இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் வரலாறு படைக்குமா?

947
SLvIND 1st test Preview 2017

அண்மைய நாட்களில் அதிகமான தோல்விகளையே பார்த்து பழக்கப்பட்டிருக்கும்  இலங்கை கிரிக்கெட் அணி அதிலிருந்து மீள்வதற்காக கடும் சிரத்தைகளை எடுத்து வருகின்றது. இப்படியான தருணத்தில் மூன்றுவகைப் போட்டிகளிலும் இப்போதைய நாட்களில் மலைக்க வைக்கும்படியான ஆட்டத்தினை வெளிப்படுத்தி கிரிக்கெட் உலகின் முடிசூடா மன்னராக மாறியிருக்கும் இந்தியாவுடன் நடைபெறவுள்ள தொடர் இந்து சமுத்திரத்தின் முத்திற்கு இந்த வருடத்தில் கொடுக்கப்பட்ட மிகப் பெரும் சவால் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

சமநிலையில் நிறைவடைந்த இலங்கை அணியின் பயிற்சி ஆட்டம்

இன்று (12) நடைபெற்று முடிந்திருக்கும் இலங்கை…

இச் சவாலினை எதிர்கொள்வதற்காக தமது அயல் தேசத்துக்கு பயணமாகியிருக்கும் இலங்கை அணி முதற்கட்டமாக கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் வியாழக்கிழமை (16) ஆரம்பமாகவிருக்கும் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியாவுடன் மோதுகின்றது.

இதுவரையில் இந்திய மண்ணில் எந்தவொரு டெஸ்ட் வெற்றியினையும் இலங்கை பதிவு செய்திருக்காதமையினால் வரலாற்றினை மாற்றும் வாய்ப்பு பாகிஸ்தானுடனான அண்மைய டெஸ்ட் தொடரினை 2-0 எனக் கைப்பற்றிய இலங்கை இளம் வீரகளுக்கு மீண்டும் கிட்டியிருக்கின்றது.

எனவே, நடைபெறப்போகும் அயல் தேசங்களுக்கிடையிலான இந்த டெஸ்ட் தொடர் பற்றிய ஒரு முன்னோட்டத்தினை நாம் பார்ப்போம்.

வரலாறு

1982ஆம் ஆண்டு டெஸ்ட் அந்தஸ்தினை பெற்றுக்கொண்ட இலங்கை அணிக்கு தமது முதல் டெஸ்ட் வெற்றியினைப் பெறுவதற்கு மூன்று வருடங்கள் தேவைப்பட்டிருந்தது. இலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க அந்த வெற்றி இந்திய அணிக்கெதிராகவே 1985ஆம் ஆண்டில் பெறப்பட்டது.   

அப்போட்டியோடு சேர்த்து இன்றுவரை இரண்டு அணிகளும் 41 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளன. இதில் 19 போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்றுள்ளதோடு, இலங்கை அணி 7 போட்டிகளைக் கைப்பற்றியிருக்கின்றது. 19 போட்டிகள் சமநிலை அடைந்திருக்கின்றன.

தொடர் நடைபெறப் போகும் இந்தியாவில் இரண்டு அணிகளுக்குமிடையே 17 போட்டிகள் நடைபெற்றுள்ளன. இதில் 10 போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்றுள்ளதோடு 7 போட்டிகள் சமநிலை அடைந்திருக்கின்றன.

இலங்கை கிரிக்கெட் அணி, இந்தியாவோடு சேர்த்து அவுஸ்திரேலியாவிலும் டெஸ்ட் வெற்றியொன்றினை இதுவரையில் சுவீகரிக்காமல் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமது வடுக்களுக்கு மருந்து தேடும் இலங்கை அணி

2017 ஆம் ஆண்டு நிறைவை எட்டியிருக்கின்ற தற்போதையதருணத்தில் இந்த வருடத்தில் கடந்து சென்ற நாட்களை புரட்டிப் பார்க்கும் போது அவை இலங்கை கிரிக்கெட் அணிக்கு கறுப்பு பக்கங்களாகவே அமைவதை காண முடியும்.

இலங்கை அணியின் முன்னாள் தலைவருக்கு புதிய பொறுப்பு

இலங்கை கிரிக்கெட் அணியின் தலைசிறந்த சகலதுறை…

ஜனவரியில் தென்னாபிரிக்காவினால் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் வைட் வொஷ் செய்யப்பட்டிருந்த இலங்கை, மார்ச் மாதம் வரலாற்றில் முதற்தடவையாக பங்களாதேஷ் மூலம் டெஸ்ட் போட்டியொன்றில்  வீழ்த்தப்பட்டிருந்தது. அதனை அடுத்து ஜிம்பாப்வே உடனான டெஸ்ட் தொடரில் நல்ல முடிவினைக் காட்டியிருந்தாலும் ஒகஸ்ட் மாதம் மீண்டும் சொந்த மண்ணில் வைத்து இந்தியாவுடன் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் வரலாற்றில் முதற்தடவையாக 3-0 என வைட்வொஷ் செய்யப்பட இலங்கை அணி ஒருநாள் தொடர், T-20 தொடர் ஆகியவற்றினையும் (9-0 என) முழுமையாகப் பறிகொடுத்ததால் தொடர்ந்து பலவிதமான அழுத்தங்களுக்கும், விமர்சனங்களுக்கும் உள்ளாகியிருந்தது.  

இதனையடுத்து ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த இலங்கை வீரர்கள் பாகிஸ்தான் அணியுடனான டெஸ்ட் தொடரை 2-0 எனக் கைப்பற்றி எதிர்பாராத முறையில் வரலாறு படைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. அத்தொடரில் பங்கேற்றிருந்த இலங்கை அணியே தற்போது இந்தியாவை டெஸ்ட் தொடரில் எதிர்கொள்ளப் போகின்றது. எனவே சொந்த மண்ணில் தாம் பெற்ற தோல்விகளுக்காக அயல் நாட்டு வீரர்களுக்கு இலங்கை அணியினர் பதிலடி தருவர்களா? என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

டெஸ்ட் கிரிக்கெட்டின் உச்சத்தில் காணப்படும் இந்தியா

2015ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இருந்து இன்று வரை தாம் பங்குபற்றிய எட்டு டெஸ்ட் தொடர்களிலும் வெற்றி பெற்றிருக்கும் இந்தியா, அணித்தலைவர் விராத் கோலியின் தலைமையின் கீழ் தற்போது டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் நாடாக மாறியுள்ளது.

சரியான திட்டமிடல், போட்டிகளை உத்தித் தன்மையுடன் கையாளும் விதம், சீரான அணிக்கட்டமைப்பு, தேசிய அணிக்காக உள்ளூர் போட்டிகளில் (ராஞ்சி கிண்ணம் போன்றவற்றில்) வீரர்கள் தயார்படுத்தப்படும் விதம் என்பவையே இந்திய அணியின் இன்றைய அபரிமிதமான வளர்ச்சிக்கு காரணங்களாக அமைகின்றன.

இதனால், எந்த அணியாக இருப்பினும் தற்போது அவர்கள் இலகுவாக வீழ்த்திவிடுகின்றனர்.  இதனால் அண்மைய நாட்களில் கத்துக்குட்டி அணியாக கருதப்படும் அளவுக்கு மாறியிருந்த இலங்கையுடன் அவர்கள் விளையாடியிருந்த டெஸ்ட் தொடர் முழுக்க இந்திய அணிக்கு சார்பாகவே (இலங்கை சவால் எதனையும் தராத காரணத்தினால்) அமைந்திருந்தது.

இன்னும் இந்தியாவை அவர்களது சொந்த மண்ணில் வைத்து வீழ்த்துவது என்பது சவாலின் உச்ச கட்டம் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. எனவே, தமது துணைக்கண்ட நாடான இலங்கைக்கு இந்தியா எந்தக் கணத்திலும் நெருக்கடி தரும் ஒரு அணியாகவே இந்த டெஸ்ட் தொடரில் அமையும்.

முன்னாள் அணித் தலைவரோடு மீண்டும் இலங்கை அணி

இலங்கை அணியின் தொடர் தோல்விகளுக்கு முக்கிய காரணிகளில் ஒன்று வீரர்களின் தொடர் உபாதையாகும். இலங்கை அணிக்காக விளையாடும் வீரர் ஒருவர் அவரது உச்ச நிலையில் இருக்கின்ற போது துரதிஷ்டவசமாக உபாதைக்கு உள்ளாகிவிடுகின்றார். இதில் முன்னாள் அணித்தலைவர் அஞ்செலோ மெதிவ்ஸ், அசேல குணரத்ன, குசல் பெரேரா மற்றும் தம்மிக்க பிரசாத் ஆகியோர் முக்கிய இடம் வகிக்கின்றனர்.

இவ்வீரர்கள் அனைவரும் தற்போது போதிய உடற்தகுதியினைப் பெற்றிருக்கின்ற போதிலும் போட்டி அனுபவங்களை கருத்திற் கொண்டு மெதிவ்சுக்கு மாத்திரமே அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கின்றது.  2016ஆம் ஆண்டின் ஒகஸ்ட் மாதத்தில் இருந்து இன்று வரை 37 சர்வதேச போட்டிகளில் இலங்கை அணிக்காக விளையாடும் வாய்ப்பினை மெதிவ்ஸ் இழந்திருக்கின்றார். இதில் ஆறு டெஸ்ட் போட்டிகள் அடங்குகின்றன. மெதிவ்ஸ் அண்மையில் பாகிஸ்தானுடன் நடைபெற்ற டெஸ்ட் தொடரிலும் பங்கேற்காது போயிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அஞ்செலோ மெதிவ்ஸ்

அபாயம் கருதி சகலதுறை வீரரான மெதிவ்ஸ் இனி டெஸ்ட் போட்டிகளில் பந்துவீசுவதில்லை என ஒரு அறிவிக்கை தெரிவிப்பதால் அவரை முழு நேர துடுப்பாட்ட வீரராகவே இந்த டெஸ்ட் தொடரில் பார்க்க முடியும்.

தற்போதைய இலங்கை குழாத்தில் காணப்படும் வீரர்களில் இரண்டு பேர் மாத்திரமே இந்தியாவில் முன்னர் டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய அனுபவத்தினைக் கொண்டுள்ளனர். அதிலொருவரான மெதிவ்ஸ், இந்தியாவுக்கு எதிராக இதுவரையில் 764 ஓட்டங்களை 2 சதங்கள் மற்றும் 3 அரைச்சதங்கள் அடங்கலாக குவித்துள்ளார். எனவே அனுபவமிக்க மெதிவ்ஸ் நான்காம் இலக்க துடுப்பாட்ட வீரராக வந்து இலங்கை அணியின் துடுப்பாட்டத்தினை வலுப்படுத்துவார் என எதிர்பார்க்க முடியும்.

இளம் வீரர்களோடு நிரம்பியிருக்கும் எஞ்சிய இலங்கை குழாம்

ஏனைய இலங்கை வீரர்களில் ரங்கன ஹேரத்தை தவிர தற்போதைய குழாத்தில் காணப்படும் ஒருவரேனும் இந்தியாவில் டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய அனுபவத்தினை பெறாத நிலையில் உள்ளனர். ஏனெனில் இறுதியாக 2009ஆம் ஆண்டிலேயே இலங்கை அணி டெஸ்ட் தொடரொன்றில் விளையாட இந்தியா பயணித்திருந்தது.

வித்தியாசமான சுழல் வீரரை கிரிக்கெட் உலகிற்கு அறிமுகப்படுத்தும் இலங்கை

இலங்கை கனிஷ்ட அணியில் விளையாடும் வலதுகை சுழல்…

இருக்கும் வீரர்களில் இலங்கையின் துடுப்பாட்டத்தினை வலுப்படுத்த எதிர்பார்க்கப்படும் முக்கிய வீரர் திமுத் கருணாரத்ன ஆவார். ஒகஸ்ட் மாதத்தில் இந்திய அணியுடன் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் இலங்கை சார்பாக அதிக ஓட்டங்களை (285) குவித்த திமுத் கருணாரத்ன பாகிஸ்தான் அணியுடனான டெஸ்ட்டிலும் அதிக ஓட்டங்கள் (306) குவித்தமைக்காக தொடர் நாயகன் விருதினையும் பெற்றிருந்தார்.

திமுத் கருணாரத்ன

ஆரம்பாக வீரராக வரும் திமுத் கருணாரத்னவோடு இம்முறை ஜோடியாக இளம் துடுப்பாட்ட நட்சத்திரம் சதீர சமரவிக்ரம வர எதிர்பார்க்க முடியும்.

பாகிஸ்தானுடனான டெஸ்ட் தொடரில் சிறப்பாக செயற்படாது போன காரணத்துக்காக இலங்கை அணியில் குசல் மெண்டிசுக்கு வாய்ப்பு தரப்படவில்லை. இவரது இடத்தினை அணியில் நிரப்ப லஹிரு திரிமான்ன, அறிமுக வீரர் ரொஷேன் சில்வா அல்லது தனன்ஞய டி சில்வா ஆகியோரில் ஒருவர் அணைவார் என எதிர்பார்க்கப்படுகின்றனர். தனன்ஞய டி சில்வா மேற்கிந்திய தீவுகளின் A அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பாக செயற்பட்டமைக்காகவே இலங்கை அணியில் மீண்டும் அழைக்கப்பட்டிருக்கின்றார்.

தினேஷ் சந்திமால்

இன்னும் அணித்தலைவர் தினேஷ் சந்திமால் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளில் மோசமான பதிவினை அண்மையில் காட்டியிருந்த போதிலும் பாகிஸ்தான் அணியுடனான டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் போராடிப் பெற்ற சதம் (155) இலங்கை அணியின் வெற்றிக்கு மூல காரணமாக அமைந்திருந்தது. 40 ஓட்டங்களுக்கு மேலான டெஸ்ட் சராசரியினைக் கொண்டிருக்கும் சந்திமால் இலங்கை அணியின் மத்திய வரிசையை வலுப்படுத்தக் கூடிய ஆற்றல் கொண்டவர்.

நிரோஷன் திக்வெல்ல, பகுதி நேர துடுப்பாட்ட வீரரான தில்ருவான் பெரேரா ஆகியோர் பின்வரிசையில் இலங்கைக்கு பெறுமதி சேர்க்க கூடியவர்கள்.

லீக் சுற்றின் இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தானிடம் வீழ்ந்த இலங்கை இளையோர் அணி

மலேஷியாவில் நடைபெற்று வரும் 19 வயதுக்கு உட்பட்ட…

ரங்கன ஹேரத்

அடுத்து பந்து வீச்சினை நோக்குமிடத்து இலங்கையின் முதுகெலும்பாக ரங்கன ஹேரத்தை கூற முடியும். இந்தியாவுடனான இறுதி டெஸ்ட் தொடரில் ஹேரத் குறிப்பிடும் படியான ஆட்டத்தை காட்டாவிட்டாலும் பாகிஸ்தானுக்கெதிரான டெஸ்ட் தொடரில் மொத்தமாக 16 விக்கெட்டுக்களைச் சாய்த்து இலங்கையின் வெற்றிக்கு உதவியிருந்தார். ஹேரத் இந்த வருடத்தில் அதிக டெஸ்ட் விக்கெட்டுக்களை கைப்பற்றிய வீரர்களில் இரண்டாம் இடத்தில் காணப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சுத்துறையினை அனுபவம் குறைந்த வீரர்களான லஹிரு கமகே, தசுன் சானக்க மற்றும் விஷ்வ பெர்னாந்து ஆகியோருடன் சேர்ந்து சுரங்க லக்மால் முன்னெடுப்பார் என நம்பப்படுகின்றது.

எதிர்பார்க்கப்படும் இலங்கை அணி

திமுத் கருணாரத்ன, சதீர சமரவிக்ரம, லஹிரு திரிமான்ன, அஞ்செலோ மெதிவ்ஸ், தினேஷ் சந்திமால் (அணித்தலைவர்), நிரோஷன் திக்வெல்ல (விக்கெட் காப்பாளர்) தசுன் சானக்க, தில்ருவான் பெரேரா, ரங்கன ஹேரத், சுரங்க லக்மால், லஹிரு கமகே  

டெஸ்ட் ஓட்ட இயந்திரத்தினை தம்மிடம் கொண்டிருக்கும் இந்தியா

இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் விளையாடவே வைத்திருக்கும் வீரர்களில் ஒருவரான செட்டெஸ்வர் புஜாரா அவ்வணிக்கு துடுப்பாட்டத்தில் பலம் சேர்க்க கூடிய ஒரு முக்கிய நபர். இலங்கை அணிக்கெதிராக நடைபெற்று முடிந்த டெஸ்ட் தொடரில் இரண்டு சதங்களை விளாசிய இவர் அத்தொடரில் 4 இன்னிங்சுகளில் 309 ஓட்டங்களினை மொத்தமாக பெற்றிருந்தார்.

சந்திக்க ஹதுருசிங்க பங்களாதேஷை விட்டு இலங்கை அணிக்கு வருவாரா?

பங்களாதேஷ் தலைமைப் பயிற்சியாளர் சந்திக்க..

செட்டெஸ்வர் புஜாரா

இன்னும் 50  ஓட்டங்களுக்கு மேலான டெஸ்ட் சராசரியினையும் கொண்டிருக்கும் புஜாரா கடந்த இரண்டு வருடங்களாக இந்திய அணிக்காக சிறப்பாக செயற்படும் ஒருவராக உள்ளார். இவர் குறிப்பிட்ட காலப்பகுதியில் 19 போட்டிகளில் விளையாடி 1687 ஓட்டங்களினை குவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.  

மூன்றாம் இலக்கத் துடுப்பாட்ட வீரராக வரும் புஜாராவை ஆரம்பத்திலேயே இலங்கை வீரர்கள் வீழ்த்தாது விடின் பின்னர் பெரும் நெருக்கடிகளை சந்திக்க வேண்டி வரும்.

விராத் கோலி

ஆரம்ப வீரர் சிக்கர் தவான், அஜங்கயா ரஹானே போன்ற வீரர்களோடு சேர்த்து அணித்தலைவர் விராத் கோலியும் இலங்கைக்கு நெருக்கடி தரக்கூடிய ஏனைய வீரர்களாக காணப்படுகின்றனர். இதில் கோலி எந்த தருணத்திலும் எதிரணியினை நிர்மூலம் செய்யக்கூடிய ஒரு அபாயகரமான துடுப்பாட்ட வீரர் ஆவார். இதுவரையில் இலங்கை அணிக்கெதிராக அவர் 394 ஓட்டங்களினை பெற்றிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

சுழல் ஜாம்பவான்களினால் மேலும் வலுப்பெறும் அயல் தேசம்

இந்திய அணிக்கு அவர்களது மிகப்பெரும் பலம் எதிரணியை நிர்மூலமாக்கும் சுழல் பந்துவீச்சாகும். இதற்கு காரணமாக ரவிச்சந்திரன் அஷ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகிய வீரர்கள் அமைகின்றனர்.  

ரவீந்திர ஜடேஜா

டெஸ்ட் தரவரிசையில் முதல் ஐந்து இடங்களுக்குள் உள்ள பந்து வீச்சாளர்களான இந்த இருவரும் இலங்கை அணியினை அண்மையில் நடைபெற்ற டெஸ்ட்  தொடரில் வீழ்த்த பெரும்பங்காற்றியிருந்தனர்.  அத்தொடரில் அஷ்வின் இலங்கையின் 17 விக்கெட்டுக்களையும், ஜடேஜா 13 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ரவிச்சந்திரன் அஷ்வின்

எனவே, நடைபெறவிருக்கும் தொடரில் இலங்கை வீரர்கள் இந்த இருவரையும் கவனமாகவே எதிர்கொள்ள வேண்டும். இன்னும் இந்த இரண்டு வீரர்களும் பகுதிநேர துடுப்பாட்ட வீரர்களாகவும் செயற்படக் கூடியவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சுத்துறையினை மொஹமட் சமி, புவ்னேஸ்வர் குமார் மற்றும் உமேஷ் யாதவ் ஆகியோர் முன்னெடுக்க முடியும். இதில் மொஹமட் சமி இலங்கை அணிக்கெதிராக இறுதியாக நடந்த டெஸ்ட் தொடரில் 10 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்ததார்.

எதிர்பார்க்கப்படும் இந்திய அணி

சிக்கர் தவான், முரலி விஜேய், செட்டெஸ்வர் புஜாரா, விராத் கோலி (அணித்தலைவர்), அஜின்கியா ரஹானே, ரித்திமன் சஹா(விக்கட் காப்பாளர்), ரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, மொஹமட் சமி, புவ்னேஸ்வர் குமார், உமேஷ் யாதவ்  

இனி நாம் பலம்மிக்க இந்திய அணியினை அவர்களது சொந்த மண்ணில் வீழ்த்தி இலங்கை அணி வரலாற்றை மாற்றுமா? அல்லது இந்தியா தனது ஆதிக்கத்தை தொடர்ந்து முன்னெடுக்குமா என்பதை பார்க்க மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் நிறைவடையும் வரை காத்திருக்க வேண்டியுள்ளது.

இத்தொடர் குறித்த அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் பெற்றுக்கொள்ள ThePapare.com உடன் இணைந்திருங்கள்.