சுற்றுலா பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகள் இடையிலான இரண்டாம் டெஸ்ட்டின் மூன்றாம் நாள் ஆட்ட நிறைவின்போது, துடுப்பாட்டத்தில் ஆதிக்கத்தை முழுமையாக பிரயோகித்த பங்களாதேஷ் அணி இலங்கையை  விட 75 ஓட்டங்களால் முன்னிலை பெற்றுள்ளது.

சந்திமாலின் சதத்துடன் மீண்ட இலங்கை : அபார ஆட்டத்தைக் காட்டிய பங்களாதேஷ் ஆரம்ப வீரர்கள்

போட்டியின் இரண்டாம் நாளான நேற்றைய நாளின் இறுதிப் பகுதியில் இலங்கைப் பந்து வீச்சாளர்களின் மூலம் அழுத்தத்திற்கு உட்பட்டிருந்த பங்களாதேஷ் அணி, முதல் இன்னிங்சிற்காக 5 விக்கெட்டுக்களை இழந்து 215 ஓட்டங்களினை பெற்றிருந்தவாறு இன்றைய நாள் ஆட்டத்தினை ஆரம்பித்தது.

களத்தில் நின்ற சகீப் அல் ஹஸன் (18), பங்களாதேஷ் அணித் தலைவர் முஸ்பிகுர் ரஹீம் (2) ஆகியோர் தமது அணி நேற்றைய நாளின் பிற்பகுதியில் விட்ட பிழைகளை சரிசெய்து பங்களாதேஷின் நூறாவது டெஸ்ட் போட்டிக்காக கடுமையாக உழைக்க தயாராகினர்.  

எதிரணியை விட தாம் பின்தங்கியிருக்கும் 124 ஓட்டங்களினை எட்ட போட்டியின் ஆரம்பத்தில் கவனமான முறையில் இலங்கை பந்து வீச்சாளர்களினை கையாண்டவாறு ஆடத் தொடங்கிய இருவரும், பொறுப்பாகச் செயற்பட்டு ஆறாவது விக்கெட்டிற்காக உறுதியான இணைப்பாட்டம் ஒன்றினை வழங்கினர்.

இலங்கை அணிக்கு, ரன் அவுட் முறையில் விக்கெட் பெறும் வாய்ப்பொன்று 77 ஆவது ஓவரில் கிட்டியிருந்த போதும், அது கைகூடியிருக்கவில்லை. நீண்ட நேரத் தேவையாக இருந்த இலங்கையின் இன்றைய நாளிற்கான விக்கெட்டினை 80 ஓவரின் பின்னர் எடுக்கப்பட்டிருந்த புதிய பந்தின் மூலம், சுரங்க லக்மால் பெற்றுக்கொண்டார்.  

இதனால், பங்களாதேஷின் ஆறாம் விக்கெட்டின் வலுவான இணைப்பாட்டம் 92 ஓட்டங்களுடன் முடிவுற்றது. லக்மாலின் பந்து வீச்சு மூலம் நேர்த்தியான முறையில் போல்ட் செய்யப்பட்ட எதிரணித் தலைவர் ரஹீம் தனது 17ஆவது டெஸ்ட் அரைச் சதத்துடன், மொத்தமாக 52 ஓட்டங்களினைப் பெற்று வெளியேறினார்.

இதனையடுத்து, இப்போட்டியின் மூலம் டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமாகும் மொசாதிக் ஹொசைனுடன் ஜோடி சேர்ந்த சகீப் அல் ஹஸன் அணியினை தான் பெற்ற அரைச் சதத்துடன் போட்டியின் மதிய போசணம் வரை மேலதிக விக்கெட் இழப்பின்றி, இலங்கை முதல் இன்னிங்சுற்காக பெற்றிருந்த ஓட்ட எண்ணிக்கையை நெருங்கச் செய்தார்.

பின்னர், சகீப் சதம் விளாசியதோடு, 7ஆவது விக்கெட்டுக்காக 131 ஓட்டங்கள் என்கிற அதிவலுவான இணைப்பாட்டத்தினையும் அறிமுக வீரர் ஹொசைன் உடன் இணைந்து பகிர்ந்து இலங்கை அணியினரை விட பங்களாதேஷ் முதலாம் இன்னிங்சில் முன்னேறுவதற்கு பெரும் பங்காற்றினார்.

போட்டியின் தேநீர் இடை வேளைக்கு சற்று முன்னதாக, லக்ஷன் சந்தகனினால் வீழ்த்தப்பட்ட சகீப் அல் ஹஸன், தனது ஐந்தாவது சர்வதேச டெஸ்ட் சதத்தினை பூர்த்தி செய்ததோடு, மொத்தமாக 159 பந்துகளினை எதிர்கொண்டு 10 பவுண்டரிகளுடன் 116 ஓட்டங்களினை பெற்றிருந்தார்.

இவ்வருட ஆரம்பத்தில் நியூசிலாந்திற்கு எதிராக இரட்டைச் சதம் விளாசியிருந்த ஹஸன், இப்போட்டியின் மூலம் பெற்ற சதம் இலங்கை அணிக்கு எதிராக சகீப் பெற்ற முதலாவது டெஸ்ட்  சதம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து கன்னி டெஸ்ட் போட்டியொன்றில் விளையாடும் வாய்ப்பினை பெற்றுக்கொண்ட மொசாதிக் ஹொசைன் தனது கன்னி  அரைச் சதத்துடன், பங்களாதேஷ் அணி 400 ஓட்டங்களினை தாண்டி வலுப்பெற்றவாறு போட்டியின் தேநீர் இடைவேளையினை எடுத்துக்கொண்டது.

அதனைத் தொடர்ந்து பந்தினை கையில் எடுத்த இலங்கை அணித் தலைவர் ஹேரத் 129 ஆவது ஓவரில், பங்களாதேஷின் 8ஆம் விக்கெட்டினை வீழ்த்தி தனது மற்றொரு சாதனையைப் பதிவு செய்தார்.  

இதனையடுத்து அதே ஓவரின் அடுத்த பந்தில் பங்களாதேஷ் அணியின் 9ஆவது விக்கெட்டாக, முஸ்தபிசுர் ரஹ்மானை வீழ்த்திய ஹேரத், தனது முதல்தர கிரிக்கெட் வாழ்க்கையில் 1000ஆவது விக்கெட்டினைப் பெற்றுக்கொண்டார். இதன்மூலம் இலங்கை சார்பாக 1000 முதல்தர விக்கெட்டுக்களை கைப்பற்றிய வீரர்கள் வரிசையில் இரண்டாம் நபராகவும் தனது பெயரினைப் பொறித்துக்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து, பங்களாதேஷ் அணியின் இறுதி விக்கெட்டினையும் ஹேரத் கைப்பற்ற, அவ்வணி தமது முதல் இன்னிங்சிற்காக, 134.1 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 467 ஓட்டங்களினைப் பெற்றுக்கொண்டது.  

இறுதியாக பங்களாதேஷ் அணியில் ஆட்டமிழந்த மொசாதிக் ஹூசைன், மொத்தமாக 155 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் 7 பவுண்டரிகள் உள்ளடங்களாக 75 ஓட்டங்களினைக் குவித்ததோடு தனது முதல் போட்டியின் மூலம் அணிக்கு நம்பிக்கை தரும் ஒரு வீரராகவும் மாறியிருக்கின்றார்.

சர்வதேச கிரிக்கெட் சபை தலைவர் சஷாங் மனோகர் திடிர் ராஜினாமா!

இலங்கை அணியின் பந்து வீச்சில் ஹட்ரிக் வாய்ப்பொன்றினை தவறவிட்டிருந்த ஹேரத் மற்றும் சந்தகன் ஆகியோர் தலா நான்கு விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்திருந்தனர். பங்களாதேஷில் பறிபோன மேலதிகமான இரு விக்கெட்டுக்களிலும் சுரங்க லக்மால் தனது பெயரினை பதித்தார்.

இதன்மூலம் தமது முதல் இன்னிங்ஸ் மூலம் 129 ஓட்டங்களால் முன்னிலை பெற்ற பங்களாதேஷ் வெளிநாட்டு மைதானம் ஒன்றில் தாம் எதிரணியை விட முதலாம் இன்னிங்சிற்காக முன்னிலை பெற்ற அதிக ஓட்டங்களினை இப்போட்டியின் மூலம் பெற்றுக்கொண்டு இலங்கை அணியின் இரண்டாம் இன்னிங்சில் களத்தடுப்பு செய்ய மைதானம் விரைந்தது.

இன்றைய நாளின் மூன்றாம் பாதியின் பிற்பகுதியில் தமது இரண்டாம் இன்னிங்சினை ஆரம்பித்த இலங்கை, போட்டியின் மூன்றாம் நாள் நிறைவில் 13 ஓவர்களிற்கு விக்கெட் இழப்பின்றி 54 ஓட்டங்களினைப் பெற்று நல்ல ஆரம்பத்தினை வெளிக்கொணர்ந்தது.

இலங்கையின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான, திமுத் கருணாரத்ன மற்றும் உபுல் தரங்க ஆகியோர் தலா 25 ஓட்டங்களினைப் பெற்றவாறு களத்தில் நிற்கின்றனர்.

போட்டியின் நான்காம் நாள் நாளை தொடரும்