தோல்விக்கான முழுப் பொறுப்பையும் ஏற்கும் ஹதுருசிங்க

644

சுற்றுலா இங்கிலாந்து அணிக்கு எதிராக கண்டி – பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தோல்வியடைந்த இலங்கை அணி, டெஸ்ட் தொடரை 2-0 என இழந்துள்ளது.

இந்த டெஸ்ட் தொடர் தோல்வியானது இலங்கை அணிக்கு இவ்வருடத்தின் முதல் டெஸ்ட் தொடர் தோல்வியென்பதுடன், இங்கிலாந்து அணிக்கு எதிராக 2001ம் ஆண்டுக்கு பின்னர் இலங்கையில் வைத்து பெற்ற முதல் டெஸ்ட் தொடர் தோல்வியாகவும் பதிவாகியது. முக்கியமாக, இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டு போட்டிகளிலும் இலங்கை அணிக்கு வெற்றி வாய்ப்புகள் இருந்தும், விடப்பட்டிருந்த சிறிய தவறுகள் காரணமாக தோல்விகளுக்கு முகங்கொடுத்திருந்தது.

18 வருடங்களின் பின் இலங்கையில் டெஸ்ட் தொடரை வென்ற இங்கிலாந்து

இலங்கை கிரிக்கெட் அணிக்கு எதிராக கண்டி – ..

இவ்வாறான நிலையில், இலங்கை அணி பெற்றுள்ள இந்த தோல்விகளுக்கான முழுப் பொறுப்பையும் தலைமை பயிற்றுவிப்பாளர் என்ற ரீதியில் ஏற்றுக்கொள்வதாக, சந்திக ஹதுருசிங்க ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார். இரண்டாவது டெஸ்ட் போட்டியின் பின்னர் நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில், இலங்கை அணியின் தோல்விகளுக்கு யார் பொறுப்பேற்றுக்கொள்வது என்ற கேள்வி முன்வைக்கப்பட்ட போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர்,

அணியின் தோல்விகளுக்கான முழுப் பொறுப்பையும் நான் தான் ஏற்றுக்கொள்ள வேண்டும். இறுதியாக நடைபெற்ற தென்னாபிரிக்க டெஸ்ட் தொடரை மிகவும் சிறந்த திறமைகளை வெளிப்படுத்தி 2-0 என நாம் கைப்பற்றினோம். இந்த தொடரின் இரண்டு போட்டிகளிலும் எமக்கு வெற்றிபெறும் வாய்ப்புகள் இருந்தன. எனினும், துரதிஷ்டவசமாக வெற்றிகளை தவறவிட்டோம்.

முக்கியமாக இரண்டு டெஸ்ட் போட்டிகளின் நாணய சுழற்சியில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றிருந்தது. இதுபோன்ற ஆடுகளங்களில் நாணய சுழற்சியின் முடிவுகள் எதிரணிக்கு சாதகமாகும் போது, எமக்கான வெற்றி வாய்ப்புகள் குறைவாகின்றன. இந்த தொடரை பொருத்தவரை நாம் மிகவும் பின்னடைவில் உள்ளோம் என்று நம்பவில்லை. இந்த தவறுகளை இலகுவாக திருத்திக்கொள்ள முடியும். விடப்பட்ட தவறுகளில் இருந்து நாம் கற்றுக்கொண்டு, அடுத்தடுத்த போட்டிகளில் விளையாடுவோமானால் நிச்சயமாக வெற்றிகளை பெற முடியும்

இதேவேளை, இந்தப் போட்டியை பொருத்தவரை துடுப்பாட்ட வீரர்களால் மாத்திரம் போட்டியின் முடிவு மாற்றப்பட்டது என்பதை விடவும், பந்துவீச்சில் எடுக்கப்பட்ட தீர்மானங்களும் போட்டியின் திசையை மாற்றிவிட்டது என்பதையும் ஹதுருசிங்க சுட்டிக்காட்டினார்.

துடுப்பாட்டம், பந்துவீச்சு ஆகிய இரண்டிலும் முடிவுகளை எடுக்கும் விதங்களில் தவறுகள் விடப்பட்டிருந்தன. முக்கியமாக, முதல் இன்னிங்ஸில் நாம் 9 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தோம். எனினும், இறுதி விக்கெட்டுக்காக 60 ஓட்டங்கள் இணைப்பாட்டமாக பெறப்பட்டது. குறித்த இணைப்பாட்டம் எம்மை ஏமாற்றத்துக்குள்ளாக்கியது.

இதேவேளை, இரண்டாவது இன்னிங்ஸிலும் நாம் எமது திட்டத்துக்கு ஏற்ப நகர்ந்திருந்தோம். எனினும், தொடர்ந்தும் எம்மால் அழுத்தங்களை கொடுக்க முடியவில்லை. இவ்வாறான விடயங்கள் எமது முடிவுகளை மாற்றுவதற்கான முக்கிய அம்சங்களாக மாறியிருந்தன. அத்துடன், இதுமாதிரியான தவறுகளே நாம் தொடர்ச்சியான வெற்றிகளை பெற்றுக்கொள்வதற்கும் இடையூறாக உள்ளன

பந்துவீச்சு பரிசோதனைக்காக பிரிஸ்பேன் செல்லும் அகில தனஞ்சய

பந்துவீச்சில் சந்தேகம் இருப்பதாக தெரிவிக்கப்பட்ட வீரர்களின் ….

அதேபோன்று, இலங்கை அணியின் களத்தடுப்பு மட்டமானது சர்வதேச கிரிக்கெட்டுக்கு ஏற்ப இல்லை என்பதை ஏற்றுக்கொண்ட ஹதுருசிங்க, இந்த விடயத்தில் அதிகமான கவனத்தை செலுத்த வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

மூன்று வகையான போட்டிகளிலும் களத்தடுப்பு மோசமாக உள்ளது என்பதை நான் முழுமையாக ஏற்றுக்கொள்கிறேன். வீரர்கள் சர்வதேச மட்டத்துக்கு ஏற்ற வகையில் களத்தடுப்பில் ஈடுபடவில்லை என்பது எமக்கு மிகப்பெரிய சவாலை ஏற்படுத்தியுள்ளது. அணி கட்டமைப்பில் உள்ள வீரர்களும் சிறந்த உடற்தகுதியுடனும், களத்தடுப்பை மெய்வல்லுனர் ரீதியிலும் மேற்கொள்ளும் அளவில் இல்லை.

போட்டியென்ற வகையில் துடுப்பாட்டம், பந்துவீச்சை விடவும் முதன்மையான விடயம் களத்தடுப்பு. அதனால், அணிக்குள் புதிய வீரர்களை தெரிவுசெய்யும் போது, களத்தடுப்பில் சிறப்பாக செயற்படக் கூடிய வீரர்களை தெரிவு செய்வதில் அதிகமான அக்கறை செலுத்தி வருகின்றோம்என்றார்.

இலங்கை அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இங்கிலாந்து அணி கைப்பற்றியுள்ளதுடன், மூன்றாவது போட்டி எதிர்வரும் 23ம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ளது.

இந்தப் போட்டியில், சந்தேகத்துக்குறிய முறையில் பந்து வீசுவதாக குறிப்பிடப்பட்டுள்ள அகில தன்னஜய விளையாடமாட்டார் என்பதுடன், அவர் பந்துவீச்சு பரிசோதனைக்காக பிரிஸ்பேன் செல்லவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.