுழலினால் மடக்கப்பட்ட முனவீர வெறும் 29 பந்துகளை எதிர்கொண்டு 4 சிக்ஸர்கள் மற்றும் 5 பவுண்டரிகள் அடங்கலாக 53 ஓட்டங்களை விளாசியிருந்தார்.

அடுத்து வந்த வீரர்களில் திசர பெரேரா, தசுன் சானக்க மற்றும் சீக்குகே பிரசன்ன ஆகியோர் சரியான முறையில் பிரகாசிக்கத் தவறினர். இதனால் ஒரு கட்டத்தில் 134 ஓட்டங்களுக்கு இலங்கை 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

சுமதிபால மீதான குற்றச்சாட்டை நிராகரிக்கும் இலங்கை கிரிக்கெட்

இலங்கை கிரிக்கெட் சபைத் தலைவர் திலங்க சுமதிபால சூதாட்ட தொழிலில் ஈடுபட்டு…

இந்த இக்கட்டான தருணத்தில் அஷான் பிரியன்ஞன் மற்றும் இசுரு உதான ஆகியோர் சாதுர்யமான முறையில் ஆடி அணிக்கு ஓட்டங்கள் சேர்க்க 20 ஓவர்கள் நிறைவில் மேலதிக விக்கெட் இழப்புகள் ஏதுமின்றி இலங்கை 170 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

இறுதிவரை ஆட்டமிழக்காமல் பொறுப்புடன் துடுப்பாடிய அஷான் பிரியன்ஞன் மொத்தமாக 40 ஓட்டங்களையும், அதிரடி காட்டிய இசுரு உதான 10 பந்துகளில் 19 ஓட்டங்களையும் பெற்றிருந்தனர்.

இந்திய அணி சார்பாக பந்து வீச்சில், யுஸ்வேந்திர சாஹல் 43 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் 20 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும் சாய்த்திருந்தனர்.

இலங்கையினால் நிர்ணயிக்கப்பட்ட சற்று சவலான வெற்றி இலக்கான 171 ஓட்டங்களை 20 ஓவர்களில் பெறுவதற்கு பதிலுக்கு துடுப்பாடிய இந்திய அணி, ஆரம்பத்தில் இரண்டு விக்கெட்டுகளை பறிகொடுத்து ஒரு தடுமாற்றத்தினை எதிர்கொண்டிருப்பினும் மூன்றாம் விக்கெட்டுக்காக கைகோர்த்த இந்திய அணித் தலைவர் விராத் கோஹ்லி, மனீஷ் பாண்டே உடன் சேர்ந்து 119 ஓட்டங்களை இணைப்பாட்டமாகப் பகிர்ந்தார்.

இதனால், 19.2 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 174 ஓட்டங்களைப் பெற்று இந்திய அணி வெற்றி இலக்கை அடைந்தது.  

இதில் இந்திய அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்ற கோஹ்லி மொத்தமாக 54 பந்துகளில் 7 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கலாக 82 ஓட்டங்களைப் பெற்று தனது 17ஆவது T20 அரைச் சதத்தினை பதிவு செய்திருந்தார். மறுமுனையில் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்த மனீஷ் பாண்டே 36 பந்துகளில் 51 ஓட்டங்களைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

இலங்கை அணியின் பந்து வீச்சில், லசித் மாலிங்க, சீக்குகே பிரசன்ன மற்றும் இசுரு உதான ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் கைப்பற்றியிருந்தனர்.

இந்திய அணியின் இந்த சுற்றுப்பயணத்தை முடித்திருக்கும் இலங்கை அடுத்து இம்மாத இறுதியில் பாகிஸ்தனோடு டெஸ்ட் தொடரில் மோதுவதற்காக ஐக்கிய அரபு  இராச்சியத்திற்கு பயணிக்கின்றது.

ஸ்கோர் விபரம்