இங்கிலாந்தை சோதித்து பல சாதனைகள் படைத்த இலங்கை

1439

சர்வதேச கிரிக்கட்டில் எதிர்பாராத திருப்பங்களை ஏற்படுத்தக்கூடிய அணி என்பதை இலங்கை அணி நேற்று (22) நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான உலகக் கிண்ணப் போட்டியில் நிரூபித்து எதிரணிகளுக்கு புதிய எச்சரிக்கையை விடுத்துள்ளது.

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் அந்த அணியின் பந்துவீச்சாளர்களை இங்கிலாந்து அணியின் துடுப்பாட்ட வீரர்கள் நெருக்கடிக்கு உள்ளாக்கி 397 ஓட்டங்களை குவித்திருந்தனர். கடந்த போட்டிகளில் பந்துவீச்சில் தடுமாறியிருந்த இலங்கை அணிக்கு, இங்கிலாந்தை வெற்றிக்கொள்வதற்கான வாய்ப்பு குறைவாகவே இருந்தது.

இந்த வெற்றியை உற்சாக மருந்தாக கொண்டு இலங்கை முன்னேற வேண்டும் – சங்கக்கார

லீட்ஸ் நகரில் நேற்று (21) இடம்பெற்று முடிந்த கிரிக்கெட்……

மிகவும் பலம் வாய்ந்த துடுப்பாட்ட வரிசைக்கு முன்னர் மிகப்பெரிய இலக்கை நிர்ணயிக்கும் நோக்கில் நேற்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி வெறும் 232 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. இந்த ஓட்ட எண்ணிக்கையானது இங்கிலாந்து அணிக்கு கடினமான ஓட்ட இலக்காக தெரியவில்லை. முழுமையான நம்பிக்கையுடன் களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு இலங்கை அணியின் பந்துவீச்சாளர்கள் என்றுமில்லாத அச்சுறுத்தலை விடுத்தனர்.

குறிப்பாக உடற்தகுதி மற்றும் நாடு திரும்பல்கள் தொடர்பில் விமர்சிக்கப்பட்டு வந்த லசித் மாலிங்க போட்டியின் திசையை முற்றுமுழுதாக இலங்கை பக்கம் திருப்பியிருந்தார். அவரது வேகம் குறைந்தாலும், அவரது அனுபவம் நேற்றைய போட்டியில் இலங்கை அணிக்கு சாதகமாக இருந்ததுடன், ஏனைய பந்துவீச்சாளர்களும் ஒன்றினைந்து இங்கிலாந்து அணியை 212 ஓட்டங்களுக்கு கட்டுப்படுத்தி, அணிக்கு த்ரில் வெற்றியை பெற்றுத்தந்தனர்.

இலங்கை அணியின் இந்த வெற்றியானது உலக கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியதுடன், தற்போது இலங்கை அணி மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. இவ்வாறு, இலங்கை அணி பெற்றுக்கொடுத்திருக்கும் எதிர்பாராத இந்த வெற்றியில் சில சாதனைகளும் மறைந்திருக்கின்றன. அந்த சாதனைகள் பின்வருமாறு,

நான்காவது முறையாக இங்கிலாந்தை வீழ்த்திய இலங்கை

உலகக் கிண்ண வரலாற்றில் இங்கிலாந்து அணியை தொடர்ச்சியாக நான்கு உலகக் கிண்ணங்களில் தோல்வியடையச் செய்த அணியென்ற பெருமையை இலங்கை அணி பெற்றுள்ளது.

இலங்கை அணி 2007, 2011 மற்றும் 2015ஆம் ஆண்டு உலகக் கிண்ணங்களில் இங்கிலாந்து அணியை தோல்வியடையச் செய்திருந்ததுடன், இந்த ஆண்டு குறித்த வெற்றி சாதனையை தொடர்ந்துள்ளது. குறிப்பாக 2007ஆம் ஆண்டு டில்ஹார பெர்னாண்டோவின் அசத்தல் பந்துவீச்சால் வெற்றியை பெற்றிருந்த இலங்கை அணி அடுத்த இரண்டு உலகக் கிண்ணங்களில் 10 மற்றும் 09 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலகுவான வெற்றியை பெற்றிருந்தது.

இங்கிலாந்து அணி இறுதியாக கடந்த 1999ஆம் ஆண்டு இலங்கை அணியை உலகக் கிண்ணத் தொடரில் வெற்றிக்கொண்டுள்ளதுடன், அதன் பின்னர் இதுவரையில் இலங்கையை வீழ்த்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


மாலிங்கவுக்கு 50

நேற்றைய போட்டியில் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்திய லசித் மாலிங்க உலகக் கிண்ணத்தில் 50 விக்கெட்டுகளை வீழ்த்திய நான்காவது வீரராக பதிவாகியுள்ளார். இங்கிலாந்து போட்டிக்கு முன்னர் 47 விக்கெட்டுகளுடன் இருந்த மாலிங்க, இலங்கை அணியின் முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் சமிந்த வாஸினை (49) பின்தள்ளி நான்காவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

இதன்படி, உலகக் கிண்ணத்தில் அதிகூடிய விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள இலங்கை அணியின் இரண்டாவது வீரர் என்ற பெருமையையும் இவர் பெற்றுள்ளார். இலங்கை அணி சார்பில் அதிகூடிய உலகக் கிண்ண விக்கெட்டுகளை சுழல் பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரன் (68) கைப்பற்றியுள்ளார்.

இதேவேளை, உலகக் கிண்ணத்தில் மூன்றாவது அதிகூடிய விக்கெட்டினை கைப்பற்றுவதற்கு மாலிங்கவுக்கு இன்னும் 5 விக்கெட்டுகள் தேவைப்படுகிறது. மூன்றாவது இடத்தில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் வசீம் அக்ரம் (55) உள்ளார்.


இங்கிலாந்தை அதிகமுறை வீழ்த்திய பட்டியலில் இலங்கை

உலகக் கிண்ணங்களில் அதிகமுறை இங்கிலாந்து அணியை வீழ்த்திய அணிகளின் பட்டியலில் இலங்கை அணியும் இணைந்துகொண்டுள்ளது. நேற்றைய போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தியதன் மூலம் அந்த அணிக்கு எதிராக தங்களுடைய 5ஆவது வெற்றியை இலங்கை பதிவுசெய்துள்ளது.

இதற்கு முன்னர் அவுஸ்திரேலியா, பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் உலகக் கிண்ணத்தில் இங்கிலாந்து அணியை 5 தடவைகள் தோல்வியடையச் செய்துள்ளன.

Photos : Sri Lanka vs England | ICC Cricket World Cup 2019 – Match 27

ThePapare.com |21/06/2019 | Editing and re-using images without….


இங்கிலாந்துக்கு இலங்கை கொடுத்த அதிர்ச்சி

கடந்த 2015ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தின் பின்னர் இங்கிலாந்து அணி அடைய தவறிய மிகக்குறைந்த வெற்றியிலக்காக நேற்று இலங்கை அணி நிர்ணயித்திருந்த 232 என்ற வெற்றியிலக்கு பதிவாகியுள்ளது.

இதற்கு முன்னர் கடந்த 2016ஆம் ஆண்டு பங்களாதேஷ் அணிக்கு எதிராக மின்பூரில் நடைபெற்ற ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 239 ஓட்டங்களை அடையத் தவறியிருந்ததுடன், அதற்கு அடுத்தபடியாக இந்த ஆண்டு பிரிட்ஜ்டவுனில் நடைபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் 290 என்ற வெற்றியிலக்கை அடைய தவறியிருந்தது.

இந்த ஓட்ட எண்ணிக்கைகளை தவிர்த்து 300 ஓட்டங்களுக்கு குறைவாக நிர்ணயிக்ப்பட்ட அத்தனை வெற்றியிலக்குகளையும் இங்கிலாந்து அணி 2015ஆம் ஆண்டுக்கு பின்னர் அடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இவ்வாறான சாதனைகள் கொண்ட வெற்றியினை இலங்கை அணி பெற்றிருக்கும் நிலையில், தங்களுடைய அடுத்த போட்டியில் தென்னாபிரிக்க அணியை எதிர்வரும் 28ஆம் திகதி எதிர்கொள்ளவுள்ளது. குறித்தப் போட்டியில் இலங்கை அணி வெற்றிபெற்றால் அரையிறுதிக்கான வாய்ப்பை மேலும் அதிகரிக்க முடியும்.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<