ஆசிய ரக்பி சம்பியன்ஷிப் தொடரில் இன்றைய தினம் நடைபெற்ற ஐக்கிய அரபு இராச்சிய அணியுடனான போட்டியில், இலங்கை அணி 33-17 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றியீட்டி ஆசிய ரக்பி சம்பியன்ஷிப் டிவிசன் 1 சம்பியன் பட்டத்துக்கான வாய்ப்பினை தக்கவைத்துள்ளது. எனினும், துரதிஷ்டவசமாக எதிர்வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ள மலேசிய அணியுடனான தீர்மானம் மிக்க போட்டியில், காயம் காரணமாக தனுஷ்க ரஞ்சனை இலங்கை அணி இழந்துள்ளது.

ஸ்க்ரம்மின் தவறுகள் மற்றும் சரியான பந்து நகர்த்தல்கள் இல்லாமை என பல்வேறான தவறுகளுக்கு மத்தியில் முன்கள வீரர்கள் மற்றும் விங் நிலை வீரர் ரிச்சர்ட் தர்மபால ஆகியோரின் உத்வேகத்தினால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது இலங்கை அணி.  

ஆசிய ரக்பி சம்பியன்ஷிப் தொடரை வெற்றியுடன் ஆரம்பித்த இலங்கை அணி

விங் நிலை வீரர் ரிச்சர்ட் தர்மபாலவின் கடும் முயற்சியினால், முதல் பாதி நேரத்தில் ஒரு ட்ரையும் இரண்டாம் பாதி நேரத்தில் இன்னொரு ட்ரையும் பெறப்பட்டது.

போட்டியின் ஆரம்பம் முதலே இலங்கை அணி ஆதிக்கம் செலுத்தியிருந்தது. போட்டி ஆரம்பித்து ஒரு நிமிடத்திலேயே பாசில் மரிஜா புள்ளிகளைப் பதிவு செய்தார்.  ஐக்கிய அரபு இராச்சிய அணியின் தடுப்பை ஊடறுத்த திலின விஜேசிங்கவின் உதவியுடன் பாசில் மரிஜா முதலாவது ட்ரையை வைத்து இலங்கை அணியை முன்னிலைப்படுத்தினார். எனினும், கொன்வெர்சன் மூலம் மேலதிக புள்ளிகளை பெற்றுக்கொள்வற்கு திலின விஜேசிங்க தவறினார்.

அதனைத் தொடர்ந்து சில நிமிடங்களில் ஐக்கிய அரபு இராச்சிய அணியின் ஸ்டீவன்சன் புள்ளிகளைப் பெற்று ஆட்டத்தில் முதன் முறையாக அணியை முன்னிலைப்படுத்தினார். (இலங்கை 08-10 ஐக்கிய அரபு இராச்சியம்)

தனுஷ்கா ரஞ்சன் இலங்கை அணி சார்பாக இரண்டாவது ட்ரை வைத்தார். திலினா விஜேசிங்க கொன்வெர்சனை தவறாமல் உதைத்து இலங்கை அணியை முன்னிலைப்படுத்தினார். (இலங்கை 15-10 ஐக்கிய அரபு இராச்சியம்)

சில நிமிடங்களில் இலங்கைக்கு கிடைத்த வாய்ப்பொன்றை ட்ரையாக பதிவு செய்வதற்கு முயற்சித்த தனுஷ்க ரஞ்சன் உபாதைக்கு உள்ளானார். அதனால் அவருக்கு போட்டியிலிருந்து வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது.

முதல் பாதி: இலங்கை 18 (2T 1C 2P) – ஐக்கிய அரபு இராச்சியம் 17 (2T 2C 1P)

வெறும் ஒரு புள்ளியினால் மாத்திரம் முன்னிலை பெற்ற நிலையில், மேலும் புள்ளிகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் இலங்கை அணி இரண்டாம் பாதியில் களமிறங்கியது.

விங் நிலை வீரர்களை ஊடறுத்து கிடைக்கப்பெற்ற வாய்ப்பை பயன்படுத்திக்கொண்ட பாசில் மரிஜா மீண்டும் ஒரு ட்ரை வைத்தார். அதனையடுத்து திலின விஜேசிங்க கம்பங்களினுடனாக கொன்வெர்சனை குறிதவறாமல் உதைத்து மேலதிக 2 புள்ளிகளைப் பெற்றுக்கொடித்தார். (இலங்கை 25 -17 ஐக்கிய அரபு இராச்சியம்)

திறமைகளை வெளிக்காட்டவிருக்கும் இலங்கை ரக்பி அணியின் அறிமுக வீரர்கள்

புள்ளிகள் அடிப்படையில் முன்னிலை பெற்றிருந்த இலங்கை அணியை சவாலுக்கு உட்படுத்தும் வகையில் ஐக்கிய அரபு இராச்சிய அணி இரண்டாம் பாதி நேரத்தில் கடும் முயற்சிகளை மேற்கொண்டிருந்தது. எனினும், அபாரமாக செயற்பட்ட இலங்கை அணி எவ்விதமான புள்ளிகளையும் பெற்றுக்கொள்ள ஐக்கிய அரபு இராச்சிய அணிக்கு இடமளிக்கவில்லை.

அதிகளவிலான அழுத்தத்துக்கு உள்ளான ஐக்கிய அரபு இராச்சிய அணி ஓப் சைட் விளையாடியதால் இலங்கைக்கு பெனால்டி கிடைத்தது. கிடைத்த வாய்ப்பை திலின புள்ளிகளாக மாற்றியதன் மூலம் போனஸ் புள்ளிகளுடன் இலங்கை அணி வெற்றியீட்டியது. எனினும், இலங்கை அணியின் கவலை தனுஷ்க ரஞ்சனின் காயம் பற்றியதாகவே இருந்தது.

முழு நேரம்: இலங்கை 33 (4T 2C 3P)ஐக்கிய அரபு இராச்சியம் 17 (2T 2C 1P)

போட்டி குறித்து கருத்து தெரிவித்த பயிற்றுவிப்பாளர் பெரெட்டி வெறெபுலா, ”நாம் மேலும் சில விடயங்களை மேம்படுத்த வேண்டியுள்ளது. அத்துடன் ஸ்க்ரமையும் சற்று கூர்மைப்படுத்த வேண்டிய தேவையுள்ளது. அதற்காக சில திட்டங்களை செய்யவேண்டியுள்ளது. எதிர்வரும் சனிக்கிழமை(20) நடைபெறவுள்ள தீர்மானம் மிக்க போட்டியில், வலிமை மிக்க மலேசிய அணியை தகுந்த வியூகங்களுடன் எதிர்கொள்வோம்” என்று தெரிவித்தார்.